Published:Updated:

`தொழிற்சாலையிலிருந்து திருடிய மெத்தனால்...' - மாற்றுப் போதையால் கடலூரில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்

மெத்தனால்
மெத்தனால்

மது கிடைக்காததால், போதைக்காக மெத்தனால் அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. தினமும் மது குடித்துப் பழகியவர்கள், அதை மறக்க முடியாமல் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாயகிருஷ்ணன்
உயிரிழந்த மாயகிருஷ்ணன்

போதைக்காக, கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சானிடைஸரைக் குடித்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. அதனால் டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தபோதும், “ஏப்ரல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது” என்று அறிவித்தது தமிழக அரசு.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் போதைக்காக மெத்தனால் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது தமிழகம்.

கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், சிப்காட்டில் வேலை செய்யும் தனது நண்பர் குமரேசனிடம், அவர் பணிபுரியும் ரசாயனத் தொழிற்சாலையிலிருந்து மெத்தனால் எடுத்துவரும்படி கூறியிருக்கிறார். அதன்படி, 1 லிட்டர் மெத்தனாலை தொழிற்சாலை நிர்வாகத்துக்குத் தெரியாமல் எடுத்து வந்து சுந்தரராஜன் (எ) சுந்தரிடம் கொடுத்திருக்கிறார். அவர், தனது நண்பர்கள் சந்திரஹாசன், மாயகிருஷ்ணன், எழில்வாணன் ஆகியோருடன் அந்த மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்திருக்கிறார்கள்.

உயிரிழந்த சந்திரகாசு
உயிரிழந்த சந்திரகாசு

இந்நிலையில், குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாக மெத்தனாலில் தண்ணீர் கலந்த இந்த நான்கு பேரும், நேற்று முன்தினம் இரவு அருந்தியிருக்கிறார்கள். மறுநாள் காலையில், அதாவது நேற்று காலையில் சந்திரஹாசன் திடீரென ரத்த வாந்தி எடுக்க, அதிர்ந்து போன குடும்பத்தினர், அவரை உடனே கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரையடுத்து மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர் ஆகியோரும் ரத்த வாந்தியெடுத்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுந்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில், குமரேசனிடம் போலீஸ் விசாரணையை மேற்கொண்டபோதுதான் அவர்கள் மெத்தனால் அருந்தியது தெரியவந்தது.

அதையடுத்து, போதுமான பாதுகாப்பு இல்லாமல் மெத்தனாலைக் கையாண்டதாக சிப்காட்டில் செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில்தான், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுந்தர் மற்றும் மாயகிருஷ்ணன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு