Published:Updated:

சென்னை: மூன்று வயதுக் குழந்தையின் உயிரைப் பறித்த டி.வி! - செல்போனால் ஏற்பட்ட விபரீதம்

குழந்தை கவியரசு
குழந்தை கவியரசு

சென்னையை அடுத்த சேலையூரில், டி.வி-யின் அருகிலிருந்த செல்போனை எடுக்க முயன்ற மூன்று வயது குழந்தைமீது டி.வி விழுந்தது. இதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரத்தை அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மகன் கவியரசு (3). பாலாஜி வீட்டில், டி.வி வைக்கப்பட்டுள்ள இடத்தில் செல்போன் வைக்கப்படுவது வழக்கம். கவியரசுவின் கைக்கு எட்டும் தூரத்தில்தான் செல்போன் வைக்கப்பட்டிருக்கும். அதனால் அவன், செல்போனை எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறான். சம்பவத்தன்று கவியரசு, டி.வி அருகிலிருந்த செல்போனை எடுக்க முயன்றிருக்கிறான். செல்போன் சார்ஜரில் போடப்பட்டிருந்திருந்ததால், அதன் வொயர் டி.வி-யின் அடியில் சிக்கியிருந்திருக்கிறது. செல்போனை கவியரசு எடுத்தபோது அது வரவில்லை.

டிவி
டிவி

அதனால் செல்போனை எடுக்கும் ஆசையில் கவியரசு, வேகமாகப் பிடித்து இழுத்திருக்கிறான். அப்போது எதிர்பாராதவிதமாக டி.வி., கவியரசுமீது விழுந்தது. அதனால் கவியரசு கதறி அழுதுள்ளான். சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் கவியரசை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். டி.வி., கவியரசுவின் தலையில் விழுந்ததால் அவன் மயக்கமடைந்தான். மருத்துவமனையில் கவியரசுவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதைக் கேட்டு கவியரசுவின் பெற்றோர் கதறியழுதனர். இது குறித்து சேலையூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கவியரசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கவியரசு மரணம் குறித்து அவனின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது டி.வி விழுந்ததால் அவன் இறந்துவிட்டதாக போலீஸாரிடம் கவியரசுவின் பெற்றோர் கண்ணீர்மல்கக் கூறினர்.

குழந்தை கவியரசு
குழந்தை கவியரசு
சென்னை: `சாமி போட்டோக்களில் ரத்தம்!' - போலீஸ் இன்ஃபார்மரான வி.சி.க பிரமுகர் கொலை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நேற்று மாலை டி.வி அருகில் சார்ஜ் போட்டுவைத்திருந்த செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அந்தச் சத்தம் கேட்ட கவியரசு, ஓடிச் சென்று செல்போனை எடுக்க முயன்றிருக்கிறான். அப்போதுதான் டி.வி அவன்மீது விழுந்திருக்கிறது. இதில் காயமடைந்த கவியரசன் பரிதாபமாக உயிரிழந்தான். பிரேத பரிசோதனைக்குப் பிறகு கவியரசுவின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

டிவி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சேலையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு