Published:Updated:

குளித்தலை ஆசிரியை கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை!

Vikatan Correspondent
குளித்தலை ஆசிரியை கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை!
குளித்தலை ஆசிரியை கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை!
குளித்தலை ஆசிரியை கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை!

திருச்சி: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியை குளித்தலை மீனாட்சி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த ஆசிரியை மீனாட்சி, கடந்த 19-10-2004 ஆம் ஆண்டு மாயமானார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், சி.பி.சி.ஐ.டி விசாரணையில், ஆசிரியை மீனாட்சி வேலைக்கு செல்லும் வழியான பணிக்கம்பட்டியை அடுத்த வாழைத்தோப்பில் அவரது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் குளித்தலையை சேர்ந்த சண்முகவேல்(62), குமார் ஆகியோர் வேலைக்கு வரும் வழியில் மீனாட்சியை வழிமறித்து வாழைதோப்புக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை கொள்ளையடித்து ,அவரை புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து சண்முகவேல், குமார் ஆகியோர் கடந்த 4-7-2006ல் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குளித்தலை நீதிமன்றம், சண்முகவேல், குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சண்முகவேல் 5ம் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்கம்போல், நேற்று காலை 6 மணிக்கு சிறையில் உள்ள அனைத்து பிளாக்குகளின் கதவுகள் திறக்கப்பட்டு, கைதிகள் வெளியேற்றப்பட்டனர். கைதிகள் விளையாட்டு மற்றும் அன்றாட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு பின் சண்முகவேல் மாயமானார்.

இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் சண்முகவேலை தேடினர். அப்போது பிளாக் எண் 5ன் பின்புறம் உள்ள அரசமரத்தில் பெட்ஷீட்டால் தூக்கிட்டு சண்முக வேல் தொங்கிக்கொண்டிருந்தார். அவரது உடலை மீட்டு,  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைக்குள் பணியின்போது, கவனக்குறைவாக இருந்ததாக முதன்மை வார்டன் அனந்தகிரி, முதல்நிலை காவலர் ரகமத்கான் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சண்முகவேல் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.