Published:Updated:

தென் ஆப்பிரிக்காவில் மதுரையை சேர்ந்தவர் மர்ம மரணம்!

Vikatan Correspondent
தென் ஆப்பிரிக்காவில் மதுரையை சேர்ந்தவர் மர்ம மரணம்!
தென் ஆப்பிரிக்காவில் மதுரையை சேர்ந்தவர் மர்ம மரணம்!

மதுரை: தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு வேலைக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். தனது கணவனின் உடலை கேட்டு திருமங்கலத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
 

தென் ஆப்பிரிக்காவில் மதுரையை சேர்ந்தவர் மர்ம மரணம்!

இது குறித்து நம்மிடம் பேசிய இந்திராணியின் உறவினர்கள், "திருமங்கலம் அழகர்சாமி மகன் சுப்புராஜ். ஒன்பது வருடத்துக்கு முன் இந்திராணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் பையன் இருக்கிறான். ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். ஊரில் பல வேலைகள் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஐந்து வருடங்களுக்கு முன்பு எத்தியோப்பியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு சரியான ஊதியம் கிடைக்காததால், இடையில் ஊருக்கு வந்து கேரளாவில் வேலை பார்த்தார். அவருடைய நண்பர் மூலம் தென் ஆப்பிரிக்காவில் கோல்டன் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலையில் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. நேற்று அவர் எதேச்சையாக இறந்து விட்டதாக அங்கிருந்து தகவல் சொன்னார்கள். அங்கிருந்து அவர் உடலை கொண்டு வருவதற்கான வழி தெரியவில்லை. அதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்’’ என்றனர்.

இந்திராணி கூறுகையில், "நேற்று காலையில் வழக்கம்போல் சாதாரணமாகத்தான் பேசினார். அதற்கு பின் இப்படி ஒரு தகவல் வருகிறது. நானும் என் பிள்ளையும் இனி என்ன செய்வோம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனிடையே, தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுப்புராஜின் உடலை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்வதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

- செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து