Published:Updated:

`நேற்று முன்தினம்தான் தொற்று உறுதி; இன்று உயிரிழப்பு' -கேரளாவை சோகத்தில் மூழ்கடித்த 4 மாதக் குழந்தை

குழந்தை
குழந்தை ( மாதிரிப் படம் )

பிறந்ததில் இருந்தே குழந்தை இதயம் தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ கொரோனா இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடூர கொரோனா குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

ஏப்ரல் 19 அன்று, டெல்லியில் ஒன்றரை மாதக் குழந்தை COVID-19 காரணமாக இறந்தது. அதே நாளில், கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தெலங்கானாவில் 45 நாள் ஆண் குழந்தையும் இறந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா
கொரோனா
AP

இப்படி குழந்தைகளையும் கொரோனா தொற்று விடாத வண்ணம் பயத்தை ஏற்படுத்தி வந்தது. இந்தநிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி நகரைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. பிறந்ததில் இருந்தே குழந்தை இதயம் தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, நேற்றுமுன்தினம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனே கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துவந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, கொரோனா தாக்கி உயிரிழந்தது என்பதால் சுகாதாரத்துறை விதிகளின்படி குழந்தையின் இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது.

குழந்தை
குழந்தை
மாதிரிப் படம்

குழந்தைக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்ற விசாரணையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையின் பெற்றோருக்கு தொற்று இல்லாத நிலையில் குழந்தைக்கு மட்டும் எப்படி வந்தது என்ற குழப்பத்தால் அதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் மூலமாக குழந்தைக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோரின் சோதனை முடிவுகள் இன்று தெரிந்துவிடும். அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு