Published:Updated:

ராமநாதபுரம்: படகு கவிழ்ந்து 13 பேர் பலி

Vikatan Correspondent

ராமநாதபுரம், டிச.26,2010

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டணம் கிராமம் அருகே கடலுக்குள் சென்ற சுற்றுலா படகு மூழ்கியதில் பெண்கள், சிறார்கள் உள்பட 13 பேர் பலியாகினர். ##~~##

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை அருகே உள்ள கடற்கரை கிராமம் பெரியபட்டிணம். இந்த ஊரைச் சேர்ந்த சீனிஉருது என்பவரது குடும்பத்தினர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்காக வந்த அவரது உறவினர்கள் உள்பட 40 பேர் இன்று காலை அப்பாதீவுக்கு இரண்டு நாட்டுப்படகில் சென்றனர்.

ஒரு படகில் ஆண்களும், மற்றொரு படகில் குழந்தைகள், பெண்களும் சென்றுள்ளனர்.  சுமார் 6 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் சென்ற போது பெண்கள் பயணம் செய்த படகு திடீரென்று கடலில் மூழ்கியது. கடலில் நீரோட்டம், கடல் காற்று பலமாக வீசியதால் இந்த படகு கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் குறித்து மற்றொரு படகில் சென்றவர்கள் உடனடியாக கரையிலிருந்த மீனவர்களுக்கும், மாவட்ட காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

கரையிலிருந்து வந்த மீனவர்களும் சுமார் 20 விசைப் படகுகளில் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் 2 குழந்தைகள் உள்பட 11 பெண்களை மீனவர்கள் உயிருடன் மீட்டனர். 

இந்த சம்பவத்தில் கடலில் மூழ்கி 10 பேர் பெண்கள், 2 பேர் சிறுமிகள், 16 வயது சிறுவன் ஒருவன் ஆகியோர் பலியானதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதி, இந்திய கடல் எல்லைக்குள் உள்ளது. இனிவரும் காலங்களில் அரசிடம் தெரிவிக்காமல் இது போன்று சுற்றுலா செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்படுதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.