Published:Updated:

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு!

Vikatan Correspondent
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு!
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு!
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு!

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் பின்னடைவு ஏற்பட்டு வருவதால், 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு குறித்து இதுவரை யாரும் கைதும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, ராமஜெயத்தின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்பின்பும் இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கும் ஜூலை 24ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் பின்னடைவு ஏற்பட்டு வருவதால் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 145 பேரிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளனர். இதில், 10 பேர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளதாகவும், அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.