Published:Updated:

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!
அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா...

தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஜனாதிபதியாக விளங்கிய அவர், வளர்ச்சியையும், உத்வேகத்தையும் நோக்கி இளைஞர் சமுதாயத்தை செல்ல வைத்தவர். இந்த நாடு ஒரு சிறந்த மனிதர், தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, எளிமையும், பண்பும் மிகுந்த ஒரு நல்லவரை இழந்துவிட்டது.

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் அடிக்கடி வருகை தந்துள்ளார். அவரை நான் வரவேற்றும் உள்ளேன். அவரது சிறந்த பண்பும், அன்பும் அவருடன் என்னை மிகவும் நெருக்கமாக ஆக்கியது. அவரது மறைவு தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

முதல்வர் ஜெயலலிதா...

அப்துல்கலாம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழக மண்ணின் அன்புக்குரிய தலைமகனும், பாரதரத்னா விருது பெற்றவரும், அனைவராலும் ஈர்க்கப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானியும், நாட்டின் 11வது குடியரசுத் தலைவராகவும் விளங்கிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், திடீரென மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சுதந்திர இந்தியாவில் மக்களால் கவரப்பட்ட நபர்களில் மிகச்சிறந்தவராக கலாம் விளங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மிக மிக சாதாரணமான பின்னணியுடன், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். தனது விடாமுயற்சி, கடினமான உழைப்பு, சிறந்த அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.

இந்திய விண்வெளித் துறையிலும், அணு ஆயுதம், அணுசக்தித் திட்டங்களுக்கு அவரது அளப்பரிய பணி அனைவரும் அறிந்ததாகும். மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானியாக விளங்கிய அப்துல் கலாம், விண்வெளி தொழில்நுட்பத்திலும், அதுதொடர்பான ஆய்வுத் துறையிலும் இந்தியாவை உலக அரங்கில் பெருமை கொள்ளத்தக்க இடத்துக்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை மேம்படுத்தும் குழுவின் தலைவராக விளங்கினார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்துக்கும் தலைமை வகித்து பணியாற்றியவர். இந்திய மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் கலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும், மிகக் குறிப்பாக இளைஞர்களுக்காக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார். இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாகவும், இலட்சினையாகவும் விளங்கியவர். தனது எளிமையாலும், கருணையாலும் அனைவரையும் ஈர்த்தவர். மிகச்சிறப்பான தேச பற்றுக் கொண்டவராக விளங்கினார். அனைத்துக்கும் மேலாக நாட்டின் நலனில் அக்கறை செலுத்தியவர்.

தொழில்நுட்பத்தை அணிதிரண்டி அதன்மூலம், ஏழை-எளிய மக்களுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்க முடியும் என்ற சிந்தனையையே தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு இந்திய, தமிழக மக்களுடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்...

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

அப்துல் கலாம் மறைவுக்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் திடீர் மறைவு எய்திய செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் மண்ணில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, சோதனைகள் பல கடந்து மிகச்சிறந்த கல்விமானாக முன்னேறி வந்தவர்.

கல்லூரி பேராசியராக தன வாழ்வை தொடங்கி, இந்திய நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி சாதனைகள் பல புரிந்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைமை விஞ்ஞானியாய்பொறுப்பேற்று, அத்துறையில் மகத்தான  வரலாற்றை படைத்து இந்திய நாட்டின் புகழை உலக அரங்கின் உச்சிக்கே கொண்டு சென்றவர். எஸ்.எல்.வி. 3 ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி 1 என்ற ஏவுகணை துணைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதும், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெற்றி கண்ட போக்ஹ்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியபொறுப்பேற்று பணியாற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக உலகில் தலை நிமிர வைத்த அவரது சாதனை அனைத்தும் எதிர்கால வரலாறு போற்றும்.

அரசியலில் இணையாமல் விஞ்ஞான உலகையே சுற்றி வந்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அவரது அறிவு, நேர்மை, உழைப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துகாட்டாகும். தனது இறுதி நாள் வரை மிக எளிமையாக வாழ்ந்த அவர், கனவு காணுங்கள் என்ற அற்புதகருத்தோவியத்தை படைத்து இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி விளக்காய் திகழ்ந்தவர்.அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினர், விஞ்ஞான அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து மக்களின் துயரிலும் நான் பங்கேற்கிறேன். அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறி உள்ளார்.

அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

மு.க.ஸ்டாலின்...

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ''நேர்மை, எளிமை, அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையைப் பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது. அது மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம். ஏவுகணை மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அதைவிட முக்கியமானது. தொழில்நுட்பத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளால் உலகில் மிகவும் முன்னேறிவிட்ட ராணுவத்திற்கு இணையாக நம் ராணுவத்தை உயர்த்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. "எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையையும் தேடித் தந்தவர். ராமேஸ்வரத்தில் பிறந்து, கனவுகளுடன் வளர்ந்து இந்தியாவின் குடியரசுத் தலைவரான எளிமையான சிறந்த மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பெருமைகளை நம் நாடு நினைவில் வைத்திருப்பதோடு, அவருக்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

டாக்டர் கலாம் அவர்கள் தான் மட்டும் கனவு காணாமல் இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் "கனவு காணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை" என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று கூறி உள்ளார்.

வைகோ...

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''கடல் அலைகள் தாலாட்டும் இராமேஸ்வரத்தில் எளிய இஸ்லாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, அறிவியல் மேதையாக அவனியில் பேர் பெற்று, கோடானு கோடி மக்களின் ஏக்கக் கனவுகளை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக குடியரசுத் தலைவர் பதவி நாற்காலியில் அமர்ந்து, வளரும் இளம் தலைமுறையினர் விண்முட்டும் சாதனைகளைப் படைக்க வழிகாட்டிய அக்கினிச் சிறகுகளை தந்து ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த ஏந்தல் அப்துல் கலாம் மறைந்துவிட்டார்! தமிழர்களுக்கு புகழ் தந்த இதயத் துடிப்பு அடங்கிவிட்டது!
அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!
உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை விளக்கிய மணிவிளக்கு ஆவார் அவர். கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்தார். தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்தார் அப்பெருமகனார்.
வாழ்க்கைப் போராட்டத்திலும். சமூகப் போராட்டங்களிலும் எதிர்கொள்ள நேரும் தடைகளை ஆபத்துகளை நெஞ்சுறுதியோடு சந்திக்க தயாராகுங்கள்! “எல்லா நாளும் ஆயத்தமாகுங்கள்; அனைத்து நாட்களையும் சமமாகக் கருதுங்கள். நீ பட்டறையாக இருக்கும்போது உன் மீது விழும் அடிகளைத் தாங்கிக்கொள்; நீயே சம்மட்டியாக மாறும்போது உன் தாக்குதலைத் தொடங்கு” என்ற அப்து கலாம் அவர்களின் மணி வாசகங்கள் இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவர் உலகத்துக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான பொன்மொழியாகும்.
அவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு அவர் டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் நானும் பயணித்ததால், அவர் அமர்ந்துள்ள இடம் நோக்கிச் சென்று கைகூப்பி வணங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என் இருக்கைக்குத் திரும்பினேன். சில நிமிடங்கள் கழித்து என்னை அழைத்து, என்னைப் பாராட்டி நான்கு வரிகள் எழுதிய கவிதையை அவர் எனக்குத் தந்தார். மெய்மறந்துபோனனேன். இந்த மமாமனிதர் மனதில் அடியேனுக்கும் ஒரு இடமா! என திகைத்தேன்.
2002 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக யாரை வேட்பாளராக்குவது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை நடந்தபோது, அன்றைய தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களிடம், அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னவனும் அடியேன்தான். இரண்டாவது முறையும் அவரே குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற கருத்தை அண்ணா தி.மு.க., தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சி தலைவர்களிடம் இந்த எளியேன் முன்வைத்தேன். அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக சொல்லாததால் தான் வேட்பாளராகப் போட்டியிட மறுத்தார் அப்துல் கலாம்.
2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு அப்துல் கலாம் அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்மொழிந்த வாஜ்பாய் உள்ளிட்டவர்களோடு, நானும் ஒருவனாக முன்மொழிந்தேன்.
ஈழத் தமிழர் இனக்கொலை செய்த ராஜபக்சே 2014ல் இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் மாளிகை அசோகா அரங்கத்தில் நுழைந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை கரம் குலுக்கி வரவேற்றபோது, அதே வரிசையில் அமர்ந்திருந்த அப்துல் கலாம் அவர்கள் எந்த அசைவும் காட்டாமல் அவரை அலட்சியப்படுத்தி தமிழரின் தன்மானத்தை நிலைநாட்டிய உத்தமரன்றோ!
உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும் இந்த மண்ணும், கடலும், வானும் இருக்கும்வரை அவரது புகழும் நிலைத்திருக்கும்.
தமிழகம் உலகத்துக்குத் தந்த தவப்புதல்வனை இழந்து துயரத்தில் துடி துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்" என்று கூறி உள்ளார்.
அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!
தொ.திருமாவளவன்...

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்தவருமான அப்துல்கலாம் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதி வந்தவர் அவர். மாணவர்களுக்குப் பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்த கலாம் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றும்போதே உயிரிழந்துவிட்டார்.

செயற்கைக்கோள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியவர், அணுகுண்டு வெடிப்புச் சோதனையின் முதன்மைக் காரணியாகத் திகழ்ந்தவர் என்பவற்றை எல்லாம்விட மாணவர்களிடம், இளைஞர்களிடம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என்பதே அவரது பெருமை.

இராமேசுவரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து தமிழ்வழியில் பயின்று இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும் அறிவாற்றலும்தான் காரணம்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது ‘நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களுக்கும் அளிப்பது’ என்ற திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்தினார். அவரது பதவிக் காலத்துக்குப் பின் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதை மேம்படுத்திச் செயல்படுத்தப் போவதாகக் கூறினார்கள். பா.ஜ.க. பொறுப்பேற்றதும் அந்தத் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

நகரமயமாக்கத்தின் காரணமாக கிராமப்புறங்கள் மேலும் மேலும் புறக்கணிக்கப்பட்டு தேக்கத்தின், வளர்ச்சியின்மையின் உறைவிடங்களாக மாற்றப்படும் இன்றைய சூழலில், அப்துல்கலாம் ‘புரா’ திட்டத்தை இந்திய அரசு தேசியத் திட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவதே அவருக்கு இன்றைய ஆட்சியாளர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இளைஞர்களின் ஆற்றலில் நம்பிக்கைவைத்து இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக்க ஓய்வின்றி உழைத்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்" என்று கூறி உள்ளார்.
அப்துல்கலாம் மறைவு: தமிழக கவர்னர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்!
தே.மு.தி.க...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவரது இழப்பு, கலாமின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டும். இதனை தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு