Published:Updated:

விஷ்ணுபிரியா தற்கொலையும், பெண் காவலர்களின் உண்மை நிலையும்..

விகடன் விமர்சனக்குழு
விஷ்ணுபிரியா தற்கொலையும், பெண் காவலர்களின் உண்மை நிலையும்..
விஷ்ணுபிரியா தற்கொலையும், பெண் காவலர்களின் உண்மை நிலையும்..

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், கடந்த 18ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு 9 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்தக்கடிதத்தில் கோகுல்ராஜ் வழக்குக்கும் என்னுடைய தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் இப்போது பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
 

விஷ்ணுபிரியா தற்கொலையும், பெண் காவலர்களின் உண்மை நிலையும்..

திருச்செங்கோடு டி.எஸ்.பியாக விஷ்ணுபிரியா பொறுப்பேற்றப்பிறகு சவாலான வழக்காக கோகுல்ராஜ் மரணம் மாறியது. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய விஷ்ணுபிரியா திறம்பட செயல்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பிரஸர் வந்துள்ளன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்டுள்ளதை கோகுல்ராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டுள்ளார். விஷ்ணுபிரியாவின் தற்கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட கோகுல்ராஜின் தாயார், 'திறமையான அதிகாரியை இழந்து விட்டேன். என்னுடைய மகன் சாவுக்கும், விஷ்ணுபிரியா மேடம் சாவுக்குப்பின் மறைந்துள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வர வேண்டியது அரசின் பொறுப்பு' என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியிடம் தற்கொலை செய்வதற்கு முன்பு விஷ்ணுபிரியா போனில் பேசியுள்ளார். அப்போது எஸ்.பி லைனில் வருவதாக மகேஸ்வரியின் இணைப்பை துண்டித்துள்ளார். இதன்பிறகு அவர் தற்கொலை செய்து இருப்பதால் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்துள்ளார். இதை வெளியில் சொல்வதால் என்னுடைய வேலைப்பறி போனாலும் பரவாயில்லை என்று தைரியமாகவே ஓர் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.ஜி சங்கர், டி.எஸ்.பி. மகேஸ்வரியின் தகவல் அர்த்தமற்றது. ஏதோ உள்நோக்கத்தில் அவர் இதுபோன்ற தகவலை தெரிவித்துள்ளார் என்று விளக்கமளித்துள்ளார்.

விஷ்ணுபிரியாவின் குடும்பத்தில் அவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பி என்பதால் காவல்துறையில் அரங்கேறும் அனைத்தும் அவருக்கு சிறுவயது முதலே நன்றாக தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த கோணத்தில் பார்க்கும் போது உயரதிகாரிகள் டாச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

விஷ்ணுபிரியா தற்கொலையும், பெண் காவலர்களின் உண்மை நிலையும்..

காவல்துறை வட்டாரத்தில், விஷ்ணுபிரியா என்றாலே நேர்மையின் சிகரம் என்று சொல்கிறார்கள். இதன்காரணமாக அவர் பல்வேறு பிரச்னைகளையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதையெல்லாம் சமாளித்து சிறப்பாக செயல்பட்டு வந்த நேரத்தில் அவர் தற்கொலை முடிவு எடுத்துள்ளதற்கு வேறு ஏதோ முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியும் கூட போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரை மறைமுகமாக நிரூபணப்படுத்தியுள்ளார். இதையொட்டி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குப் பின்னால் பல மர்மங்களும் மறைந்து இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

"காவல்துறையில் உயரதிகாரிகள் உத்தரவுக்கு மற்றவர்கள் அடிப்பணிந்தே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதிலும் பெண்கள் என்றால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியதுள்ளது. இது காவல்துறை வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே நேரத்தில் பகிரங்கமாக வெளியில் வராத தகவல் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளை குற்றம் சுமத்த முடியாது. காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளை பெண் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பணியில் நீடிக்க முடியும் என்ற தர்மசங்கடமான நிலை உள்ளது" என்கிறது காவல்துறை வட்டாரம்.

விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், காவல்துறையினரின் பெண்கள் மனக்குமுறல்கள் கேட்கத்தொடங்கி இருக்கின்றன. பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் அத்தகைய துயரங்களுக்கு பிரியாவின் இறப்புக்கு பிறகாவது விடிவு காலம் பிறக்குமா என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் காவல்துறையில் பணியாற்றுபவர்களின் குறைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. உயரதிகாரி குறித்து தெரிவிக்கப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாறாக புகார் கொடுத்தவர்களே குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகுகிறது.

விஷ்ணுபிரியாவும் தன்னுடைய மனக்குமுறலை நிச்சயம் உறவினர்களிடமும், தோழிகளிடமும் பகிர்ந்து இருக்க வேண்டும். அந்த மனக்குமுறல் நிச்சயம் ஒருநாள் கேட்கும்.

-எஸ்.மகேஷ்