Published:Updated:

மாணவர்கள் முன் பேராசிரியை அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை: கோவையில் பரிதாபம்!

மாணவர்கள் முன் பேராசிரியை அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை: கோவையில் பரிதாபம்!
மாணவர்கள் முன் பேராசிரியை அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை: கோவையில் பரிதாபம்!
மாணவர்கள் முன் பேராசிரியை அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை: கோவையில் பரிதாபம்!

கோவை: மாணவர்கள் முன் வகுப்பறையில் பேராசிரியை அவமானப்படுத்தியதால் கோவை கல்லூரி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை செல்வபுரம் கல்லாமேடுவை சேர்ந்த சிவக்குமார்-புஷ்பலதா தம்பதியரின் மகள் கலைவாணி (17). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபின், சோகத்துடன் இருந்துள்ளார். 'என்ன... எப்போதும்போல் கலகலப்பாக இல்லாமல் ஏன் ‘டல்’லாக இருக்கிறாய்?' என்று அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். 'ஒன்றும் இல்லை!' என்று கூறிவிட்டு தனது அறைக்கு கலைவாணி சென்றுள்ளார்.

அதன்பின் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்ற மாணவி கலைவாணி, நள்ளிரவில் விஷம் குடித்த நிலையில் தனது அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது பெற்றோர் உடனடியாக கலைவாணியை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால்,  சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று காலை பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த கோவை செல்வபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதில், கலைவாணி படித்து வந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை பானுப்பிரியா, நேற்று முன்தினம் வகுப்பறையில் கலைவாணியை அழைத்து சக மாணவர்கள் முன் பாடம் நடத்தச் சொல்லி இருக்கிறார். அப்போது, சரியாக பாடம் நடத்தாத கலைவாணியை அந்த பேராசிரியை கேலியும், கிண்டலுமாக பேசி மட்டம் தட்டியுள்ளார். இதை பார்த்து வகுப்பறையில் இருந்த சக மாணவ-மாணவிகள் சிரித்துள்ளனர். இதில் அவமானமும், மன வேதனையும் அடைந்த கலைவாணி, வீடு திரும்பியதும் இரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும், பேராசிரியை பானுப்பிரியா மீது குற்றம்சாட்டி கலைவாணி 4 பக்க கடிதம் எழுதி வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில்  கலைவாணி, ''அன்புள்ள அம்மா. என்னை மன்னிச்சிடு அம்மா. நான் சாகறதால எனக்கு காதல் தோல்வின்னு நினைச்சுடாதீங்க. அந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சாகுற ஆளு நான் இல்ல. என்னோட சாவுக்கு காரணம் காலேஜ் வகுப்பு மேடம்தான். எல்லாத்துக்கும் முன்னாடி வெச்சு என்னை அவமானப்படுத்திட்டாங்க. ஒரு மாணவியை இப்படி பண்ணுனா என்ன நடக்கும் என்பதை காட்டுறதுக்கு எனக்கு வேற வழி தெரியல. மேடம் என்னைப்பத்தி கேலி பேசி சிரிச்சாங்க. மாணவர்களும் சிரிச்சாங்க. நான் செமினார் எடுத்ததை பார்த்தும் சிரிச்சாங்க.

என்னை வெளியே தனியா கூப்பிட்டு திட்டியிருந்தால்கூட தாங்கி இருப்பேன். அத்தனை பேருக்கும் முன்னாடி இப்படி பண்ணுவாங்களா அம்மா. எவ்வளவு கேவலமா இருந்தது தெரியுமா? என்னோட பர்சனல் விஷயத்தை எதுக்கு கேக்குறாங்க. என்னை அவமானப்படுத்தின அந்த மேடமுக்கு தண்டனை கொடுக்கணும். இத நீங்க பண்ணலனா நான் செத்ததுக்கு அர்த்தமே இல்லை" என்று எழுதி வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கோவை செல்வபுரம் போலீசார், கல்லூரி பேராசிரியை பானுப்பிரியா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.