Published:Updated:

`அந்த ஆள் எப்பவும் போதையிலதான் இருப்பான்!’- தூத்துக்குடியில் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

`எங்கள் மகன் நகுலனை மாலை முதல் காணவில்லை. எங்களுக்கு முத்தலாபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் உள்ளது' எனப் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர், சிறுவனின் பெற்றோர்.

சாலை மறியலில் ஊர்மக்கள்
சாலை மறியலில் ஊர்மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், ரேவதி ஆகியோரின் மகன் நகுலன் (வயது 6). நேற்று மாலை விளையாடச் சென்ற சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவன் நகுலன்
கொலை செய்யப்பட்ட சிறுவன் நகுலன்

அப்புகாரில், `எங்கள் மகன் நகுலனை மாலை முதல் காணவில்லை. எங்களுக்கு முத்தலாபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, போலீஸார் நேற்று இரவு அருள்ராஜைப் பிடித்து விசாரித்தனர். அதிக மது போதையில் இருந்த அவர், ``சிறுவன் நகுலனை அடித்துக் கொலை செய்துவிட்டு உடலை வீசினேன். ஆனால், சிறுவனின் உடல் எங்கு கிடக்கிறது என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை" எனக் கூறினாராம்.

சாலை மறியல்
சாலை மறியல்

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள், உடலைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள எம்.கோட்டூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே முத்துலாபுரம் காட்டுப்பகுதியில் சிறுவனின் உடலை போலீஸார் மீட்டனர்.

இதையடுத்து, சிறுவனின் உடலைத் தங்களுக்குக் காண்பிக்குமாறு கிராம மக்கள் கேட்டனர். அதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் நான்கு வழிச்சாலையில் போராட்டத்தைத் தொடங்கினர். சுமார் 2.30 மணி நேரப் போராட்டத்தால், நான்கு வழிச் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து சிறுவன் உடலை கிராம மக்களுக்கு போலீஸார் காண்பித்த பிறகே, மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

``அந்த அருள்ராஜ் எப்பவுமே குடிபோதையிலதான் இருப்பான். தெருவுல போறவங்க, வர்றவங்க எல்லார்கிட்டயும் ஏதாவது பேசி வம்பு இழுப்பான். சின்ன பிள்ளைகளா இருந்தா அடிப்பான். குடிக்கிறதுக்காகத் திருடவும் செய்வான்" என்கின்றனர் ஊர்மக்கள். இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம்,

சாலை மறியல்
சாலை மறியல்

``அருள்ராஜ் அதிகமான போதையில் உள்ளார். அதனால், சிறுவனை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து அவரால் கூற முடியவில்லை. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்" என்றனர்.