Published:Updated:

`போக வேண்டாம்னு எவ்வளவோ சொன்னோம் கேட்கல' - நீலகிரியில் பழங்குடி முதியவருக்கு நேர்ந்த சோகம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சின்னாளக்கோம்பை பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்ற பழங்குடி முதியவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை தாக்கி இறந்த முதியவர்
யானை தாக்கி இறந்த முதியவர்

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் மனித வன விலங்கு எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்திய அளவில் மனித வன விலங்கு எதிர்கொள்ளல் அதிகம் நடைபெறும் இடங்களில் ஒன்றாக நீலகிரி உள்ளது. உணவு, தண்ணீர் தேடி யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் மாவட்டத்தில் ஏதோ ஒரு பகுதியில் மனித வன விலங்கு எதிர்கொள்ளல் நடந்தேறி வருகிறது.

யானை தாக்கி இறந்த மாரிசெல்வம்
யானை தாக்கி இறந்த மாரிசெல்வம்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் சின்னாளக்கோம்பைப் பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 30 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, குரங்குமேடு உள்ளிட்ட பல இருளர் மற்றும் குறும்பர் பழங்குடி கிராமங்கள் உள்ளன. வனங்கள் நிறைந்த இந்தப் பகுதி நகரத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாது தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. நாள்தோறும் 12 கி.மீ தொலைவு நடந்தே சென்று வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி வேண்டி போராடி எந்தப் பயனும் இல்லாமல் விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர். எந்தவித வசதிகளும் இல்லை எனப் பலர் ஊரைக் காலி செய்து அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலைக்குச் சேர்ந்து விட்டனர். மீதம் உள்ள மக்களும் வெளியேறும் நிலையில் உள்ளனர்.

சடலத்தை மீட்க வந்த அதிகாரிகள்
சடலத்தை மீட்க வந்த அதிகாரிகள்
கே.அருண்

வழக்கமாக யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பைப் பகுதிகளில் உள்ளவர்கள் மாலை 6 மணிக்குள் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வெளி ஊர்களுக்குச் செல்பவர்கள் திரும்ப தாமதமானால் பில்லூர் மட்டம் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அல்லது மைதானத்தில் தீ மூட்டி இரவைக் கழித்துவிட்டு காலை வீட்டுக்குச் செல்வார்கள்.

இதற்கிடையே தான் சின்னாளக்கோம்பைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான மாரி செல்வம் பில்லூர் மட்டம் வந்துவிட்டு இரவு 7 மணிக்கு ஊருக்கு நடந்து சென்றார். ஊர் அருகில் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் சற்றும் எதிர் பாரமால் புதர் மறைவில் இருந்த யானை தாக்கி சம்பவ இடத்தில் பலியானர்.

யானை தாக்கி இறந்தவரின் உறவினர்கள்
யானை தாக்கி இறந்தவரின் உறவினர்கள்
கே.அருண்

இது குறித்து இறந்தவரின் உறவினர் ரங்கராஜன் கூறுகையில் “பழங்குடி மக்கள் யானை தாக்கி இறப்பது மிக அரிதானது. கடந்த மூன்று நாள்களாக இந்தப் பகுதியில் 5 யானைகள் உலவி வந்தன. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டி வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த வழியில் யாரும் நடப்பதில்லை. இறந்த மாரிசெல்வத்திடம் பலரும் போக வேண்டாம் என வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் சென்று யானை தாக்கி இறந்துள்ளார். பின்னர் மறுநாள் காலை எங்களுக்கு தகவல் தெரிந்தது. 15 மணி நேரம் போராடி தொட்டில் கட்டி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். சாலை வசதி இல்லாததால் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது” என்றார்.