Published:Updated:

'காவல்நிலைய விசாரணையே, 'காலி' செய்யத்தானா?' -கொதிகொதிக்கும் ஜவாஹிருல்லா

Vikatan Correspondent
'காவல்நிலைய விசாரணையே, 'காலி' செய்யத்தானா?' -கொதிகொதிக்கும் ஜவாஹிருல்லா
'காவல்நிலைய விசாரணையே, 'காலி' செய்யத்தானா?' -கொதிகொதிக்கும் ஜவாஹிருல்லா

காவல்நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஏர்வாடி இளைஞரின் மரணத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன இஸ்லாமிய அமைப்புகள். ' விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் போலீஸார்' எனக் கொந்தளிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமம். கடந்த வாரம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஷேக் அலாவுதீன் என்ற இளைஞர், பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, " தமிழகத்தில் காவல்துறையின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம், எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போலீஸ் எஸ்.ஐ காளிதாஸ் என்பவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒருகட்டத்தில், செய்யது முகமதுவைச் சுட்டுக் கொன்றுவிட்டார் எஸ்.ஐ காளிதாஸ்.

இப்படிப்பட்ட எஸ்.ஐக்கு மீண்டும் பணி வழங்கப்படும் வேலைகள் நடந்து வருகின்றன. இதேபோல், கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார். திருட்டு குற்றச் சம்பவத்திற்காக, கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். போலீஸாரின் கடுமையான தாக்குதலால் ஷேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும் போது,  திருப்புலானி அருகில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்ததாகக் கூறி,  காவல்துறை இக்கொலையை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளியைத் தாக்கவோ, படுகொலை செய்யவோ காவல்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லாதபோதும் இதுபோன்ற காவல் சாவுகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.

தேசியக் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில்தான் காவல்  சாவுகள் அதிக அளவில் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில், ஷேக் அலாவுதீன் படுகொலை குறித்து, குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். சேக் அலாவுதீன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற சட்ட விரோத மரணங்களைத் தடுக்க, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனக் கொந்தளித்தார்.

ஷேக் அலாவுதீன் மரணம் குறித்து நம்மிடம் பேசிய மாயாகுளம் பகுதி மக்கள், " அலாவுதீன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பது உண்மைதான். சம்பவம் நடப்பதற்கு முன்பு இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீஸார், கையில் இரும்பு பைப்புகளை வைத்துக் கொண்டு அலாவுதீனைத் தேடி வந்தனர். அவர் விழுந்து இறந்ததாகச் சொல்லப்படும் திருப்புல்லாணி பாலம் மிகச் சிறியது. அதில் இருந்து விழுந்து இறந்து போவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த பாலத்தில் இருந்து குதித்தாலும் இறங்கி ஓட முடியாத அளவுக்கு சேறு நிறைந்தது. கொலையை மறைப்பதற்காக போலீஸார் பொய் சொல்கின்றனர்" என்கின்றனர்.

-ஆ.விஜயானந்த்