Published:Updated:

சென்னை பொறியியல் கல்லூரிகளில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

Vikatan Correspondent
சென்னை பொறியியல் கல்லூரிகளில் அதிகரிக்கும் தற்கொலைகள்!
சென்னை பொறியியல் கல்லூரிகளில் அதிகரிக்கும் தற்கொலைகள்!
சென்னை பொறியியல் கல்லூரிகளில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவர் இன்று தற்கொலை  செய்து கொண்ட நிலையில், மூன்றே வாரத்தில் அடுத்தடுத்து சென்னையில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முதலாமாண்டு சிவில் பாடப் பிரிவு  மாணவியான தைரியலக்‌ஷ்மி,கோட்டூர்புரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருந்தபடி  கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று ஹாஸ்டலில் உள்ள தனது அறையில் தூக்குப் போட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

அண்மையில் நடைபெற்ற இன்டர்னெல் அசஸ்மெண்ட்டில் தைரியலக்‌ஷ்மி மிகக்குறைந்த  மதிப்பெண்கள் பெற்றதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்  தற்கொலை செய்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக  காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தைரியலக்‌ஷ்மி,பி.இ. படிப்பில் சேருவதற்கு முன்பு  வரை தமிழ் மீடியத்திலேயே பயின்றுள்ளார்.இந்நிலையில் பொறியியல் படிப்பு  ஆங்கிலத்தில் இருந்ததால் பாடங்களை புரிந்துகொள்ள அவர் மிகவும்  சிரமப்பட்டுள்ளார்.இதனால் அவர் 6 பாடங்களில் அரியர் வைத்திருந்ததாகவும்,இதன்  காரணமாக மன உளைச்சல் அதிகமாகி அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்  என்றும், இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி  மேலும் தெரிவித்தார்.

இப்பொழுது நடந்துள்ள தற்கொலையையும் சேர்த்து, சென்னை பொறியியல்  கல்லூரிகளில் கடந்த மூன்று வாரங்களில் இதுவரை மூன்று மாணவர்கள் தற்கொலை  செய்துகொண்டுள்ளனர்.

சென்னை ஐஐடி-யில் இரண்டாமாண்டு சிவில் பாடப் பிரிவில் பயின்று வந்த குல்தீப்  யாதவ் என்ற மாணவர் கடந்த எப்ரல் 9 ம் தேதியன்று, ஹாஸ்டல் அறையில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான்,அதாவது மார்ச் 29 ம் தேதியன்று சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மணிவண்ணன்  என்ற மாணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

இவர்கள் இருவருமே பல பாடங்கள் அரியர்ஸ் வைத்திருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல்  காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இவ்வாறு பாடம் புரியாமல் அல்ல்து அரியர்ஸ் காரணமாக மாணவர்கள் தற்கொலை  செய்யும் விபரீத முடிவு, பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.