Election bannerElection banner
Published:Updated:

153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா? உண்மை என்ன?

153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா? உண்மை என்ன?
153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா? உண்மை என்ன?

153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா? உண்மை என்ன?

டந்த சனிக்கிழமை அன்று, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. எல்.பி.ஜி கேஸ் உடன் சென்ற M.T.BW மேப்பிள் மற்றும் பெட்ரோலிய, எண்ணெய் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த M.T. டான் என்ற இரு கப்பல்களும் அதிகாலை நான்கு மணி அளவில் மோதியது. இதைத்தொடர்ந்து உடனே மீட்பு படைகள், மீட்பு பணியில் ஈடுபட்டு கப்பல்களை மீட்டனர். ஆனால் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலின் நீரோட்டத்தால் இந்த எண்ணெய் ஆனது எண்ணூர், பெசன்ட் நகர், மெரினா, திருவான்மியூர் வரையிலும் பரவியது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்க, அப்பகுதி மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர் மீனவர்கள். 

இதுகுறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகியோர் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பேச, அதற்கு பதில் அளித்தார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், 'எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்துள்ளதால் கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றன. ஒரு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவு பிரச்னையை சரி செய்ய பத்து நாட்கள் ஆகும். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என்றார். 

இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை விளக்கும் இன்ஃபோகிராஃபிக்ஸ்

இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் இறந்து ஒதுங்கியிருக்கும் மீன்கள் மற்றும் ஆமைகளால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருகிறது. 

இதுகுறித்துப் பேசிய கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் மாணவர்கள் (SSTCN) கூட்டமைப்பை சேர்ந்த அகிலா கூறும்போது, 'இந்த எண்ணெய்க் கசிவால் ஆமைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இதனால்தான் இறக்கிறது என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஜனவரி 30-ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 153 ஆமைகள் இறந்துள்ளன. அவை பெரும்பாலும் மீன்பிடி கப்பல்களின் வலைகளில் சிக்கிதான் இறந்துள்ளன. இந்த எண்ணெய் கசிவு நடப்பதற்கு முன்பாகவே இந்த மாதம் 150 ஆமைகள் வரை இறந்துள்ளன. எண்ணெய் கசிவிற்கு பின்பு 3 ஆமைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே ஆமைகள் எண்ணெய் கசிவினால்தான் இறந்தனவா என்பது ஆய்வின் மூலம்தான் தெரியவரும். 

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே தற்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். தற்போது நமது கடற்கரைகளில் இவை முட்டையிட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும். 

அக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் இவை இனப்பெருக்கம் செய்வதற்காக வரும். அப்போதுதான் அதிகமாக இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை நாம் காண்போம். இவற்றிற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான். ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன. தற்போது கடலின் மேல் படிந்துள்ள எண்ணெயால், இந்த ஆமைகளுக்கு நிச்சயம் ஆபத்துதான். இவை மேலே வரும்போது, அவற்றின் நுரையீரலின் உள்ளே எண்ணெய் செல்வதால், அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். இந்த எண்ணெய் அவற்றின் துடுப்புகள் மற்றும் கண்களில் படியும் போது அவற்றிற்கு நீந்துவதிலும் சிரமங்கள் ஏற்படும். உயிரிழந்த 3 ஆமைகளில் உடலிலும் இந்த எண்ணெயானது படிந்திருந்தது. இவை மட்டுமின்றி மீன்கள் மற்றும் நண்டுகளும் இந்த எண்ணெய் கசிவால் உயிரிழந்துள்ளன. 

கடலில் படிந்துள்ள எண்ணெயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சுப்ரஜா தாரிணி பேசும் போது, 'கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் இணைந்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எண்ணெய் மிதந்துவந்து கடலோரங்களில் தேங்கி வருகிறது. அவற்றை அகற்றி வருகிறோம். பாறை ஓரங்களில் எண்ணெய்க் கழிவுகள் குளம் போல, சேர்ந்து இருக்கிறது. இந்த தூய்மைப் படுத்தும் பணி நாளை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் தன்னார்வலர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால், இன்னும் விரைவாக நடக்கும்" என்றார். 

இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் அனைவரும் தலைமை செயலகத்தில் கூடி விவாதித்து வருவதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய கடலோர காவல்படை அதிகாரிகள், 'கடலில் கலந்திருக்கும் எண்ணெய் பற்றி ஆய்வகத்தில், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை கடலினை தூய்மைப்படுத்தும் பணியில் மூழுவீச்சில் இறங்கியிருக்கிறோம். பணிகள் எப்போது முடிவடையும் என்பது பற்றி தெரியவில்லை. காமராஜர் துறைமுகத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்து, எண்ணெய் கசிவு நடந்துள்ளது. சுமார் 100 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் அளவுக்கு எண்ணெய் ஆனது கடலில் பரவியுள்ளது' என்றனர்.

வருடந்தோறும் மீன்பிடிக் கப்பல்கள் மூலமாக ஆமைகள் இறந்துவருவது என்பதே அதிர்ச்சிக்குரிய விஷயம்தான். அதிலும் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு விபத்தின் மூலம் மற்ற கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் சமயம் அவற்றை விரைவாகவும், திறமையாகவும் கையாளும் அளவிற்கு அரசு இயந்திரங்கள் மேம்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

- ஞா.சுதாகர்.
படம்:தி.குமரகுருபரன்
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு