Published:Updated:

`துபாயில் இருந்து போடப்பட்ட பிளான்; ஹீட்டர் செயலிழப்பு?' - கேரளத்தை சோகத்தில் மூழ்கடித்த 8 மரணங்கள்

பிரவீன் குடும்பம்
பிரவீன் குடும்பம் ( manoramanews )

சம்பவத்தன்று இரவு தம்பதியின் ஒரு குழந்தை இவர்களுடனே தங்க இன்னொரு குழந்தை வேறு ஒரு ரூமில் தங்கியிருந்துள்ளது. இதனால் இன்னொரு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த செங்கோட்டுக்கோணம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் நாயர், அவரின் மனைவி சரண்யா, இவர்களுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கோழிக்கோடு அடுத்த குந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், அவரின் மனைவி இந்து மற்றும் 2 வயது மகன் ஆகியோர் நேபாள நாட்டின் டாமன் நகரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றவர்கள் மரணம் அடைந்தது கேரள மாநிலத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

ரிசார்ட்
ரிசார்ட்
manoramanews

மொத்தம் 15 பேர் கேரளாவிலிருந்து சமீபத்தில் நேபாளம் சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு இன்று ஊர் திரும்ப காத்திருந்தனர். இன்று விமானம் என்பதால் போகாரா பகுதியிலிருந்து டாமன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் டாமனில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். ஒரு அறையில் இறந்த பிரவீன் நாயர், அவரின் மனைவி சரண்யா, இவர்களுடைய மூன்று குழந்தைகள் மற்றும் குந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், அவரின் மனைவி இந்து, 2 வயது மகன் ஆகியோர் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்துள்ளனர்.

குடும்பத்தில் திடீர் மரணங்கள்!- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

காலையில் மற்றவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது இவர்கள் 8 பேரும் மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக ரிசார்ட் நிர்வாக உதவியுடன் போலீஸ் உதவியை நாட அவர்கள் 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் நேபாளத் தலைநகர் காத்மண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேபாள போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் தங்கியிருந்த ரூமில் குளிரைக் கட்டுப்படுத்துவதற்காக ஹீட்டர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஹீட்டர் செயலிழந்ததால் அதில் இருந்த கார்பன் மோனாக்சைடு வெளியேறி அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஹீட்டர் மூடப்பட்ட இடத்தில் பயன்படுத்தப்படும்போது, ​​வாயுக் கசிவு ஏற்பட்டு அறையில் ஒரு கார்பன் மோனாக்சைடு உருவாகி, விஷத்துக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றன.

ரஞ்சித் குடும்பம்
ரஞ்சித் குடும்பம்
manoramanews

அறையில் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டிருந்ததால் நச்சு வாயு வெளியேற வழி இல்லாமல் இருந்துள்ளது என்று ரிசார்ட் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு முன் இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்துள்ளதை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், முழுமையான விசாரணை முடியும் பட்சத்தில் உண்மை நிலவரங்கள் தெரியவரும். இறந்த தம்பதிகளில் ஒன்றான ரஞ்சித் - இந்து தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று இரவு தம்பதியின் ஒரு குழந்தை இவர்களுடனே தங்க இன்னொரு குழந்தை வேறு ஒரு ரூமில் தங்கியிருந்துள்ளது. இதனால் இன்னொரு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

Vikatan

துபாயிலிருந்து போட்ட பிளான்!

இறந்த பிரவீன் நாயர் துபாயில் வேலைபார்க்கிறார். மனைவி, குழந்தைகள் எனக் குடும்பத்துடன் அங்கு செட்டில் ஆகியிருந்தவர் அவரின் மனைவி சரண்யாவுக்கு கேரள கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படிக்க வாய்ப்பு வர சமீபத்தில்தான் மனைவி மற்றும் குழந்தைகளை கேரளாவுக்கு அழைத்துவந்துள்ளார். அதன்பின் மீண்டும் துபாய்க்குச் சென்றுள்ளார்.

பிரவீனின் மூன்று குழந்தைகளுமே ஜனவரியில் பிறந்தவர்கள். ஒரு சில நாள்கள் இடைவெளியில் இவர்கள் பிறந்த நாள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிசம்பர் மாதம் இவர்களுக்கு 10 வது திருமண நாள் முடிந்துள்ளது. இதைக் கொண்டாட இவர்கள் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி விடுமுறை நாளைக் கழிக்க நேபாளத்துக்கு சுற்றுலா செல்லலாம் என்று துபாயில் இருந்து முடிவு செய்து தன் நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தார் எனக் கூறப்படுகிறது. அதன்படி சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பும்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் உடலைக் கொண்டு செல்லும் காட்சி
இறந்தவர்கள் உடலைக் கொண்டு செல்லும் காட்சி
REUTERS

பிரவீனின் தந்தைக்கு சில நாள்களுக்கு முன்புதான் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த அதிர்ச்சிகரமான தகவல்களும் அவருக்கு சொல்லக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் பிரவீனின் இறப்பு குறித்த எந்தச் செய்தியும் அவருக்குத் தெரியவிடாமல் உறவினர்கள் பார்த்து வருகின்றனர். இந்த எட்டு மரணங்கள் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலை கொண்டுவரும் பணியில் கேரள அரசும் மத்திய அரசும் ஈடுபட்டுள்ளது.

`பள்ளி ரீ-யூனியனில் சந்திப்பு; தோழிக்காக கொல்லப்பட்ட மனைவி!’- கேரளா முதல் நெல்லை வரை பயணித்த சடலம்
பின் செல்ல