Published:Updated:

”முள்ளு மேல சேலை பட்டுருச்சு!” - நந்தினி வன்கொலையில் காவல்துறை கருத்து!

”முள்ளு மேல சேலை பட்டுருச்சு!” - நந்தினி வன்கொலையில் காவல்துறை கருத்து!
”முள்ளு மேல சேலை பட்டுருச்சு!” - நந்தினி வன்கொலையில் காவல்துறை கருத்து!

”முள்ளு மேல சேலை பட்டுருச்சு!” - நந்தினி வன்கொலையில் காவல்துறை கருத்து!

ந்தியாவில் மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்கிற கேள்வி ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு மரணத்துக்கான தீர்வு மற்றொரு மரணமாக இருக்கப்போவதில்லை. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவு. உச்சநீதிமன்றம் வரை அந்த தீர்ப்பு எடுத்துச் செல்லப்பட்டு அது ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டுத் திரும்புவதே பெரும்பாலும் அதிகம்.உச்சபட்ச தண்டனைக்கு மாற்றாக வேறு என்ன என்று சட்டம் யோசிக்கும் தருவாயில் சிலர் நழுவியும் விடுவது உண்டு. பரபரப்பாகப் பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கு தொடங்கி தர்மபுரி பேருந்து எரிப்புச் சம்பவம் என இதற்கான பல உதாரணங்கள் உண்டு. அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி போன்றவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளிலும் அப்படியான நிலை குற்றவாளிகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற தொடர் எண்ண ஓட்டம் மக்களிடம் இருக்கிறது. அப்படியென்றால் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு என்னதான் தண்டனை என்கிற கேள்வியுடன் தான் சிறுகடம்பூரில் இருக்கும் இறந்த நந்தினியின் வீட்டை நோக்கிய பயணம் தொடங்கியது.

”அலறியோடிய மக்கள், கதறி அழுத பெண் போலீஸ்!”

அரியலூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கிறது சிறுகடம்பூர். அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் நந்தினி வீட்டிற்குச் சென்றோம். போகும் வழி எங்கும் முந்திரிக்காடுகளும் இடையிடையே நிறைய தரைக் கிணறுகளும் தெரிந்தன. சற்று உள்ளடங்கிய நிலப்பகுதியில் அப்படித் தரையோடு தரையாக இருந்த ஒரு கிணற்றில்தான் இருபது நாட்களுக்கு முன்பு நந்தினி இறந்து மிதந்திருக்கிறார். அந்த இளைஞர் கூறும்போது,” நாங்கள் இந்த பகுதியில்தான் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவோம். ஆனால் பொங்கலுக்கு முந்தைய வாரம் தொடங்கியே கிணற்றிலிருந்து நாற்றம் வரத் தொடங்கியிருந்தது. நாய்தான் செத்துப் போயிருக்கிறது என்று நினைத்திருந்தோம். திடீரென 17ம் தேதியன்று போலீசார் அந்த பகுதியில் குவிந்தார்கள். மக்களும் அந்த பகுதிக்கு விரைந்தார்கள். கயிறு கட்டி கட்டிலை கிணற்றுக்குள் இறக்கிய போலீசார் நந்தினியின் உடலை கிணற்றிலிருந்து மேலே எடுத்தார்கள். உடல் குப்புறக் கிடந்த நிலையிலேயே மேலே எடுத்துவரப்பட்டது. நீரில் முழுகியிருந்ததால் முதுக்குப்புறம் முழுதும் தோல் அழன்றுவந்துவிடும் நிலையில் இருந்தது. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர்தான் முன்வந்து உடலைத் திருப்பிப் போட்டார். பிறப்புறுப்பில் புழு வந்துவிட்டிருந்தது. மார்பகங்களில் ஆயுதம் கொண்டு கீரியது போல் ரத்தம் ஒழுகிய நிலையில் காய்ந்திருந்தது. வாயில் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தது. முகம் ஒன்றுமே தெரியாத அளவிற்கு உருவம் சிதைந்திருந்தது.இதனைப் பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். அங்கே சுற்றி இருந்த பெண் போலீஸ் அத்தனை பேரும் கதறி அழத் தொடங்கினார்கள். ஏதோ சிங்கம் ஒன்று வேட்டையாடியது போல இருந்தது உடல். நந்தினியின் பெரியம்மா மாரில் அடித்துக் கொண்டு சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்து “எம் பொண்ண இப்படி பண்ணிட்டீங்களேடா!” என்று கதறி அழுதது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என்கிறார் அவர்.

உண்மையில் நடந்தது என்ன?

மணிகண்டனுக்கும் நந்தினிக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாகப் பழக்கம் இருந்திருக்கிறது என்கிறார் அவர். ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்பு அரியலூரில் சித்தாள் வேலைக்குச் சென்ற இடத்தில்தான் மணிகண்டனுக்கும் நந்தினிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள் வேறு சிலர். மணிகண்டனுக்கு அதே பகுதியில் ரோடு காண்ட்ராக்ட் கம்பெனியில் வேலை. இந்துமுன்னணி கட்சி செயற்பாட்டாளரும் கூட. திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்த அதே மணிகண்டன்தான் நந்தினியின் வயிற்றில் குழந்தை உருவானதும் சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி முதலில் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். ஆனால் நந்தினி தான் வீட்டை விட்டு வந்துவிட்டதாகக் கூற அதற்குப் பிறகுதான் இத்தனை கோரமும் அறங்கேறியுள்ளது.

சரியாக 29 டிசம்பர்’16 அன்று இரவு தன் வீட்டை விட்டு வெளியேறிய நந்தினியை கீழ்மாளிகையில் உள்ள தனது மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் மணிகண்டன். அங்கே அடைத்துவைக்கப்பட்டிருந்த நந்தினியை மணிகண்டனின் நண்பர்களான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் வெற்றிச்செல்வன் ஆகியோர் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் பயந்துபோன  நந்தினி தனது தோழியான தேவிக்கு தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. நந்தினியும் மணிகண்டனுக்கும் பழக்கம் இருந்தது தெரிந்த ஒரே நபர். மணிகண்டனின் வீட்டில் இருப்பதாகவும் தன்னை யார் யாரோ வந்து பார்த்துவிட்டுச் சென்றதாகவும் தேவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் மணிகண்டன் தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார் என்று தெரியாத தேவியோ இதனை அவருக்கே அழைத்துக் கூற அதற்கடுத்துதான் அனைத்து விபரீதங்களும் அரங்கேறியிருக்கின்றன. நந்தினியைப் பற்றி அவதூறு பரப்பவே அவளை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக மணிகண்டன் தெரிவித்தான் என்று கூறப்படுகிறது.

”மணிகண்டன் நந்தினியக் கட்டிக்கமுடியாதுன்னு சொன்னதுக்கான ஒரே காரணம் சாதிதான். சென்னை மாதிரி ஊர்பக்கமெல்லாம் இது பெரிய பிரச்னை கிடையாதுங்க. ஆனா எங்க பக்கமெல்லாம் இதுதான் முக்கியப் பிரச்னையே. எங்களைப் பார்த்தாலே அவங்களுக்குப் பிடிக்காது. மேல்சாதிப் பொண்ண காதலிக்கவே கீழ்சாதிப் பையன் பயப்படுவான். அதுவே கீழ்சாதி பொண்ணா இருந்தா மேல்சாதி ஆம்பளைங்க அப்படி யோசிக்க மாட்டாங்க”, என்கிறார் அந்த இளைஞர்.

நந்தினி இல்லாத வீடு கேட்கும் நீதி!  

சம்பவம் நிகழ்ந்த அந்தக் கிணற்றிலிருந்து அரைமணி நேரப் பயணத்தில் இருக்கிறது சிறுகடம்பூர், அங்கே சாதி ஆதிக்கம், கட்சிகளின் ஆதிக்கம், ஊர் தலைக்கட்டுகளின் ஆதிக்கம் என ஆதிக்கங்களுக்கு நடுவே ஒடுங்கி இருக்கிறது நந்தினி வீடு இருக்கும் பகுதி.  தங்கள் தலைவர்களின் படம் பெரியதாகவும் நந்தினியின் படம் சிறியதாகவும் தாங்கிய கட்சி பேனர்கள் அந்த வீட்டைச் சுற்றி ஆக்கிரமித்து இருக்கின்றன. எந்நேரமும் ஏதோ ஒரு அமைப்பு அல்லது ஏதோ ஒரு கட்சி அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.நந்தினியின் அம்மா, பெரியம்மா, பாட்டி, தங்கை, அக்கா, தம்பி, அக்காவின் பிள்ளைகள் என வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அழுகை வற்றி சோகம் தனிந்து தற்போது நீதி என்னும் அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருப்பது அவர்களது பேச்சில் தெரிகிறது.16 வயதில் தன் பேத்தியை இப்படியொரு கொடூரத்திற்கு பறிகொடுத்த சோகம் முகத்தில் அப்பிக்கிடக்க அமர்ந்திருந்தார் நந்தினியின் பாட்டி, “என் புள்ளைய கொன்னவங்களுக்கு எப்படியாச்சும் தண்டனை வாங்கிக் கொடுத்திருங்கம்மா” என்று கூறும்போது சுருக்கம் விழுந்த கண்கள் கலங்கிக் கிடக்கின்றன.

மணிகண்டனின் காதல் உண்மையாக இருந்து, நந்தினி ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால்,  பத்து வருடத்திற்குப் பிறகு நாம் பார்த்திருக்கக் கூடிய நந்தினி  இப்படித்தான் இருந்திருப்பாள் என்பதுபோல இருக்கிறார் அவரது அக்கா, ”படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு போறேனு சொன்னதும் நாங்கதான் சம்மதிச்சோம்.பக்கத்து தெருவுல அந்த தேவி பொண்ணு கூடதான் வேலைக்கு போவா. ஆனா தினம் வீட்டுக்கு வர 7 மணிக்கு மேல ஆனதுல வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டோம். அப்புறம் பக்கத்துலையே ஜவுளி கடைக்கு வேலைக்கு போனா. அப்போ காடுகரை பக்கம் பாத்து பேசிப்பாங்க போல. காணாமப் போன அன்னைக்கு கூட எங்களுக்கு இப்படியொரு சம்பவம் நடந்ததே தெரியாது. 30ம் தேதி எங்க பொண்ணை காணோம்னு ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போக இருந்தோம். அப்போ திடீர் ஒருத்தங்க எங்களுக்கு போன் செஞ்சு தமிழரசன் பேசறேன் உங்க பொண்ணு என் கூடதான் இருக்கானு சொல்லிட்டு போனை வெச்சிட்டாங்க. அப்போ வரைக்கும் அந்த நம்பர் மணிகண்டனோடதுன்னு எங்களுக்குத் தெரியாது. போலீஸில் புகாரில் தமிழரசன் என்று பேர் குறிப்பிட்டப்போ, உங்க பொண்ணை அப்படி யாரும் கடத்தலை. நீங்க பொண்ணு காணோம்னு மட்டும் புகார் குடுங்க” என்று டி.எஸ்.பி எழுதி வாங்கிக்கிட்டாரு. தமிழரசன் கடத்தலைனு அவருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலை. ஆனா மூன்று நாட்கள் கழிச்சு தேவியை கொஞ்சம் அதட்டி கேட்ட பிறகுதான் நந்தினிக்கு மணிகண்டனோட பழக்கம் இருந்தது தெரிஞ்சது. உடனே போலீஸிடம் சென்று மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டோம். ஆனா அவங்க மெதுவாதான் செயல்பட்டாங்க. 17ம் தேதி என் தங்கையுடைய உடலை வெளியே எடுத்து பரிசோதனை செய்தவங்க அவ இறந்து பத்து நாட்கள் ஆகியிருக்கும்னு சொன்னாங்க.  ஒருவேளை நாங்க புகார் கொடுத்த அன்றே செயல்பட்டிருந்தா கூட நந்தினியை காப்பாற்றியிருக்கலாம்” என்றார் நந்தினியின் அக்கா.

”முள்ளு மேல சேலை பட்டுருச்சி”

உடனிருந்த இளைஞரோ, “நாங்க புகார் கொடுக்க போனப்போ போலீஸ் புகாரை வாங்கிக்காம முள்ளு மேல சேலை பட்டிருச்சி, பாத்துதான் எடுக்கணும்னு” சொன்னாங்க.நந்தினியோட சாவுக்கு அவ மணிகண்டன் மேல வெச்ச நம்பிக்கைதான் முக்கியக் காரணம். ஆனால் அதைவிட முக்கியக் காரணம் போலீசாரோட அலட்சியப் போக்கு”, என்கிறார். குற்றவாளிகளை சிறைக்குச் சென்று பார்த்தவர்களில் சிலர், அவர்கள் தோள் மேல் கை போட்டுக் கொண்டு உல்லாசமாகச் சுற்றித் திரிவதாகக் கூறினார்கள்.

தற்போது நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான சாம்பிள்கள் ஹைதராபாத் சென்றுள்ளதாகவும், கரு எதுவும் வெளியே எடுத்து எரிக்கப்படவில்லை ஆனால் உள்ளங்கையடக்கத்தில் சிசு ஒன்று நந்தினி வயிற்றில் இருந்ததற்கான தடயங்கள் இருந்தது உறுதிபடுத்தபட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியில் காவலுக்கு இருந்த போலீஸ் ஒருவர் கூறினார்.

நந்தினிக்கு இப்படியொரு சம்பவம் நேர்ந்ததால் அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற பெண்களும் தற்போது வெளியூர் சென்று படித்துவர பயந்து வீட்டிலேயே ஒடுங்கிக் கிடக்கிறார்கள். விளையாடும் சிறு பிள்ளைகள் கூட,”எங்க அக்காவ கொன்னவங்க,எங்க வீட்டுக்கு வந்துடுவாங்கனு பயமா இருக்கு!” என்கின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக அந்தப் பகுதி மக்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்திருக்கிறது இந்தச் சம்பவம்.

வீட்டுவாசலில் வைக்கப்பட்டிருக்கும் நந்தினியின் புகைப்படம் நம்மிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கின்றன. நம்மை வேறெதுவும் சிந்திக்கச் செய்துவிடாதபடியான கேள்விகள் அவை. மீண்டும் கேட்கிறேன்,நந்தினி துடித்துக் கதறி இறந்த நொடியில் அவளுக்கு ஏற்பட்ட வலிகளுக்கு என்ன வகையில் நியாயம் சொல்லப்போகின்றது நமது அரசியலமைப்பும் அதன் சட்டங்களும்.

-ஐஷ்வர்யா

அடுத்த கட்டுரைக்கு