Published:Updated:

‘‘சாகுற வரைக்கும் உழைச்சுதான் சாப்பிடணும்!’’ - 75 வயது சரஸ்வதி பாட்டியின் அசரடிக்கும் உழைப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘சாகுற வரைக்கும் உழைச்சுதான் சாப்பிடணும்!’’ - 75 வயது சரஸ்வதி பாட்டியின் அசரடிக்கும் உழைப்பு
‘‘சாகுற வரைக்கும் உழைச்சுதான் சாப்பிடணும்!’’ - 75 வயது சரஸ்வதி பாட்டியின் அசரடிக்கும் உழைப்பு

‘‘சாகுற வரைக்கும் உழைச்சுதான் சாப்பிடணும்!’’ - 75 வயது சரஸ்வதி பாட்டியின் அசரடிக்கும் உழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 27-ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், வேறு கல்லூரியில் உள்ள படிப்புகள் குறித்த கையேட்டை கல்லூரிக்குள் போவோர், வருவோரிடம் பலர் இலவசமாக வழங்குவது நாம் அறிந்ததே. அந்த வகையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் வாங்கச் சென்றவர்கள் சரஸ்வதி பாட்டியை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். 

வயதான காலத்திலும் கம்பீரமான குரலில், ''ஆல் த பெஸ்ட் கண்ணுங்களா! நல்லா படிங்க. டாக்டருக்குப் படிச்சு, என்னை மாதிரி முடியாத வயசாவனவங்க வந்தா இலவசமாகச் சேவை செய்யுங்கப்பா'' என எனர்ஜி வார்த்தைகளால் மாணவர்களை உற்சாகமூட்டி, கையேடுகளை வழங்கி, கவனம் ஈர்க்கிறார்.

உடலில் தெம்பு இருந்தும் அப்பா சம்பாத்தியத்தில் வாழ ஆசைப்படுபவர்கள் மத்தியில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சுறுசுறுப்பாக உழைத்துவருகிறார் சரஸ்வதி பாட்டி. ''இவ்வளவு வயசான காலத்திலேயும் காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் சளைக்காமல் கையேடுகளைத் தந்துட்டிருக்கீங்களே கஷ்டமா இல்லியா பாட்டி’' எனக் கேட்டோம்.

‘‘எனக்கு இப்போ 75 வயசாகுது. ஒரு பையன் இருக்கான். வேலைக்குப் போய் அவன் லெவலுக்கு குடும்பத்தைக் கவனிச்சுக்கிறான். 'என்னோடு வந்து இரும்மா'னு கூப்பிடறான். ஆனால், நமக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு. எதுக்கு, மத்தவங்களுக்கு பாரமா இருக்கணும்னு நினைக்கிறேன். குச்சிப் பிடிச்சு நடந்தாலும் தெம்பாதான் இருக்கேன். என் வேலைகளை நானே பார்த்துக்கிறேன். அதனால், உசிரு இருக்குற வரைக்கும் உழைச்சுச் சாப்பிடுவேன்’’ என்கிற சரஸ்வதி பாட்டியின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை. 

இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ''என் வூட்டுக்காரு ஊரு சிவகாசி. கல்யாணம் முடிஞ்சதும் சிவகாசிக்குப் போயிட்டோம். அங்கே தீப்பெட்டி கம்பெனியில் வேலை பாத்துட்டிருந்தாரு. நான் அப்பவே எஸ்எஸ்எல்சி., பாஸ். எங்க வூட்டுலேயே நான்தான் அதிகம் படிச்சவள். ஆனால், என்ன பிரயோஜனம்? படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டேன். அந்தக் காலத்துல பொட்டப் பிள்ளைங்களை ரொம்பப் படிக்கவைக்க மாட்டாங்க. எட்டாங் கிளாஸ் படிச்சதும் நிறுத்திடுவாங்க. நான் அழுது, அடம்பிடிச்சுதான் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். கல்யாணம் பண்ணிவெச்சதும், 'பொம்பளைங்க வேலைக்கெல்லாம் போகக் கூடாது வீட்டிலேயே இரு'னு அவர் சொல்லிட்டாரு. அப்போ எனக்கும் புத்தி இல்லாமப் போயிருச்சு. கொஞ்சம் யோசிச்சிருந்தா, எப்படியாச்சும் சண்டைப் பிடிச்சு, அழுது ஒரு வேலைக்குப் போயிருப்பேன். ஏன்னா, அப்போ எல்லாம் அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும். ஒரு வேலையில் சேந்திருந்தா இப்போ வரைக்கும் பென்ஷன் வந்திருக்கும்’’ எனப் பெருமூச்சுடன் சில நொடிகள் நிறுத்திவிட்டு தொடர்கிறார். 

‘ஆனாலும், என் வூட்டுக்காரு கொண்டுவரும் சம்பளத்தில் குடும்பம் நடத்தி, நல்லா இருந்தோம். 91 வயசில் அவர் தவறிட்டாரு. 'நம்ம சொந்த பந்தங்க எல்லாம் சென்னையிலதான் இருக்காங்க'னு மகனோடு இங்கே வந்துட்டேன். அவனுக்குக் கல்யாணமாகி, ரெண்டு பிள்ளைகளோட நல்லா இருக்கான். எனக்குச் சும்மா இருக்கவே பிடிக்காது. கிடைக்கிற வேலைக்குப் போயிருவேன். டெய்லர் வேலைக்குப் போவேன். அவங்க சொல்ற மாதிரி தைச்சுத் தருவேன். இப்போ இந்தக் கையேட்டைக் கொடுக்க கூப்பிட்டாங்க. காலேஜ் புள்ளைங்களுக்கு நல்லது சொல்ற விஷயமாச்சேனு வந்தேன். தினம் 300 ரூபாய் தர்றாங்க. வேலை முடிச்சுட்டு மறுபடியும் தைக்க போயிருவேன். அய்யம்பாளையத்துல தனியா வீடு பிடிச்சு தங்கியிருக்கேன். காலையில் குளிச்சு, துவைச்சு, சமைச்சு எடுத்துட்டு வந்திருவேன். திருடறதும் அடுத்தவங்களை ஏமாத்தறதும்தான் தப்பு. உழைச்சு வாழ்றதுல எந்த வேலையா இருந்தாலும் தப்பில்லே’’ எனச் சொல்லிவிட்டு தனது பணியைத் தொடர்கிறார் அந்த மாபெரும் உழைப்பாளி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு