Published:Updated:

`திருட்டுப் பட்டம் கட்டிய தோழி..!' - நெல்லையில் குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த பெண்

சோகத்தில் கிராம மக்கள்
சோகத்தில் கிராம மக்கள்

தோழியே தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் மனம் உடைந்த பெண், தன்னுடைய குழந்தைக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

நெல்லை மாவட்டம் வல்லவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். அவரின் கணவர் திருமலைமுருகன், கடந்த இரு வருடங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதனால் வள்ளியம்மாள் தன்னுடைய மகள்களான மகாராசி (8), கனகலட்சுமி (5) ஆகியோரைச் சிரமப்பட்டு வளர்த்து வந்தார். 

வள்ளியம்மாள் வீட்டின் முன் உறவினர்கள்
வள்ளியம்மாள் வீட்டின் முன் உறவினர்கள்

கணவனை இழந்த வள்ளியம்மாள் அதே கிராமத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்து வந்தார். அவர் தோட்ட வேலைக்குச் செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆவுடைதங்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வள்ளியம்மாளும் ஆவுடைதங்கமும் ஒன்றாகவே விவசாயத் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆவுடைதங்கத்தின் வீட்டில் இருந்த ஆறரை சவரன் நகை சில தினங்களுக்கு முன்பு திருட்டு போயிருக்கிறது. 

``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

அதனால் அதிர்ச்சியடைந்த ஆவுடைதங்கம் இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், வள்ளியம்மாள் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் போலீஸார் வள்ளியம்மாளை அழைத்து விசாரித்துள்ளனர்.

தன்னுடன் அன்பு பாராட்டிப் பேசிவந்த ஆவுடையம்மாள் தன் நகைக்காகத் தன் மீது புகார் அளித்தது வள்ளியம்மாளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டதுடன் கைரேகை சோதனையும் நடத்தியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட அறை
தற்கொலை செய்துகொண்ட அறை

அதனால் மனம் உடைந்த நிலையில், யாருடனும் பேசாமல் இருந்துவந்த வள்ளியம்மாள் தன் இரு குழந்தைகளுடன் விஷம் அருந்த முடிவெடுத்திருக்கிறார். மகள்கள் மகராசிக்கும் கனகலட்சுமிக்கும் பூச்சி மருந்தைக் கொடுத்துள்ளார்.

இரண்டாவது மகள் கனகலட்சுமி விஷத்தைக் குடிக்க மறுத்து வெளியில் ஓடிச் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் விவரத்தைச் சொல்லி அழுதுள்ளார். அதனால் அருகில் வசிப்பவர்கள் வந்துள்ளனர். அதற்குள்ளாக விஷம் குடித்த குழந்தை மகராசி உயிரிழந்ததுடன், வள்ளியம்மாள் மயக்கிக் கிடந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தற்கொலை செய்துகொண்ட தாயும் மகளும்
தற்கொலை செய்துகொண்ட தாயும் மகளும்

வள்ளியம்மாளின் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு இழப்பீடாக சமீபத்தில் நான்கு லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதா அல்லது காவல்துறையினரின் விசாரணையால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை முடிவெடுத்தாரா என்பது பற்றி கிராம மக்கள் சோகத்துடன் விவாதித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு