Published:Updated:

`குழந்தைக்கு உணவு வாங்கக்கூட பணமில்லை’ -14 நாள்கள் நடந்து வந்த தொழிலாளியின் மரணத்தால் கலங்கும் மனைவி

இன்சாஃப் அலி குடும்பத்தினர்
இன்சாஃப் அலி குடும்பத்தினர்

``நான் அவரை இன்னும் பார்க்கவேயில்லை. நான் மத்கண்வாவிற்குச் செல்லும் முன்னரே அவரின் உடலை அரசாங்க ஊழியர்கள் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுவிட்டனர்” என்று கூறி சல்மா அழுதுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பல மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நாள் கணக்கில் நடந்தே செல்லும் அவலநிலைக்கும் இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், மும்பையிலிருந்து 14 நாள்கள் நடந்தே பயணம் செய்து உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்திக்குச் செல்ல முயன்ற இன்சாஃப் அலி தனது ஊரை அடைந்த சில மணிநேரங்களில் மரணமடைந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்

மும்பையில் கட்டடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர், இன்சாஃப் அலி. லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல வழியின்றி இருந்தவரிடம் பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. இதனால் தன் கையில் இருந்த கடைசி 5,000 ரூபாயை எடுத்துக்கொண்டு ஏப்ரல் 13-ம் தேதி தன் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்திருக்கிறார். பத்து பேருடன் இணைந்து இவரும் நடக்கத் தொடங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி வரை பாதிதூரம் நடந்தும் லாரிகளில் ஏறியும் வந்த அலி லாரி டிரைவர்களுக்கே 3,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளார். எஞ்சியிருந்த பணத்தில் தன் பசியைப் போக்க வெறும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டுமே அவரால் வாங்க முடிந்திருக்கிறது. அவ்வப்போது தன் மனைவி சல்மாவுக்கு போன் செய்து தான் வந்துகொண்டிருக்கும் இடம் பற்றிய தகவல்களையும் அலி தெரிவித்திருக்கிறார்.

ஜான்சியில் உடன் வந்தவர்கள் பிரிந்து போகவே இரவில் போலீஸாரிடம் சிக்கிய அலி அங்கேயே க்வாரன்டீனில் வைக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவரின் போன் ஆஃப் ஆனதால் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் சல்மா அறிந்திருக்கவில்லை.

`வேற வழிதெரியலை... எங்களை அமைதியா விட்டுருங்க!’ - சென்னையிலிருந்து 850 கி.மீ நடந்தே செல்லும் 14 பேர்

கடந்த திங்கள் அன்று சல்மாவுக்கு போன் செய்த அலி தான் மத்கண்வா கிராமத்தில் உள்ள தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி சல்மாவை அங்கு வரச்சொல்லியிருக்கிறார். ஆனால், சல்மா அங்கு செல்லும் முன்னரே இன்சாப் அலி மரணமடைந்துவிட்டார்.

``நான் அவரை இன்னும் பார்க்கவேயில்லை. நான் மத்கண்வாவிற்குச் செல்லும் முன்னரே அவரின் உடலை அரசாங்க ஊழியர்கள் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுவிட்டனர்” என்று கூறி சல்மா அழுதுள்ளார். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். பசியால் அழும் அச்சிறுவனுக்கு உணவளிக்கக்கூட தன்னிடம் பணமில்லை என உடைந்து போய் அழுதுள்ளார், சல்மா.

ஊரடங்கு
ஊரடங்கு

இதுதொடர்பாக பேசிய ஷ்ரவஸ்தி நகர எஸ்-பி அனூப் குமார் சிங், ``அலிக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிய அவரின் உடலில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அலியின் மரணத்துக்கான காரணம் இதுவரை புலப்படாத நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தால் மட்டுமே போஸ்ட்மார்ட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை ஷ்ரவஸ்தியில் நான்கு பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் வேலை செய்து அங்கு சிக்கித்தவிக்கும் உத்தரப்பிரதேச மக்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து வர அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உ.பி-யின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனாலும் சிலர் இப்படி கிராமங்கள் வழியாக உள்ளே வரமுயற்சிப்பதாகவும் அவர்களைப் போலீஸார் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1,400 கிலோமீட்டர்; 4,500 ரூபாய் சைக்கிள், சூரத் டு உ.பி - நம்பிக்கையுடன் பெடல் போடும் தொழிலாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு