பிரீமியம் ஸ்டோரி

பாரதி மணி என்றொரு சுவாரஸ்யமான தமிழர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் எனும் செய்தியை பெரும்பான்மைத் தமிழர்கள் அறியாமலேயே இந்தக் காலத்தேர் உருண்டு போகிறது. ஒருவேளை ‘தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சராக (பாபா) வருவாரே, அவர்தான்’ என்றால் கூடுதலாக மேலும் சிலர் அறியக் கூடும்.

காலம், பாரதி மணிக்கு அமைத்துக் கொடுத்த சந்தர்ப்பங்கள் நம்ப முடியாத காவியத் தன்மை வாய்ந்தவை. தென்கோடி குமரியில் இருந்து தனது 21 வயதில் டெல்லிக்குச் சென்றவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பியிராவிட்டால் அவை ஒன்றுகூடப் பதிவாகியிருக்காது.

ஒரு நாடக விழாவின் இறுதியில் நண்பர் ஒரு பெண்ணை அழைத்து வந்து, “இந்தப் பெண் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவி. இவருக்கு ஏதோ விசா பிரச்னையாம்! கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?” எனக் கேட்டவுடன், அப்பெண்ணை அழைத்துச் சென்று மூன்றாண்டு விசா நீட்டிப்பு செய்து தருகிறார். அந்தப் பெண், பின்னாளில் மியான்மரின் பிரதமர் ஆன நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சுகி.

காவிய வாழ்க்கை வாழ்ந்தவர்!

எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திராவின் தனிச்செயலாளர் அறையில் அமர்ந்திருக்கிறார். செயலாளரை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதாகத் திட்டம். ‘‘பிரதமர் ஒரு கோப்பில் கையொப்பம் இட்டவுடன்தான் வர முடியும்’’ எனச் சொல்ல, ‘‘என்ன பெரிய கையெழுத்து? நான் போடுகிறேன் பார்’’ என ஒரு பேப்பரில் பிரதமரின் கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போட, பின்னால் இருந்து அந்தப் பேப்பரைப் பிடுங்கிப் பார்க்கிறார் இந்திரா. ‘‘அட! அப்படியே என்னோட கையெழுத்தைப் போலவே இருக்கே! இனிமே நான் வெளியூர் போனால் மணியிடமே கையெழுத்தை வாங்கிடுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே!

திரைப்படங்களுக்கான தேசிய தேர்வுக் குழுவுடன் இருக்க நேர்கிறது. அந்த ஆண்டின் சிறந்த படமாக ஒரு வங்காளப் படத்தைத் தேர்வு செய்ததை அறிகிறார். அதே ஆண்டில் வெளிவந்து விருதுப் போட்டியில் கலந்துகொண்ட ‘செம்மீன்’ மலையாளத் திரைப் படம் அதைக் காட்டிலும் சிறந்தது என்பதை பாரதி மணி அறிவார். தேர்வுக் குழுத் தலைவர் ஒரு வங்காளி. அவரிடம் பேசிப் பயனில்லை. வெளியே வந்து பிரஸ் பீரோவின் தலைவரான தனது நண்பரை அழைக்கிறார்.

அவருக்கு மட்டும் ‘செம்மீன்’ படத்தையும், அந்த வங்காளப் படத்தையும் திரையிட ஏற்பாடு செய்து பார்க்க வைக்கிறார். அதற்குப் பிறகுதான் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள மொழித் திரைப்படங்களில் முதன்முதலாக மலையாளத் திரைப்படமான ‘செம்மீன்’ படத்துக்கு அந்த ஆண்டின் தேசிய விருது கிடைக்கிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையுமே அவர் தனது ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ தொகுப்பில் பதிவு செய்தி ருந்தாலும், அதில் பதிவாகாத பல சுவாரஸ்யமான விஷயங் களைத் தனிப் பேச்சில் எனக்குச் சொன்னது நான் பெற்ற பேறு.

சுதந்திர இந்தியாவின் வரலாற்று நாயகர்கள் அத்தனை பேருடனும் பேசிப் பழகிய ஓர் அற்புதமான மனிதருடன் நாமும் பழகி யுள்ளோம் எனும் அந்த உணர்வெழுச்சிக்கு ஈடில்லை.

போய் வாருங்கள் மணி சார்! உங்கள் வாழ்வனுபவங்கள் உயிர்ப்புடனே இங்கிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு