Published:Updated:

நண்பரின் திருமண பார்ட்டி; தொழிலாளிகளுக்கு அதிர்ச்சி!- அதிவேகத்தால் உயிரைவிட்ட சினிமா `ஹீரோ'

விபத்து
விபத்து

சம்பவம் அறிந்த போலீஸ், விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த மூவரின் பெயர் அஸ்வின், பாசில் ஜார்ஜ், நிதின் என்பது தெரியவந்தது.

கேரள மாநிலத்தில், இரண்டு நாள்களாகப் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை. அங்கு, தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனாவால் புதிய உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கொரோனாவைத் தாண்டிய சில உயிரிழப்புகள் அம்மாநிலத்தில் தொடர் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மத்திய அரசு பிறப்பித்துள்ள மூன்றாம் கட்ட லாக்டௌனை அம்மாநில அரசு கண்டிப்புடன் அமல்படுத்திவருகிறது. கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல் இருக்கின்றன. சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இப்படி வெறிச்சோடி காணப்படும் சாலைகளில் செல்லும் வாகனங்கள், அதிவேகத்தில் சென்று விபத்துகளைச் சந்திப்பது அங்கு சமீபகாலமாகவே அடிக்கடி நிகழ்ந்துவருகிறது.

பாசில் ஜார்ஜ்
பாசில் ஜார்ஜ்

சமீபத்தில், தொடுபுழா அருகே உள்ள முட்டம் பகுதியில் கார் விபத்து ஏற்பட்டதில் 8 வயது பெண் குழந்தை, அவரது தந்தை என இருவர் உயிரிழந்தனர். இதேபோல், ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டதில் நர்ஸ் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், கொச்சி மூவாட்டுப்புழா பகுதியில் வேறு மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் திடீரென்று ஒரு கார் அதிவேகத்தில் வந்து மோதியது. இதில், காரில் இருந்த ஐந்து பேரில் மூவர் பலியாகினர். மேலும், கட்டடத்தில் இருந்த தொழிலாளிகள் 2 பேர் காரில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த போலீஸ், விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த மூவரின் பெயர் அஸ்வின், பாசில் ஜார்ஜ், நிதின் என்பது தெரியவந்தது. இதில், பாசில் ஜார்ஜ் மலையாள சினிமாவில் நடித்துவருகிறார். இவர், சமீபத்தில் வெளிவந்த `பூவாளியும் குஞ்சாட்டம்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், மூவாட்டுப்புழா பகுதியில் பாசில் பிரபலமானார். இதற்கிடையே, நேற்று முன்தினம் நண்பர்களைச் சந்திருக்கிறார் பாசில். அப்போது, நிதினுக்கு கல்யாணம் முடிவு செய்யப்பட்டதால், அதற்காக பார்ட்டி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக காரில் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணமாகியுள்ளார்.

பாசில் ஜார்ஜ்
பாசில் ஜார்ஜ்

ஊரடங்கு நேரம் என்பதால் சாலை வெறிச்சோடி கிடந்துள்ளது. இதனால் அவர்கள் காரை அதிவேகமாக இயக்கியுள்ளனர். மின்னல் வேகத்தில் சென்ற கார், ஒருகட்டத்தில் தொழிலாளிகளின் கட்டடத்தில் பலமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளது. அதேபோல் கட்டடம் இடிந்ததில் தொழிலாளிகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பாசில் உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்தில் உயிரிழக்க, மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி ஐந்துபேரும் வெளியே வந்துள்ளார்களா என்றரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாசில் குறித்து அந்தப் பகுதி மக்கள் நல்லவிதமாகவே பேசிவருகின்றனர். எனினும், அதிவேகத்தால் காரை இயக்கி உயிர் போன சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு