Published:Updated:

கள்ளக்குறிச்சி: `தொடர் பிரச்னைகள்; மன அழுத்தம்!’- விபரீத முடிவெடுத்த விஜய் ரசிகர்

தற்கொலை செய்துகொண்ட விஜய் ரசிகர் பாலா
தற்கொலை செய்துகொண்ட விஜய் ரசிகர் பாலா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் `தலைவனையும், தலைவன் படத்தையும் பார்க்காமலேயே போறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் - மலர் தம்பதியினரின் மகன் பாலமுருகன். 23 வயதான இவர் டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்கிறார். தீவிர விஜய் ரசிகரான இவர், `பாலா விஜய் மாஸ்டர்’ என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கிவந்திருக்கிறார். விஜய் திரைப்படம் தொடர்பான டீசர்கள், படங்கள் போன்றவற்றை அன்றாடம் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருந்த இவர், நேற்று தியாகதுருகத்திலிருக்கும் தனது சகோதரி வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

விஜய் ரசிகர் ட்விட்டர் பதிவு
விஜய் ரசிகர் ட்விட்டர் பதிவு

அதற்கு முன்னர் அவர் பதிவிட்ட ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. அவரது ட்விட்டர் பக்கத்தில் சென்று அவரது பதிவுகளை பார்த்தபோது கடந்த சில நாள்களாக அவர் மன வருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. கடந்த 11-ம் தேதி அவர் போட்ட பதிவில், `நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அந்த கடவுளுக்குக்கூட பிடிக்காதுபோல... என்ன வாழ்க்கைடா...’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றைய தினமே அதற்கடுத்தடுத்த பதிவுகளில்,`எதுக்கு பொறக்கணும், யாருக்காக நாம் வாழணும்... அப்பப்போ சந்தோஷத்தைக் கொடுத்து பறிச்சிக்கிட்டே இருக்கான் அந்தக் கடவுள். அந்தக் கடவுள்கிட்ட இதுக்குமேல என்னால முடியாதுடா. மொத்தமா போயிடறேன். அப்போவாவது எந்தக் கவலையும் இல்லாம இருக்கலாம்.

விஜய் ரசிகரின் ட்விட்டர் பக்கம்
விஜய் ரசிகரின் ட்விட்டர் பக்கம்

கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது. உள்ளே எவ்ளோ வலி இருக்குதுனு அப்போதான் எனக்கே தெரியுது. ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான்... என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டுதான் இருக்கேன். ஆனா இப்போ, `உனக்கு சந்தோஷமே கிடையாதுடா’ன்னு கடவுள் நினைச்சிட்டான்போல.

நான் இல்லைன்னா யாராவது ஃபீல் பண்ணுவீங்களா? அப்புறம் நீங்க ஃபீல் பண்ணுறது எனக்கு தெரியாமலேயே போயிடும். இங்கே ஒருத்தருக்காவது என்னைப் புடிக்குமா...’ என்று நீள்கிறது அவரது பதிவுகள். அதன் பிறகு, `தலைவன் படம் பாக்காமலேயே போறேன். தலைவனையும். லவ் யூ தலைவா’ என்று பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவின் கமென்ட்டில் அவரே,`போறேன் வரவே முடியாத தூரத்துக்கு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயில்... மதில்... திகில்! - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்!

அந்தப் பதிவுகளுக்குக் கீழே தன்னம்பிக்கை வார்த்தைகளைத் தரும் அவரது ட்விட்டர் நண்பர்கள், `காதல் தோல்வியா?’ என்றும் கேட்டிருக்கின்றனர். அதற்கு, `நீங்க நினைக்கறதுபோல லவ் ஃபெய்லியர் பிரச்னை இல்லை. வீட்ல பிரச்னை. அதான்... என்னை எல்லாரும் வெறுக்கறாங்க’ என்று பாலமுருகன் ட்வீட் செய்திருக்கிறார். அதுதான் அவரது கடைசி ட்வீட். அதன் பிறகுதான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து புகார் எதுவும் கொடுக்காததால், வழக்கு பதிவாகவில்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

பாலமுருகனின் சகோதரர் (பெரியம்மா மகன்) சத்தியமூர்த்தி என்பவரிடம் பேசினோம். ``பி.இ சிவில் படிச்சிட்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில தனியார் கம்பெனியில வேலை செஞ்சிட்டு வந்தாரு. கொரோனா லாக்டௌன்ல வேலை இல்லாமல் வீட்டுலேயே இருந்தாரு. அதனால, அவரு மன உளைச்சல்லயே இருந்தாரு. வெளிநாட்டுக்குப் போறதுக்கு முயற்சி பண்ணாரு. ஆனா, அவரோட பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதால, அதுவும் நடக்கலை.

`தனிமை; உச்சகட்ட மனஅழுத்தம்!’- இத்தாலியில் தற்கொலை செய்துகொண்ட நீலகிரி மருத்துவ மாணவர்

படிச்ச சர்டிஃபிகேட்டுகளும் தீ விபத்துல எரிஞ்சிடுச்சு. தொடர்ச்சியா இப்படி நடந்ததால கடுமையான மனக் கஷ்டத்துல இருந்தாரு. இந்த நிலைமையிலதான் அவர் இந்த முடிவை எடுத்துட்டாரு. ரொம்ப ஏழ்மையான குடும்பம் அவரோடது. ஒரு அண்ணன் வெளிநாட்டுல இருக்காரு. அக்கா தியாகதுருகத்துல கல்யாணம் ஆகி இருக்காங்க. அங்கேதான் தூக்கு போட்டுக்கிட்டாரு. நாங்க போலீஸ்ல புகார் எதுவும் குடுக்கலை. அவர் அம்மா இருக்கும் ரிஷிவந்தியத்துல நேத்து உடலை அடக்கம் செஞ்சிட்டோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு