Published:Updated:

விவேக் என்கிற விருட்சம்!

விவேக்
பிரீமியம் ஸ்டோரி
விவேக்

- இரா.சரவணன்

விவேக் என்கிற விருட்சம்!

- இரா.சரவணன்

Published:Updated:
விவேக்
பிரீமியம் ஸ்டோரி
விவேக்

முதல் நாள் அரசு மருத்துவமனையில் அமர்ந்தபடி, மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பியவர், இரண்டாவது நாளே இறக்கிறார் என்றால், எவரால் நம்ப முடியும்? பச்சை மரத்தை அறுத்துப்போட்டதுபோல் அமைந்துவிட்டது பத்மஸ்ரீ விவேக்கின் மரணம்!

மரணமடைந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று, சரவணாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் படப்பிடிப்பில் நடித்திருக்க வேண்டியவர் விவேக். படப்பிடிப்புக் குழுவினர் இந்தத் தேதி குறித்து அவருக்கு நினைவூட்ட, “என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க? ஒவ்வொருத்தங்களும் உயிரைக் காப்பாத்திக்க ஓடிக்கிட்டு இருக்காங்க. இப்போ எதுக்கு ஷூட்டிங்? நான் வர மாட்டேன். தயவுபண்ணி தவறா நினைச்சுக்காதீங்க. ஷூட்டிங்குக்கு வர மாட்டேன்னு நான் இதுவரைக்கும் சொன்னதே இல்லை. இப்போ சொல்றதும் எனக்காக மட்டுமில்லை. உங்க எல்லாருக்காகவும்தான். உயிர் முக்கியம் சார்…” எனச் சொல்லியிருக்கிறார் விவேக். அஞ்சலிக்கு வந்த அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், விவேக்கின் வார்த்தைகளைக் கண்ணீரோடு சொல்லிக் கலங்குகிறார்.

விவேக் என்கிற விருட்சம்!

நடிகர், இசை விரும்பி, சமூக ஆர்வலர் என விவேக்கின் பன்முகப் பரிமாணங்கள் மகத்தானவை. அறிவார்ந்த சிந்தனைகளும், பகுத்தறிவு குறித்த உரையாடல்களும் நிறைந்த அவரது நடிப்பை ‘நகைச்சுவை’ என்ற ஒரு பகுதிக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. மொத்த மேடையையும் கைவசமாக்கும் அவருடைய பேச்சும் சாதுர்யமும் எவருக்குக் கைவரும்? இயக்குநர் பாலசந்தரின் வார்ப்பாக வந்தவரை, அப்துல் கலாமின் வளர்ப்பாக மாற்றியதுதான் காலம் செய்த கைங்கர்யம். மகத்தான கலைஞனாக மக்கள் மனதை ஈர்த்த விவேக், சுற்றுச்சூழலைக் காக்க கலாம் வழி நின்று மரக்கன்றுகள் நட்டதன் மூலமாக, மக்கள் மனதில் உருவாக்கிய மாற்றமும் நம்பிக்கையும் மிக முக்கியமானவை.

“உங்களுக்குத் தெரிந்தவர்கள், பிரபலங்கள் எத்தனையோ பேர் இருக்க, ஒரு கோடி மரங்கள் வளர்க்கும் பொறுப்பை என்கிட்ட ஏன் சார் ஒப்படைச்சீங்க?” - மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இப்படிக் கேட்டார் விவேக். அப்போதைக்கு பதில் சொல்லாமல் சிரித்தபடியே சென்றுவிட்ட அப்துல் கலாம், அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்… விவேக், உங்கள் கேள்விக்கு இதுதான் என் பதில்” என்றார். இதில் நெகிழ்ந்துபோன விவேக், மரக்கன்றுகள் வளர்ப்பில் தீவிரமானார்.

பெரும்பாலும் சினிமாக்காரர்கள் தங்களின் நேரத்தைப் பிற வேலைகளுக்கு ஒதுக்கவே மாட்டார்கள். ஆனால், விவேக் மரம் வளர்ப்பு குறித்த ஆர்வத்தைப் பெரும் திட்டமாகவே தொடங்கினார். படப்பிடிப்புகளுக்கு நேரம் ஒதுக்கிச் செல்வதைப்போல் மரங்கள் வளர்க்கும் நிகழ்வுகளுக்காக நேரம் ஒதுக்கி, பல ஊர்களுக்கும் பயணித்தபடியே இருந்தார். கலாம் சொன்ன ஒரு கோடி இலக்கில் 33,23,000 மரங்களை மண்ணில் ஊன்றி மகத்தான புரட்சியைப் படைத்தார். “ஒரு கோடி மரங்களை ஊன்றாமல் என் தலை சாயாது சார்” என்றவரைத்தான் காலம் இவ்வளவு சீக்கிரத்தில் சாய்த்திருக்கிறது.

“மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்றுகூட அறிவித்துப் பார்த்தது தமிழக அரசு. “மரக்கன்றுகளை நடுவதுதான் சீரழிந்துவரும் சுற்றுச்சூழலைக் காக்க ஒரே வழி” எனச் சொல்லாதவர்கள் மிச்சமில்லை. ஆனாலும், மரக்கன்றுகள் வளர்க்கிற ஆர்வம் பெரும்பான்மை மக்களிடம் போய்ச் சேரவே இல்லை. மரக்கன்றுகளை நடுவது, குறுங்காடுகளை உருவாக்குவது என அங்கேயும் இங்கேயுமாக நடக்கிற நம்பிக்கை நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம் விவேக் என்பதை மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட மறுக்க முடியாது. “ஆயிரம் மரக்கன்றுகள் நடுகிறோம் சார்… உங்களால் வர முடியுமா?” எனத் தகவல் அனுப்பினால் போதும்… எந்த ஊராக இருந்தாலும் வந்து நிற்பார் விவேக். போக முடியாத சூழல் ஏற்பட்டால், அந்த முன்னெடுப்பைச் செய்பவர்களை வாழ்த்தி வீடியோ வெளியிட்டு, ‘நேரம் கிடைக்கும்போது நீங்கள் நட்ட மரங்களைப் பார்க்க வருவேன்’ என்பார். இயற்கை ஆர்வலர்களைச் சமூக வலைதளங்கள் மூலமாக அடையாளம் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து, மரக்கன்றுகளை மிகுதியாக்கினார். “நேரம் கிடைக்கும்போது சாலையோர மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறேன். இதற்கு உந்துதலாக அமைந்தது உங்கள் பணிதான்…” என ஓர் இளைஞர் ட்வீட் செய்ய, அவரைப் பாராட்டி எழுதிய வார்த்தைகள்தான் விவேக்கின் கடைசி ட்வீட்.

விவேக் என்கிற விருட்சம்!

விவேக் இறப்பால், மனம் தாங்காமல் துடிப்பவர்கள்கூட தங்களின் கண்ணீரை ஒதுக்கிவிட்டு, மரக்கன்றுகள் நடுகிறார்கள்; சமூக வலைதளங்களில் அவற்றைப் பதிவிடுகிறார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிலர் நெகிழவைத்தார்கள். இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை உயர்த்திப் பிடித்தபடி வந்தார்கள் பல இளைஞர்கள். “விவேக் நினைவாக, என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மரக்கன்றை நடுவேன்” என்கிறார் நடிகர் மயில்சாமி. “விவேக் விட்டுச் சென்ற பணியை எங்கள் கட்சியும் தொண்டர்களும் தொடர்ந்து முன்னெடுப்பார்கள். கோடிக்கணக்கான மரங்களை நட்டு இந்த பூமியைக் குளிரச் செய்வார்கள்” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

“விவேக் இறப்பை ஒட்டி நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தது பதினைந்தாயிரத்துக்கும் மேல் இருக்கும்” என்கிறார்கள் சமூக வலைதளங்களின் பதிவுகளைக் கணக்கிட்டுச் சொல்பவர்கள். ஒருவரின் இறப்புக்கு இவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. விவேக் மறைந்தாலும், அவரின் இலக்கான ஒரு கோடி மரங்களை நடும் முயற்சி நிச்சயம் ஈடேறும் என்பதற்கு இதுவே சாட்சி.

பன்முகக் கலைஞனாக மக்களைச் சிரிக்கவைத்த விவேக், பசுமைப் போராளியாகச் சிலிர்க்கவைக்கிறார். தினந்தோறும் தமிழகத்தின் திசையெங்கும் நடப்படுகிற மரக்கன்றுகள்தான், அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யப்படும் மரியாதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism