Published:Updated:

`கொரோனா விழிப்புணர்வு; இரவில் திடீர் மாரடைப்பு..' -நடிகர் சேதுராமன் மரணத்தால் கலங்கும் நண்பர்கள்

சேதுராமன்
சேதுராமன்

`கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் நேற்று காலமானார்.

நடிகர் சந்தானம், `பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான `கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சேது, அதன்பின்னர் `வாலிப ராஜா', `சக்கபோடு போடு ராஜா', `50/50' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சரும நோய் மருத்துவரான இவர், நேற்று (மார்ச் 26-ம் தேதி) மாரடைப்பால் காலமானார். இந்தச் செய்தியை நடிகர் சதீஷ் மற்றும் பலர், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்திருந்தனர்.

சேதுராமன்
சேதுராமன்

நேற்று முன்தினம் வரை கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளார் என்ற செய்தி தமிழ்த் திரையுலகைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 37 வயதே ஆகும் சேதுராமனுக்கு மாரடைப்பு எப்போது ஏற்பட்டது என்பது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய அவரின் நண்பர்கள், ``சேதுராமன் சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு மருத்துவத்துறையே பிரதானமான தொழில், பிடித்த தொழிலும்கூட. சென்னையில் பிரபலமான தோல் சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். மருத்துவத்துறையில் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்கும் சேது, சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று, லேசர் குறித்து படித்து வந்துள்ளார்.

சேதுராமன்
சேதுராமன்

சென்னை ஈசிஆரில் புதிதாகத் தோல் சிகிச்சைக்கான மருத்துவமனையை விரைவில் திறக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். மருத்துவத்தைத் தாண்டி பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் சந்தானம் இவரது நெருங்கிய நண்பர். இதனால் திரைத்துறையை இரண்டாவது தொழிலாகச் செய்து வந்தார். சில படங்களில் கமிட் ஆகியுள்ள சேது, வெப் சீரிஸில் நடிக்கவும் கமிட் ஆனார்.

இதற்கிடையேதான் கடந்த சில நாள்களாக கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வலைதளங்கள் மூலம் ஏற்படுத்திவந்தவர் ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், விதி கைவிட அவர் 37 வயதிலேயே உயிரிழந்துள்ளார்.

சேதுராமன்
சேதுராமன்

சேதுராமனுக்கு 2016-ல் திருமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. திரையுலகில் நிறைய நண்பர்களைச் சம்பாதித்துள்ள சேது, பல பிரபலங்களுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. எனினும், தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக அவரது இறுதிச் சடங்குக்கு பல்வேறு பிரபலங்கள் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது" என வேதனைப்படுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு