தேர்தல் பிரசாரம்; திடீர் நெஞ்சுவலி! -எம்.பி முகமது ஜான் மறைவால் அதிமுக-வினர் அதிர்ச்சி

ராணிப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மாநிலங்களவையின் அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் உடல்நலக்குறைவால் இன்று மாலை திடீரென காலமானார். அவருக்கு வயது 72. கடந்த ஒரு வாரமாக ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார் முகமது ஜான். இன்று காலை வாலாஜாபேட்டைப் பகுதியில் பிரசாரத்துக்குச் சென்றவர் நண்பகல் நேரத்தில் மதிய உணவு சாப்பிடுவதற்காக ராணிப்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

உணவு சாப்பிட்ட பின்னர் ஓய்விலிருந்தவர், மாலையில் பிரசாரத்துக்குத் தயாரானார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. திடீரென மயங்கிய அவரை அருகிலிருந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். முகமது ஜானைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலையறிந்த அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் குவிந்தனர். முகமது ஜானின் மறைவுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டையிலுள்ள வீட்டில் முகமது ஜானின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் கே.சி.வீரமணி, அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி, ராணிப்பேட்டை அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் உட்பட அ.தி.மு.க-வினர் ஏராளமானோர் முகமது ஜானுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள். 2011 தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் முகமது ஜான். தொடர்ந்து, 2019-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட அவர் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராகவும் இருந்துவந்தார். இந்தநிலையில், முகமது ஜானின் மறைவு அ.தி.மு.க தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.