Published:Updated:

“எவ்வளவு கோடி வேணும்னாலும் எடுத்துக்கங்க... என் புருஷனை விட்டுடுங்க!”

கொலை
பிரீமியம் ஸ்டோரி
கொலை

திருவள்ளூரை அதிரவைத்த கொலை

“எவ்வளவு கோடி வேணும்னாலும் எடுத்துக்கங்க... என் புருஷனை விட்டுடுங்க!”

திருவள்ளூரை அதிரவைத்த கொலை

Published:Updated:
கொலை
பிரீமியம் ஸ்டோரி
கொலை

அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.மனோகரன் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது, திருவள்ளூர் மாவட்டத்தையே அதிரவைத்திருக்கிறது. அவர் மனைவி, குழந்தைகள் கண் முன்னாலேயே நிகழ்ந்திருக்கும் இந்தக் கொலையின் பின்னணியில், அனல்மின் நிலைய சாம்பல் டெண்டர் விவகாரம்தான் பிரதானமாகக் கூறப்படுகிறது.

“எவ்வளவு கோடி வேணும்னாலும் எடுத்துக்கங்க... என் புருஷனை விட்டுடுங்க!”

திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவரான மனோகரன், அ.தி.மு.க-வின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளராகவும் இருக்கிறார். மே 15-ம் தேதி, குருவிமேட்டில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோகரன், குடும்பத்துடன் வீடு திரும்பியபோதுதான் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணி குறித்து மனோகரின் உறவினர்களிடம் பேசினோம்.

“எவ்வளவு கோடி வேணும்னாலும் எடுத்துக்கங்க... என் புருஷனை விட்டுடுங்க!”

“திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வடசென்னை அனல்மின் நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையங்களில் ‘சாம்பல்’ எடுக்கும் பணியை மனோகரன் செய்துவந்தார். சிமென்ட், கட்டடப் பொருள்களைத் தயாரிப்பதற்கு இந்தச் சாம்பல் பயன்படுகிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சுந்தர் என்கிற சுந்தரபாண்டியனும் ‘சாம்பல்’ டெண்டரை எடுப்பதற்குக் கடுமையாக முட்டிமோதினார். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவராக மனோகரன் இருந்ததால், அவரை மீறி சுந்தரால் டெண்டர் எடுக்க முடியவில்லை. தொழில் போட்டி கடுமையானதால், சமீபத்தில் மனோகரனிடம் பேசிய சுந்தர், ‘நான் பிரபல ரெளடி எண்ணூர் தனசேகரனின் உறவினர். எங்களை மீறி எங்க ஏரியாவுலயே வந்து தொழில் பண்றியா... இனி ஏரியாவுல உன் லாரி ஓடக் கூடாது’ என மிரட்டினார். அதற்கெல்லாம் மனோகரன் மசியவில்லை. இதைத் தொடர்ந்துதான் அவரைத் தீர்த்துக்கட்ட சுந்தர் தரப்பு முடிவெடுத்தது.

மே 15-ம் தேதி குருவிமேட்டிலிருந்து குடும்பத்துடன் மனோகரன் காரில் பயணித்தபோது, அவரது காரை டிப்பர் லாரியால் மோதியிருக்கிறார்கள். இதில் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறது. காரிலிருந்து இறங்கிய மனோகரன் சுதாரிப்பதற்குள், லாரியிலிருந்து இறங்கிய 10 அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் மனோகரனைச் சுற்றிவளைத்துள்ளனர். இதைப் பார்த்த மனோகரனின் மனைவி ஷர்மிளா, ‘என் புருஷனை விட்டுடுங்க. எவ்வளவு கோடி ரூபாய் பணம் வேணும்னாலும் எடுத்துக்கங்க’ என கதறியிருக்கிறார். ‘உன் பணம் யாருக்கு வேணும்... இவனை இங்கேயே முடிக்காம நாங்க போக மாட்டோம்’ எனக் கத்திய அந்தக் கும்பல், குடும்பத்தினர் முன்னிலையிலேயே மனோகரனை கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறது. இந்தக் கொலை மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சமூகப் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது. சம்பவம் தொடர்பாக சுந்தர் உட்பட 11 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். எண்ணூர் தனசேகரனுக்கும் இந்தக் கொலையில் தொடர்பிருக்கிறதா என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும்” என்றனர்.

மனோகரன்
மனோகரன்

இந்தக் கொலைக்கான திட்டமே புழல் சிறையில்தான் தீட்டப்பட்டதாகச் சொல்கிறது மனோகரனின் உறவினர் தரப்பு. “ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் புரளும் அனல்மின் நிலைய ‘சாம்பல்’ டெண்டரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தி.மு.க பிரமுகரும் லாபம் பார்க்கிறார். மனோகரனின் கொலையில் அந்த தி.மு.க பிரமுகர் தரப்பும் தொழில்ரீதியான போட்டியில் கணக்கைச் சரிக்கட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. வெறும் 11 பேரோடு இந்த வழக்கு முடிந்துவிட்டதாக போலீஸ் கருதிவிடக் கூடாது” என்கிறார்கள்.

மனோகரனின் கொலை குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சிறுணியம் பலராமனிடம் பேசினோம். “கொலை நிகழ்ந்தவுடனேயே, உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென போலீஸாருக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். இருவரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது தெரியவருகிறது” என்றார்.

கொலை நடந்த சில நாள்களிலேயே, ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீஞ்சூர் போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, “செல்போன் சிக்னல்கள், உரையாடல்களை வைத்தே கொலையாளிகளைப் பிடித்தோம். இந்தக் கொலையில் வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனரா, பெண் விவகாரம் ஏதும் இருக்கிறதா என்பதெல்லாம் மேலதிக விசாரணையில்தான் தெரியவரும்” என்றனர்.

பலராமன்
பலராமன்

ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் இறந்துவிட்டதால், அவரிடத்துக்கு துணைத் தலைவரான வித்யா ஜெயக்குமார் (அ.தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தொழில் போட்டி, முன்விரோதம் எனக் காரணங்களை அடுக்கினாலும், மனைவி, குழந்தைகள் முன்னிலையிலேயே ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. இதன் பின்னணியிலுள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதே கொண்டக்கரை ஊராட்சி மக்களின் வேண்டுகோள்!