Published:Updated:

`தாங்க முடியல, வேலையை இழந்திட்டேன்!'- காதல் தோல்வியால் ஃபேஸ்புக் லைவில் உயிரை மாய்த்த இளைஞர்

காதல் விவரம் தெரியவந்தது முதல் ஷியாம் வருத்தத்தில் இருந்துள்ளார். வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

தற்கொலை
தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஷியாம் சிகர்வார் என்னும் ராஜ். கடந்த சில வருடங்களாக அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்துள்ளது. இந்த விவரம் தெரியவந்தது முதல் ஷியாம் வருத்தத்தில் இருந்துள்ளார். வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். மேலும், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அடிக்கடி நண்பர்களிடத்தில் கூறிவந்துள்ளார். ஷியாம் அப்படிக் கூறியதை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தன் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றவர் அங்கிருந்து ஃபேஸ்புக்கில் நேரலையில் வந்தார். மொத்தம் நான்கு நிமிட நேரலையில் முதலில், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியவர், `இந்த தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. போலீஸ் யாரையும் கைது செய்ய வேண்டாம். நான் இறந்த பிறகு எனது உடலின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுங்கள்' என வீட்டு உறுப்பினர்களுக்குக் கோரிக்கை விடுத்தார். அடுத்த சில விநாடிகளிலேயே லைவ் வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே கோயிலில் தூக்கிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த இடத்தில் ஷியாம் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ``நான் என் காதலியை மிஸ் செய்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவர் வேறு ஒருவரை திருமணம் செய்யப்போகிறாள் என்ற உண்மையை என்னால் இப்போதுகூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதல் தோல்வியால் நிறைய மன அழுத்தத்துக்கு ஆளானேன். என் வேலையைக் கூட இழந்தேன். இனியும் வாழ விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

தற்கொலை
தற்கொலை

இவரின் தற்கொலை அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள அந்தப் பகுதி போலீஸார், ``காதல் தோல்வி, வேலையை இழந்தது என தொடர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் ஷியாம். அந்தப் பெண் திருமணம் செய்யப்போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். அவரின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை போய்கொண்டிருக்கிறது" எனக் கூறியுள்ளனர்.