Published:Updated:

`வீடியோ தெளிவாக இல்லை!’ - பெஹ்லு கான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை

கலிலுல்லா.ச

பெஹ்லு கான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் நிரபராதி என அல்வார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

கடந்த 2017-ம் ஆண்டு பெஹ்லு கான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஜெய்ப்பூரிலிருந்து தனது சொந்த கிராமத்துக்கு மாடுகளை கொண்டுசென்றனர். அப்போது, அவர்கள் பசுக்குண்டர்களால் தாக்கப்பட்டனர். அதில் பெஹ்லு கானை அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லு கான் இரண்டு நாள்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தக் கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பசுக்களை கொண்டு சென்றதாக பெஹ்லு கான் மகன்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான இறுதி விசாரணை இன்று அல்வார் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பெஹ்லு கான்
பெஹ்லு கான்

அப்போது, `குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும், மொபைல் வீடியோவில் இருப்பது தெளிவாக இல்லை. அவர்கள் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை’ என்று கூறி அவர்களை விடுவித்தது. `குற்றாவாளிகள் இல்லை’ என்று தீர்ப்பு வந்த அடுத்த நொடியே, கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இந்த வீ்டியோவை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.

பெஹ்லுகான் இறப்பில் முரணான தகவல்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், அரசு மருத்துவர்கள் தரப்பில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. அதேபோல, இந்தக் கொடூரமான தாக்குதலை தனது மொபைலில் படம் எடுத்தவரும் சாட்சி கூற முன்வரவில்லை.

மாடுகள்
மாடுகள்

இது தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா, ``காங்கிரஸ்தான் இந்த விவகாரத்தை அரசியலாக்கியது. சட்டத்தை அவர்கள் கையிலெடுத்தனர். ஆனால், நீதிமன்றம் இன்று அவர்களை நிரபராதி என விடுவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் 110க்கும் அதிகமாக இது போன்ற நிகழ்வுகள் நடத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.