Published:Updated:

`எனது 50 கனவுகள்... அம்மாவுடன் செய்துகொண்ட சத்தியம்’- `கனவுக்காரன்’ சுஷாந்த் சிங்

சுஷாந்த்
சுஷாந்த்

தனது கனவுகளில் அவர் சிலவற்றை நிறைவேற்றி, அது தொடர்பான பதிவுகளையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஷாந்த்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல், நேற்று பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `எம்.எஸ்.தோனி: அன்டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் மொழிகளைக் கடந்து விருப்பப்பட்ட முகமானார் சுஷாந்த்.

அவர் முகத்தில் எப்போதும் அழகிய சிரிப்பைக் காணலாம். பாலிவுட் நடிகர்களில் டி.வி-யிலிருந்து பெரிய திரையில் சாதித்த மிகச் சிலரில் முக்கியமானவர். 2012-ல் வெளியான `Kai Po Che’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். 'பிகே' மற்றும் 'கேதார்நாத்' உள்ளிட்ட படங்கள் அவரது கரியரில் முக்கியமானவை. தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்
தே.அசோக்குமார்

முகேஷ் சாப்ரா இயக்கத்தில், சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள 'Dil Bechara'படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. `தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், அவரது தற்கொலைச் செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லாக்டௌன் காலத்தில் ஏற்கெனவே ரிஷி கபூர் மற்றும் இர்பான் கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், தற்போது இளம் கலைஞர் ஒருவரையும் இழந்திருக்கிறது.

தனக்கென்று பல்வேறு அடையாளங்களை வைத்திருந்த சுஷாந்த், மிகுந்த தாய்ப் பாசம் கொண்டவர். தனது 16 வயதில் தாயை இழந்த சுஷாந்த், பல்வேறு தருணங்களில் தன் தாய் குறித்து பதிவு செய்திருக்கிறார். அம்மா இருந்தபோது அவர் உணர்ந்த முழுமையையும், அவர் இல்லாதபோது கிடைக்கும் வெற்றிகள் குறித்தும் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். தன் அம்மாவின் நினைவாகத் தன் முதுகில் ஒரு படத்தையும் அவர் பச்சை குத்தியிருக்கிறார்.

சுஷாந்த் சிங் பதிவு
சுஷாந்த் சிங் பதிவு
இன்ஸ்டாகிராம்

கம்ப்யூட்டர், செல்போன் காலத்தில் பலரும் கைகளால் பேனா பிடித்து எழுதுவதை மறந்துவிட்டோம். ஆனால் சுஷாந்த், தொடர்ச்சியாக எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். தனது அம்மாவுக்காக அவ்வப்போது கடிதம் எழுதும் பழக்கமும் அவருக்கு இருந்தது.

`நீங்கள் இருந்தவரை நானும் இருந்தேன். இப்போது உங்கள் நினைவுகளில் நான் உயிரோடு வருகிறேன். ஒரு நிழல்போல, ஒரு நிலையில்லா வெளிச்சம்போல. அங்கு காலங்கள் நகரவே நகராது. அது எப்போதும் அழகாய் இருக்கும்! உங்களுக்கு நினைவிருக்கிறதா... நீங்கள் என்னை விட்டுப் பிரிய மாட்டீர்கள் என எனக்கு சத்தியம் செய்தீர்கள். என்ன நடந்தாலும் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன் என நான் உங்களிடம் சத்தியம் செய்தேன். நாம் இருவரும் அதைச் செய்யவில்லை” என்கிற வரிகளில் வேதனையும் இருக்கத்தான் செய்தது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரது கடைசிப் பதிவும் அவரது அம்மா குறித்துதான் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன், அம்மாவின் படத்தைப் பகிர்ந்த அவர், ``கண்ணீர்த் துளிகளிலிருந்து ஆவியாகும் மங்கலான கடந்த காலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் மும்பையில் வசித்துவந்தாலும், அவரது அப்பா கே.கே. சிங், சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவில்தான் வசித்துவருகிறார். மூன்று தினங்களுக்கு முன், தன் தந்தையை அழைத்த சுஷாந்த், ``கொரோனா வைரஸ் பரவுவதால் வெளியே செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து தந்தையை கவனித்துக்கொள்ளும் பணிப் பெண்ணான லக்‌ஷ்மி தேவியிடம், `தந்தையை கூடுதல் கவனத்துடன் பார்த்துகொள்ளுங்கள்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னரே சொன்னதுபோல், எழுதும் பழக்கம் கொண்ட சுஷாந்த், தனது 50 கனவுகள் குறித்து தன் கைப்பட எழுதிய நோட் ஒன்றை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ட்விட்டரில் வெளியிட்டார்.

அதில், `விமானம் ஓட்டிப் பழகுவது, இடதுகையால் கிரிக்கெட் ஆடுவது, குழந்தைகளுக்கு விண்வெளி தொடர்பாக கற்றுக்கொடுப்பது, சாம்பியன் ஒருவருடன் டென்னிஸ் ஆடுவது, 1,000 மரங்களை நடுவது, ஒரு மாலைப் பொழுதை நான் படித்த கல்லூரி ஹாஸ்டலில் செலவிடுவது, 100 குழந்தைகளை இஸ்ரோ அல்லது நாசாவின் பயிற்சிக்கு அனுப்புவது, கைலாஷில் தியானம் , புத்தகம் எழுதுவது, ஆறு மாதங்களில் 6 பேக், செநோட்ஸில் நீச்சல், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு குறியீட்டைக் கற்றுக் கொடுப்பது,

ஒரு வாரத்தைக் காடுகளில் கழிப்பது, வேத ஜோதிடத்தைப் புரிந்துகொள்வது, டிஸ்னி லேண்ட் செல்வது, இலவச கல்விக்காக முயல்வது, அண்டார்டிக்கா செல்வது, பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்க உதவுவது, சிதறும் எரிமலையைப் படம் பிடிப்பது, குழந்தைகளுக்கு நடனம், Resnick - Halliday இயற்பியல் புத்தகத்தை முழுமையாகப் படிப்பது, எனக்கு விருப்பமான 50 பாடல்களுக்காக கித்தார் படிப்பது, சாம்பியன் ஒருவருடன் செஸ் விளையாடுவது, லாம்போகினி கார் சொந்தமாக வாங்குவது, ஐரோப்பிய நகரங்களை ரயில் பயணம் மூலம் கடப்பது, மாணவர்களை இந்திய பாதுகாப்புப் படைக்கு தயாராக வைப்பது, செயற்கை நுண்ணறிவு தொடர்பாகத் தெரிந்து கோள்வது, சுவாமி விவேகானந்தர் தொடர்பான ஆவணப்படம்' என அவரது கனவுகள் தொடர்கிறது.

இந்தக் கனவுகளில் சிலவற்றை அவர் நிறைவேற்றி, அதுதொடர்பான பதிவுகளையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிறைவேற்றவேண்டிய கனவுகள் இன்னும் பல மீதமிருக்க,`கனவுக்காரன்’ சுஷாந்த் சிங் இப்படி முடிவை எடுப்பார் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

`உடல்நலம் மட்டுமல்ல மனதின் நலத்திலும் கவனம் தேவை' எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள். உண்மைதான். சமூக வலைதளம் முழுவதும் சுஷாந்த் சிங் இரங்கல் செய்திகள்தான் நேற்று ஆக்கிரமித்திருந்தன. அதில், நண்பரின் பதிவு ஒன்று, ``இரங்கல் செய்திகள் போதும். உங்கள் போனில் இருக்கும் நண்பர்கள் எண்ணுக்கு தொடர்ந்து அழைத்துப் பேசுங்கள். உங்களின் பேச்சு சிலரின் மோசமான எண்ணங்களை மாற்றும்.”

அடுத்த கட்டுரைக்கு