Election bannerElection banner
Published:Updated:

` 75 சென்ட் மயானம்...அரை கி.மீ விவசாய நிலம்!' - வயலில் இறங்கி சடலத்தைச் சுமக்கும் ஆரணி மக்கள்

நெற்பயிரின் இடையே  கொண்டுசெல்லும் சடலம்
நெற்பயிரின் இடையே கொண்டுசெல்லும் சடலம்

இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்குச் சுடுகாடு இருக்கிறது. ஆனால், அங்கே செல்வதற்கு வழிதான் இல்லையென்று புலம்புகின்றனர் கிராம மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் அருகே உள்ளது ஆலம்பூண்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் மயானத்துக்குச் செல்ல வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால், அவர்களை மயானத்துக்கு எடுத்துச்செல்ல படாதபாடுபடுகின்றனர்.

சடலம்
சடலம்

இதுகுறித்து ஆலம்பூண்டி கிராம மக்கள் கூறுகையில், “ ஊருக்கு ஒதுக்குப்புறமா இந்த கிராமத்துக்கென சுமார் 75 சென்ட் அளவில் மயானம் உள்ளது. ஆனால், மயானத்துக்குச் செல்லத்தான் வழியில்லை. ஊரிலிருந்து மயானம் செல்ல 1 கி.மீ தூரம் செல்லவேண்டும். அதில் அரை கி.மீ தூரத்துக்கு விவசாய நிலமாகவே உள்ளது. விவசாய நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவதால், இறந்தவர்களின் உடலை வயலிலேயே இறக்கிக் கொண்டு செல்லவேண்டிய நிலை நீடிக்கின்றது. இதனால், நெற்பயிர்கள் சேதமடைந்து வீணாகின்றன.

மழைக்காலங்களில் இறந்தவர்களின் சடலத்தைக் கொண்டு செல்வதற்குள், `ஐயோ போதும்டா சாமி' என்றாகிவிடுகிறது. இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. மயானத்துக்குச் செல்ல பாதை அமைத்துத்தர வேண்டி பலமுறை வருவாய்த்துறையினரிடமும் உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துவிட்டோம். ஏன் அரசியல்வாதிகளிடமும் மனு கொடுத்துவிட்டோம். இதுவரையில் நாங்கள் கொடுத்த மனுக்களுக்கு அளவே இல்லை. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையே தொடர்ந்தால் நாங்கள் என்னதான் செய்வது?

வயலில் கொண்டு செல்லப்படும் சடலம்
வயலில் கொண்டு செல்லப்படும் சடலம்

இந்நிலையில், நேற்று சாரதாம்மாள் என்ற மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவரின் சடலத்தை எடுத்துச் செல்ல நெற்பயிரை மிதித்துச் சேதப்படுத்தி மிகுந்த சிரமத்துடன் மயானத்திற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்தோம்.

அப்போது, சடலத்தைச் சுமந்து சென்ற ஒருவருடைய கால் சேற்றில் சிக்கி காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால், சடலத்தைச் சுமக்கவே தயங்குகின்றனர். இந்த நிலைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ தெரியவில்லை” என வேதனையோடு பேசி முடித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு