Published:Updated:

`தொண்டை, வாய், கண்ணில் பாயும் வீரியம்!- விவசாயிகளின் உயிரைப்பறிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து

கடந்த ஆண்டு மோனோ குரோட்டபாஸ் என்கிற பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்த அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் 9-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரையிலும் அரசிடமிருந்து விவசாயிகளுக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை.

பூச்சிக்கொல்லி
பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி மருந்தைப் பருத்தி வயலில் தெளித்தபோது அதன் வீரியம் தாங்க முடியாமல் ராமசாமி என்ற விவசாயி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆண்டுகூட இதே பூச்சிக்கொல்லி மருந்தால் ஒன்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இன்று வரையிலும் இந்த மருந்தை தடை செய்யாமல் இருக்கிறது அரசு என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்தபோது இறந்த விவசாயி
பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்தபோது இறந்த விவசாயி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 7-ம் தேதியன்று தனது வயலில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மருந்து தெளிப்பான் கருவியிலிருந்து வெளியான பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் தாங்க முடியாமல் வயலிலேயே மயங்கி விழுந்தவர் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள திட்டக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்பு உயர் சிகிச்சைக்காகத் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மோனோ குரோட்டாபாஸால் உயிரிழப்புகள் தொடங்கிவிட்டதா என்று விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்.

உயிரிழந்த ராமசாமியின் உறவினரிடம் பேசினோம். "ராமசாமி 60 வயது நிரம்பியவர். ஆனால், மிகவும் திடகாத்திரமானவர். கடந்த 7-ம் தேதி பருத்தி வயலுக்கு மருந்து அடிக்கச் சென்றிருக்கிறார். மோனோ குரோட்டாபாஸ் மருந்தைக் குடத்தில் கலக்கியபோது மருந்தின் வீரியம் தொண்டை, வாய், கண்ணில் ஏறியிருக்கிறது. ஒரு நாளைக்கு 50 கேனுக்கும் மேல் மருந்தை அடிப்பவர் மருந்தின் வீரியத்தால் 8 கேனுக்கும் மேல் அடிக்க முடியாமல் நிலத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

ராமசாமியின் மனைவி
ராமசாமியின் மனைவி

நானும் எங்க மாமாவும் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் படுக்க வைத்தோம். அவர் பேச முயன்றார். அவரால் பேச முடியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தார். வாந்தி எடுக்கும்போதே மருந்தின் நாற்றம் நெடி கடுமையாக ஏறியது. பேதியும் நிற்கவில்லை. பயந்துபோய் அவரைத் திட்டக்குடியில் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

அங்கு வாந்தி, வயிற்றுப்போக்கு நிற்காமல் சென்றது. உயர் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் அவருக்கு மருத்துவம் பார்க்க முடியாமல், திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சொல்லியிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சைப் பலனின்றி 25-ம் தேதி இறந்துபோனார்" என்று தழுதழுத்தார்.

இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம். "பூச்சித் தாக்குதல் இருக்காது என்பதற்காக பீட்டி பருத்தி கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் பூச்சித் தாக்குதல் நின்றபாடில்லை. அதைவிட அதிக அளவிலான பூச்சி மருந்துகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள் பல சதி வேலைகள் இருக்கின்றன என்று. விளைநிலங்களில் அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் விவசாயிகள் இறப்பது இது ஒன்றும் புதிதல்ல. மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் பருத்திக்கு மருந்து அடித்த 35 விவசாயிகள் இறந்துள்ளனர்.

ரமேஷ் கருப்பையா
ரமேஷ் கருப்பையா

300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே போல் பீகாரில் மோனோ குரோட்டாபாஸ் பயன்படுத்திய பல விவசாயிகள் இறந்துள்ளனர். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் 9-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரையிலும் அரசிடமிருந்து விவசாயிகளுக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை. ஒரு அரசுப் பேருந்து டிரைவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவருக்கு இழப்பீடு கொடுக்கிறது அரசாங்கம்.

ஆனால், விவசாயப் பணி செய்யும்போது ஈடுபடும்போது அவர் உயிரிழந்தார். அவருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாமா? இனி அவசியம் கொடுக்க வேண்டும். அதேபோல் மோனோ குரோட்டாபாஸ் மருந்தை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் சுதந்திரமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தால் இன்னும் எத்தனை பேர்தான் சாகப்போகிறார்களோ தெரியவில்லை" என்று ஆவேசப்பட்டார்.