Published:Updated:

விடிய விடிய காத்திருந்த மக்கள் - வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்!

வீரமரணம் அடைந்த பழனிக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த பழனிக்கு அஞ்சலி ( உ.பாண்டி )

பழனியின் உடலுக்கு முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்திய - சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இரு தரப்பு ராணுவ மோதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூரில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணம் அடைந்த இந்திய ராணுவம் ஹவில்தார் பழனி
வீரமரணம் அடைந்த இந்திய ராணுவம் ஹவில்தார் பழனி
விகடன்

இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் முதலே தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவிவந்த பதற்றமான சூழல் கடந்த சில நாள்களில் குறைந்துவந்தது.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல், இரும்புக் கம்பிகள் கொண்டு இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். இதனால் கடுக்கலூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை சோகம் சூழ்ந்தது.

வீரமரணம் அடைந்த பழனிக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த பழனிக்கு அஞ்சலி
உ.பாண்டி

மதுரை விமான நிலையத்துக்கு வந்த உடல்!

கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் ராணுவ வீரர் பழனி மரணம் அடைந்ததற்கு தமிழக மக்கள் அனைவரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டபோது அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை விமான நிலையத்துக்கு மாலை 7 மணிக்கு விமானம் மூலம் ராணுவ வீரர் பழனியின் உடல் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு வந்த நிலையில் அப்போதிருந்து மதுரையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்தினர், ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், அவருடைய குடும்பத்தினர் எனப் பலரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

நள்ளிரவில் ராணுவ விமானத்தில் வந்த வீரர் பழனியின் உடல் விமான நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன், மதுரை கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி.ஆனி விஜயா, எஸ்.பி.மணிவண்ணன், முப்படை அதிகாரிகள், பல்வேறு அமைப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின் ராணுவ மரியாதையுடன் உடல் வாகனத்தில் வைத்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அரசு நிதியுதவி வழங்கிய ஆட்சியர்
அரசு நிதியுதவி வழங்கிய ஆட்சியர்
உ.பாண்டி

வீரமரணம் அடைந்த பழனியின் உடல் சொந்த ஊரான கடுக்கலூருக்குக் கொண்டு வரப்படுவதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே பழனியின் உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுக்கலூரில் திரண்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், துணை ஆட்சியர் சுபபத்ரா, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் பழனியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறியதுடன் தி.மு.க சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர்.

இந்த நிலையில் ஹவில்தார் பழனியின் உடலை எதிர்பார்த்து பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர். லே பகுதியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்ட பழனியின் உடல் இன்று அதிகாலை 3.15 மணிக்கு ராணுவ டிரக் மூலம் கடுக்கலூருக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த அதிகாலை நேரத்திலும் தூங்காமல் காத்திருந்த பொதுமக்களும், பழனியின் உறவினர்களும் அவரது உடலைக் கண்டதும் கண்ணீர் விட்டுக் கதறினர். இதையடுத்து, சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சத்துக்கான காசோலையை பழனியின் மனைவி வானதிதேவியிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

பழனிக்கு ராணுவத்தினர் அஞ்சலி
பழனிக்கு ராணுவத்தினர் அஞ்சலி
உ.பாண்டி
`கிரகப்பிரவேசம் முடிந்த 3 வது நாள்' - லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் விடிய விடிய கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து. இன்று காலை பழனியின் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் தொடங்கின. பழனியின் 10 வயது மகன் பிரசன்னா தன் தந்தைக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தார். இதையடுத்து, பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு பழனியின் உடலுக்கு முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

பழனியின் உடல் அடக்கம்
பழனியின் உடல் அடக்கம்
உ.பாண்டி

இதையடுத்து, பழனியின் உடல் மீது வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை பழனியின் மனைவி வானதிதேவியிடம் ராணுவத்தினர் வழங்கினர். இதன்பின் பழனியின் உடல் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேசம் காக்கப் புறப்பட்டு இந்திய சீன எல்லையில் தன் நாட்டுக்காக தன்னுயிர் ஈந்த இராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான...

Posted by Vikatan EMagazine on Wednesday, June 17, 2020
அடுத்த கட்டுரைக்கு