கடைசியாக வாட்ஸ்அப் சாட்... தந்தையைப் போலவே தற்கொலை? - மர்ம மரணம் அடைந்த முன்னாள் முதல்வர் மகன்

ஷுபான்சோ சசெக்ஸ் பிரிக்ட்டனில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார் என்று அவரின் தாய் தெரிவித்துள்ளார்.
அருணாசலப் பிரதேச முதல்வராக 2016-ம் ஆண்டு 6 மாதம் பதவி வகித்தவர் கலிக்கோ புல். காங்கிரஸிலிருந்து பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி நடத்தியவர் உச்ச நீதிமன்ற உத்தரவால் ஆறே மாதத்தில் பதவியை இழந்தார். பதவியைப் பறிகொடுத்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார் கலிக்கோ. தற்கொலைக்கு முன்னதாகக் கடிதமும் எழுதி வைத்தார். அந்த 60 பக்கத் தற்கொலை கடிதத்தில் தற்போதைய முதல்வர் பெமா காண்டு உட்பட, நீதித்துறை மற்றும் மாநில அரசியலில் ஊழல் தொடர்பான சில முக்கிய பெயர்களைக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், இவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரின் முதல் மனைவி குற்றம்சாட்டி சி.பி.ஐ விசாரணை கோரினார்.

இதுதொடர்பான சர்ச்சைகள் இன்றும் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, கலிக்கோ புல்லுக்கும் முதல் மனைவி டங்விம்சைக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஷுபான்சோ புல். 20 வயதான இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு மேற்கொள்ள சென்றார். இந்நிலையில், இன்று ஷுபான்சோ சசெக்ஸ் பிரிக்ட்டனில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார் என்று அவரின் தாய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி வயர் ஊடகத்திடம் பேசியுள்ள அவரின் தாய் டங்விம்சை, ``நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். அவன் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆறு மாதங்களே ஆகின்றன. பல்கலைக்கத்துக்கு அவன் புதியவன். கடைசியாக பிப்ரவரி 8-ம் தேதி காலை வாட்ஸ்அப்பில் பேசினான். மறுநாள் காலை இட்டாநகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து அவன் கொலை செய்யப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர். பிப்ரவரி 8 மாலை அது நடந்தது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் காண்டுவின் அலுவலகத்திலிருந்து தனக்கு எந்த அழைப்பும் அல்லது வேறு தகவலும் கிடைக்கவில்லை.

டெல்லியில் உள்ள என் மூத்த மகன், இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டுள்ளார். ஷுபான்சோவின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர எங்களுக்கு சில உதவி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தேவைப்பட்டால், என் மூத்த மகன் இங்கிலாந்துக்குப் பயணம் செய்வான். என் கணவரின் மரணத்துக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இப்படி ஆகியிருக்கிறது. ஷுபான்சோ கொலை குறித்து குறைவான தகவல்களே எங்களுக்குக் கிடைத்துள்ளதால் யாரையும் சந்தேகிக்கவில்லை" என்று கூறியுள்ளார். ஷுபான்சோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் தாய் கூறியிருந்தாலும் ஊடகங்கள் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே இது தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகும்.