`தீக்குளித்த ஆட்டோ டிரைவர்… மூலவர் சந்நிதியில் உயிரிழந்த இளைஞர்' - அத்திவரதர் விழாவில் தொடரும் சோகம்!

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் இருவர் ஒரே நேரத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது காஞ்சிபுரம். மூன்றாவது நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் வழக்கம்போல நிறைந்திருந்தது. பச்சைப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அத்திவரதர். உள்ளூர் வாகனம் கோயில் பகுதியில் செல்லும் வகையில் ஷேர் ஆட்டோக்களுக்கு காவல்துறையினர் பாஸ் கொடுத்திருந்தனர். ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் காரணம் காட்டி நேற்று காலையிலிருந்து ஷேர் ஆட்டோக்களை போக்குவரத்து காவல்துறையினர் கோயில் பகுதியில் அனுமதிக்கவில்லை. மினி பேருந்துகள் மட்டுமே கோயில் பகுதியில் அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கருக்குப்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் தன்னுடைய ஷேர் ஆட்டோவை கோயில் பகுதி வழியாக ஓட்டிவந்தார். ஆனால், அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தனக்கு பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் என்னை அனுமதிக்கவில்லை என காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்தார். மாற்று வழியில் சென்ற அவர் சில நிமிடங்களில் பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். தீயை அணைக்க யாரும் முற்படாததால் சில நிமிடங்களில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரைக் காஞ்சிபுரம் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதி வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. `அந்த ஆட்டோ ஓட்டுநர் ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் உயிரிழப்புக்கு குடும்பப் பிரச்னையும் ஒரு காரணமாக இருக்கலாம்' என போலீஸார் கூறியுள்ளனர். இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த நாராயண ரெட்டி என்பவரின் மகன் ஆகாஷ்(22) என்ற இளைஞர் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவர் தேவராஜப் பெருமாளை செல்போனில் படம் எடுத்தார். உடனே அங்கிருந்த அர்ச்சகர்கள் அவரை எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அவரைத் தலையில் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மயக்கமுற்ற அந்த இளைஞர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ``காவல்துறையினர் அவரின் செல்போனில் உள்ள படத்தை மட்டுமே அழித்தனர். அவரைத் தாக்கவில்லை. அவருக்கு ஏற்கெனவே உடல்நலக்குறைவு இருந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்” எனக் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.