Published:Updated:

`சாவுக்கு யாரும் பொறுப்பல்ல; சொத்து யாருக்கு?!'-திருமண தோல்வியால் விபரீத முடிவெடுத்த பாலிவுட் நடிகர்

என்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பல்ல என்று கடிதம் எழுதிவைத்து விட்டு பாலிவுட் நடிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் குஷல் பஞ்சாபி
பாலிவுட் நடிகர் குஷல் பஞ்சாபி ( twitter )

பாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் குஷல் பஞ்சாபி. 37 வயதாகும் இவர் தனது மும்பை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று தனது மும்பை பிளாட்டில் தங்கியிருந்துள்ளார் குஷல். மதியம் 2 மணி அளவில் அவரது பெற்றோர் அவருக்குப் போன் செய்துள்ளனர். பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

இதனால் அவர் தங்கியிருந்த பிளாட்டுக்கு இரவு 10.30 மணி அளவில் வந்து பார்த்துள்ளனர். அங்கு தூக்கில் தொங்கியவாறு குஷல் இருக்க, உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் முன், குஷல் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

குஷல் பஞ்சாபி
குஷல் பஞ்சாபி
twitter

அதில், `எனது இறப்புக்கு யாரும் பொறுப்பல்ல. இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவு. எனது சாவுக்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. சொத்தில் பாதிப் பங்கை என் பெற்றோர் மற்றும் தங்கைக்கு எழுதி வைத்துள்ளேன். மற்ற பாதியை என் மகனுக்கு எழுதி வைத்துள்ளேன்' எனக் கூறியுள்ளார்.

டான்ஸர் மற்றும் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய குஷல் ஏராளமான டி.வி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இதுவே இவருக்கு பாலிவுட் பட வாய்ப்பையும் டிவி சீரியல் வாய்ப்பையும் தேடித்தந்தது. 20 டி.வி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் சல்மான் கானின் சலீம் இ இஷ்க், கரண் ஜோகரின் கால், பார்ஹான் அக்தரின் லக்ஷயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vikatan

மகாராஷ்ட்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட குஷல், ஐரோப்பாவைச் சேர்ந்த ஆட்ரி டோல்ஹென் என்ற பெண்ணைக் காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். தற்கொலைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகத்தான் குஷல் இன்ஸ்டாகிராமில் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

குஷல் தற்கொலையால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது. தற்கொலை கடிதத்தில் இறப்புக்கு யாரும் பொறுப்பில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சமீபகாலமாக சோகத்தில் நிறைந்துள்ளது என்று பகிர்ந்துகொண்டுள்ளனர் அவரது சினிமா நண்பர்கள்.

மனைவியுடன் குஷல் பஞ்சாபி
மனைவியுடன் குஷல் பஞ்சாபி
twitter

இதுதொடர்பாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ள பாலிவுட் நடிகர் சேட்டன் ஹன்ஸ்ராஜ், ``குஷல் டோல்ஹெனை காதலித்துக் கரம்பிடித்தார். நன்றாகத்தான் இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. குஷல் எங்களுடன் இல்லை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

ஓரிரு நாள்களுக்கு முன்பு நான் அவருடன் பேசினேன். நீண்ட நேரம் பேசினோம். குழப்பமான மனநிலையிலேயே பேசினார். ஆனால், அவர் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று நான் நினைத்ததில்லை.

Vikatan

குஷல் வேடிக்கையான மனிதர் மட்டுமல்ல பாசிட்டிவ்வான நபரும் கூட. தன்னைச் சுற்றி இருக்கும் நபர்களை எப்போதும் ஜாலியாக வைத்திருப்பார். நாங்கள் 20 ஆண்டுக்கால நண்பர்கள். ஒன்றாகவே வளர்ந்தோம். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாது" எனக் கூறியுள்ளார்.

காதல் திருமணம் செய்தாலும் குஷலின் மனைவி சமீபத்தில் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அதுமட்டுமல்லால் குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மகன்மீது அதிக பாசம் வைத்திருந்த குஷலால் அந்தப் பிரிவை தாங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

குஷல் பஞ்சாபி
குஷல் பஞ்சாபி
twitter

மகனை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றும் அவர் தொடர்ந்து கூறிவந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எனினும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஷலின் தற்கொலை பாலிவுட் சினிமா மற்றும் டி.வி சீரியல் நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`காபி டே' சித்தார்த்தா தற்கொலை முதல் தீபிகாவின் அழுகை வரை! - 2019-ன் உளவியல் சிக்கல்கள்