Published:Updated:

சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்கும் தாய்!

புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
புகழேந்தி

என் புள்ளை குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கிடந்தபோது, ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ்காரங்க எனக்கு ஆறுதல்கூடச் சொல்லலை

சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்கும் தாய்!

என் புள்ளை குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கிடந்தபோது, ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ்காரங்க எனக்கு ஆறுதல்கூடச் சொல்லலை

Published:Updated:
புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
புகழேந்தி

புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டி பகுதியிலுள்ள போலீஸ் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து, புகழேந்தி எனும் சிறுவன் துடிதுடித்து இறந்த சம்பவம் கடந்த ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது. சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கிய தமிழக அரசு, வழக்கு விசாரணையில் மெத்தனம் காட்டுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

புகழேந்தியின் தாய் பழனியம்மாள் நம்மிடம் பேசுகையில், “என் புள்ளை குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கிடந்தபோது, ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ்காரங்க எனக்கு ஆறுதல்கூடச் சொல்லலை. அவசர அவசரமா என் புள்ளையோட டவுசரைக் கழட்டிக்கிட்டுப் போனவங்க, துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் அந்த டவுசரைப் போட்டு, மோப்ப நாயைவெச்சு சோதிச்சிருக்காங்க. அதாவது, குண்டு பொறுக்கப் போனப்பதான் பையன் அடிபட்டுட்டான்னு சொல்லி கேஸை மாத்தப் பார்த்தாங்க. ஆனா அது முடியலை.

பழனியம்மாள்
பழனியம்மாள்

இப்பவும்கூட, விசாரணை என்னாச்சுன்னு ஸ்டேஷன்ல போய்க் கேட்டா, ‘அதுல சொல்றதுக்கு என்ன இருக்கு’ன்னு சொல்லி அனுப்பிடுறாங்க. ஏழைங்களுக்கு நிதி கொடுத்தாலே போதும், நீதியெல்லாம் எதுக்குன்னு நினைக்கிறாங்கபோல. வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே அவன் நெனப்புதான் வருது. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடுது. ‘சாமிகிட்டப் போன அண்ணன் எப்பம்மா வருவான்’னு என் மகள் கேட்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லுறது?” என்று அழுதேவிட்டார்.

இந்த விவகாரம் பற்றிப் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை, “எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் சுற்றிலும் தடுப்புகள் இல்லாத பாறையின் மறைவில் அலட்சியமாகப் பயிற்சியை மேற்கொண்டதால்தான், சிறுவன் புகழேந்தி உயிரிழந்திருக்கிறான். சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் கொடுத்ததுபோல மத்திய அரசும் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். போலீஸ் அல்லது சி.ஐ.எஸ்.எஃப் என யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்கும் தாய்!

வழக்கை விசாரிக்கும் அதிகாரியான கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், “பயிற்சி மேற்கொண்ட போலீஸாரிடம் அன்றே துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அதையும், சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டையும் சென்னையிலுள்ள ரசாயன பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். துப்பாக்கியின் இயக்கம், குண்டின் ஊடுருவல் குறித்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்ததும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

சின்னதுரை
சின்னதுரை

இறந்தது பெரிய இடத்துப்பிள்ளை என்றாலும் இப்படித்தான் காலதாமதம் செய்வீர்களா கனவான்களே?