Published:Updated:

அதீதப் பாசம்... தடபுடல் ஏற்பாடு!- தங்கைக்கு விடிந்தால் திருமணம்; இரவில் அண்ணனுக்கு நடந்த துயரம்

தனபால்
தனபால்

வீட்டைவிட்டு வெளியே சென்ற தனபால் திரும்பி வரவேயில்லை. இதனால், தங்கையின் திருமணம் நின்று போனதும்தான் சோகம்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள குருவம்பட்டி, காட்டுவீதி பகுதியே கடந்த மூன்று நாள்களாகச் சோகத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம்-செல்லம்மாள் தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் மகன் தனபால் உள்ளனர். ஏற்கெனவே இரண்டு மகள்களுக்குத் திருமணம் ஆனநிலையில், இளையமகள் மீனா மற்றும் தனபால் உள்ளிட்ட இருவருக்கும் திருமணமாகவில்லை.

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

சிறுவயதிலிருந்தே, மீனாவும், தனபாலும் அதீதப் பாசமாக இருப்பார்கள். பெயின்டரான இவர், தங்கையின் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தார். தங்கை திருமணம் முடிந்தே, திருமணம் என தனபால் இருந்தாராம். இந்நிலையில், மீனாவுக்கும், திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-சரோஜா தம்பதியின் மகன் குமரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தங்கையின் திருமணத்துக்கான வேலைகள் நடந்தநிலையில், அழைப்பிதழ்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார் தனபால். அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு, மாப்பிள்ளை வீட்டார் பெண் அழைக்க வந்திருந்தனர். இந்நிலையில், அதற்கான பணிகளில் இருந்த தனபால், அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் அவசரத்துக்காக ஒதுங்கினார்.

தனபால்
தனபால்

அந்தப் பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால், அங்கு சென்ற தனபால் கால் இடறி அப்பகுதியில் இருந்த தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் தனபால் திரும்பவில்லை என்பதால், அவரைத் தேடி உறவினர்கள் அலைந்தனர்.

`எங்களால் மட்டும் முடியாது; மக்களும் இணைய வேண்டும்..!' - பேரிடர் மேலாண்மை குறித்து ராதாகிருஷ்ணன்

வயல்வெளிப்பகுதியில் தனபாலைக் காணாதநிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் கிணற்றில் பார்த்தபோதுதான், தனபால் தலையில் அடிப்பட்டு கிணற்றுக்குள் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தனபாலை மீட்டு திருச்சி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துபோனதாகக் கூறினர். தொடர்ந்து தனபாலின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு திங்கள் கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி வாத்தலை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அண்ணனின் மரணச்செய்திகேட்டு, தங்கை மீனா உள்ளிட்ட உறவினர்கள் கதறியழுதது அப்பகுதி மக்களைக் கண்கலங்க வைத்தது. திருமண விழாவுக்கு வந்திருந்த பலர், தனபாலின் மரணத்தால் கதறி அழுதனர். இந்நிலையில், அண்ணன் தனபாலின் மரணத்தால் தங்கை மீனாவின் திருமணம் நிறுத்தப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.

``கவலைப்படாதே, தப்பித்துப் போ!''-போதைக் கும்பலிடமிருந்து காதலியை காப்பாற்றிய காதலனின் கடைசி நிமிடம்

ஒரு பக்கம் அண்ணன் மரணம், அடுத்த பக்கம் மீனாவின் திருமணம் தள்ளிப் போனது உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதி பெரும்சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், தங்கள் பகுதிகளில் ஏதேனும் பாழடைந்த மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக வருவாய்த்துறை எண்களான 1070 மற்றும் 1077 உள்ளிட்ட எண்களுக்குத் தொடர்புகொண்டு சொல்லலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு