Published:Updated:

“பாட்டு நமக்குக் கிடைத்த மாபெரும் வரம்!”

டி.வி.சங்கரநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
டி.வி.சங்கரநாராயணன்

படம்: ராமநாதன் ஐயர்

“பாட்டு நமக்குக் கிடைத்த மாபெரும் வரம்!”

படம்: ராமநாதன் ஐயர்

Published:Updated:
டி.வி.சங்கரநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
டி.வி.சங்கரநாராயணன்

கடந்த வெள்ளியன்று காலை என்றும்போலவே விடிந்திருக்கிறது கர்னாடக இசைப் பாடகர் டி.வி.சங்கரநாராயணனுக்கு. காபி குடித்து, நாளிதழில் பார்வையை ஓடவிட்டு, குளித்துவிட்டு, தன்யாசியை ‘ஹம்' செய்தபடியே தலை துவட்டி... என்று எந்த மாறுதலும் இல்லாமல்தான் நாள் நகர்ந்திருக்கிறது. அன்று பின்மாலைப் பொழுதில் வீட்டினருடன் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று அருகில் இருந்த நாற்காலியில் சரிந்துவிட்டாராம். முதலுதவி கொடுக்கும் வரை காத்திராமல் உயிர் பிரிந்துவிட்டது, 77 வயது சீனியர் சங்கீத வித்வானுக்கு.

பாடும் எந்தக் கச்சேரியையும் ஜனரஞ்சகமாகவும் கலகலப்பாகவும் அமைத்து விடுவார் டி.வி.எஸ். அடுத்தடுத்து அபூர்வமான, அதிகம் கேட்டிராத ராகங்களையே பாடி கேட்பவர்களை டென்ஷனாக்காமல், எளிமையான, பாமர ரசிகனுக்கும் பரிச்சயமான பண்களையே பாடுவார். சுருதி சுத்தம் நூறு சதவிகிதம் இருக்கும். ராக ஆலாபனைகளைப் படிப்படியாக வளர்த்து, அழகுப்பதுமையாக்கி, மேல் ஸ்தாயியில் குரலின் கம்பீரம் சிறிதும் குறையாமல் பயணித்து, புறப்பட்ட இடத்துக்கு வந்திறங்குவார். இடது கையை மேல் தூக்கி அசைத்துப் பாடல் வரிகளை இவர் பாடும்போது சொற்கள் சேதமடையாது. மோகனம், காம்போதி, கல்யாணி, கரகரப்ரியா மாதிரியான ராகங்களில் அமைந்த பாடல்களுக்கு, தாய் மாமன் மதுரை மணி ஐயர் முத்திரையுடன் சங்கரநாராயணன் ஸ்வரம் பாடுவதைக் கேட்கும்போது, மிதமான மழைச்சாரல் நம்மைத் தழுவும் சிலிர்ப்பு ஏற்படும்.

டி.வி.சங்கரநாராயணன்
டி.வி.சங்கரநாராயணன்

அதேபோல் விருத்தங்கள் பாடுவதிலும் முடிசூடாத மன்னராகத் திகழ்ந்தவர். வெவ்வேறு மாடுலேஷனில் பாசுரங்களை விருத்தமாகப் பாடிப் பரவசப்படுத்துவார்.

‘டி.வி.எஸ்' என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்லுக்குச் சொந்தக்காரரான சங்கரநாராயணன், 1968-ம் வருடம் பிப்ரவரி 2-ம் தேதி ராயப்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் முதல் கச்சேரி செய்திருக்கிறார். வணிகமும் சட்டமும் படித்தவர். வக்கீல் தொழில் புரியவா அல்லது இசையைத் தொழிலாகக் கொள்ளவா என்ற கேள்வி எழுந்தபோது நம்பிக்கையோடு ஏழு ஸ்வரங்களைத் தேர்வு செய்து, மதுரை மணி ஐயரின் காலடியில் அமர்ந்து கற்றுத் தெளிந்து மளமளவென்று முன்னுக்கு வந்தவர் டி.வி.எஸ்.

சங்கரநாராயணனுக்கு ஆசைக்கொன்றும் ஆஸ்திக்கொன்றுமாக இரு வாரிசுகள். மகள் அமிர்தா மணமாகி பெங்களூரில் வசிக்கிறார். மகன் மகாதேவன் சென்னையில். இருவருக்கும் தமது சங்கீத சொத்தைப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.

‘‘அப்பா வீட்டில் இருந்தால் எப்பவும் ஜாலியாக இருக்கும். பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசுவார். எதிர்மறையாக ஒரு வார்த்தை பேசமாட்டார். சக கலைஞர்கள் அத்தனை பேருடனும் நட்பு பாராட்டுவார். ‘பாட்டு நமக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். தலைக்கனமில்லாமல் பிறரோடு பண்புடனும் பணிவுடனும் பழகணும்' என்பதை வலியுறுத்திக்கொண்டே இருப்பார். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். இரு மொழிகளிலும் கவிதையெல்லாம் எழுதுவார். கெட்ட பழக்கம் அவருக்கு எதுவும் கிடையாது. ஸ்வீட் பீடாகூட போட மாட்டார்...'' என்றபோது மகாதேவனுக்குக் குரல் உடைந்தது. பட்டப்படிப்புகள் முடித்திருக்கும் இவருக்கு இசையே முழுநேரத் தொழில்.

“பாட்டு நமக்குக் கிடைத்த மாபெரும் வரம்!”

பாடகர் ஆர்.சூர்யபிரகாஷ், டி.வி.சங்கரநாராயணனின் சீடர். தனது 18 வயதில் வாத்தியாரிடம் சேர்ந்தார். ‘‘உட்கார வைத்து சார் கிளாஸ் எடுத்ததெல்லாம் அபூர்வம். நினைத்த நேரத்தில் பாடுவார். நான் எழுதிக் கொள்வேன். ஒரு முறை வகுப்பு முடிந்ததும் என்னுடன் சார் வாசல் வரை வந்தார். அங்கே தூணில் சாய்ந்தபடியே அவர் பாடிய பேகடா சங்கதிகள் என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'' என்றார் சூர்யபிரகாஷ்.

இவருடைய திருமண வரவேற்புக்கு சார் கச்சேரி செய்வதாக இருந்தது. எதிர்பார்க்காமல் வரவேற்பு ரத்தாகிவிட, ஒரு வருடம் கழித்து இவரது பெற்றோரின் திருமண நாள் அன்று மும்பை வந்திருந்து பாடியிருக்கிறார் டி.வி.சங்கரநாராயணன்.

வரும் டிசம்பர் விழாவில் பாடுவதற்கு இவரிடம் தேதிகள் வாங்கி வைத்திருந்தன சபாக்கள் சில. ‘‘சீசன்ல டி.வி.எஸ் பாடும் அத்தனை கச்சேரிகளையும் ஒன்று விடாமல் கேட்பேன்'' என்று கூறும் ‘சங்கரநாராயண பக்தர்கள்' ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.

இரு தரப்பினருக்கும் டி.வி.எஸ்-ஸின் திடீர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி.