தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரைமுத்து. 65 வயது விவசாயியான அவருக்குச் சொந்தமான நிலம், அதே பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட்டிருந்தார்.

இரவு நேரத்தில் காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் தோட்டத்துக்குள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் விலங்குகளிடம் இருந்து தோட்டப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அனுமதியில்லாமல் மின்வேலி அமைத்துள்ளது பற்றி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மின்வேலிக்குப் பயன்படுத்தியது தெரியவந்ததால், மின்சாரத் துறையினரையும் அழைத்துக்கொண்டு வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
அதன் பின்னர் இரவு 11.30 மணிக்கு அணைக்கரைமுத்து வீட்டுக்குச் சென்ற வனத்துறையினர், அவரை வாகனத்தில் ஏற்றி கடையத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில், நள்ளிரவில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அணைக்கரைமுத்து நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தபோதிலும், அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். அதனால் வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அணைக்கரைமுத்து குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பூங்கோதையும் சாலைமறியலில் ஈடுபட்டார். அவர்களுடன் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வனத்துறையினர் மீது கொலைவழக்கு பதிய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தினார்கள்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வனத்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் பெயர் எதுவும் குறிப்பிடாத போதிலும் வழக்குப் பதிவானது. அத்துடன் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன்படி, அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். உயிரிழந்த அணைக்கரைமுத்து உடலில் இருந்த காயங்களையும் அவர் பார்வையிட்டார். அதிகாரிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், உறவினர்கள் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது.