Published:Updated:

` `மெர்சல்’ படத்தின் நிஜ ஹீரோ; வடசென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவு!’ - சோகத்தில் மக்கள்

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்
5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்

`மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய், 5 ரூபாய் டாக்டராக நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக `5 ரூபாய் டாக்டர்’ என மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம் நேற்றிரவு உயிரிழந்தார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பேட்ஜ் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டராக பணியாற்றிய அவர், மருத்துவத் தொழிலை சேவையாகவே கருதினார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அவர் பெட்ரோலியத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவையாற்றினார். பணி நேரம் தவிர்த்து, மீதமுள்ள நேரங்களில் வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக, குறைந்த கட்டணத்தில் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் சிகிச்சையளித்துவந்தார்.

டாக்டர் திருவேங்கடம்
டாக்டர் திருவேங்கடம்

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் டாக்டர் திருவேங்கடத்தைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். டாக்டர் ஃபீஸாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் அவரின் பெயரைவிட `5 ரூபாய் டாக்டர்’ என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். சிகிச்சைக்கு வருபவர்களிடம் அன்பாகப் பழகக்கூடிய திருவேங்கடத்தின் சிரிப்பை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. 2017-ம் ஆண்டு `சிறந்த மனிதர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. புகழுக்கும் பெயருக்கும் ஆசைப்படாத டாக்டர் திருவேங்கடம், தன்னுடைய சேவையை மட்டும் கடைசிவரை தொடர்ந்தார்.

எளிமையாகவே வாழ்ந்துவந்தார் `5 ரூபாய் டாக்டர்’ திருவேங்கடம். `வியாசர்பாடியில் ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டி சிகிச்சையளிக்க வேண்டும்’ என்பதே ஏழைகளின் டாக்டர் திருவேங்கடத்தில் நீண்டநாள் கனவு. ஆனால், அந்தக் கனவு நிறைவேறுவதற்குள், அவர் மரணமடைந்த செய்தி ஏழைகளின் காதுகளில் இடியாக நேற்று கேட்டது. கொரோனா ஊரடங்கு என்பதால், நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் மனசுக்குள் டாக்டரின் சேவைகளை நினைவுகூர்ந்தனர்.

டாக்டர் திருவேங்கடம்
டாக்டர் திருவேங்கடம்

`5 ரூபாய் டாக்டர்’ திருவேங்கடத்தின் மனைவி சரஸ்வதி, ரயில்வே அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மகன் தீபக், மகள் ப்ரீத்தி ஆகியோர் டாக்டர்கள். கொரோனா ஊரடங்கில் மக்களைச் சந்திக்க முடியாததால், போனிலேயே என்ன பிரச்னை எனக் கேட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கிவந்தார். அதனால் அவரின் போன் எப்போதும் பிஸியாகவே இருந்தது. இந்தச் சமயத்தில் கடந்த 13-ம் தேதி டாக்டர் திருவேங்கடத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். நேற்று நள்ளிரவில் டாக்டர் திருவேங்கடத்துக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி கேட்டு வடசென்னை மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Vikatan

`5 ரூபாய் டாக்டர்’ திருவேங்கடத்தின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தித்தான் `மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய், 5 ரூபாய் டாக்டராக நடித்திருப்பார். டாக்டர் திருவேங்கடத்திடம் எப்படி உங்களால் மட்டும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க முடிகிறது என்று கேட்டால் ``நாம் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளில் 90 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு மருந்தைப் பயன்படுத்தினால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிக்க முடியும். இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகளுக்கும் 10 ரூபாய் முதல் 50 ரூபாயே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். இதுதான் இலவச மருத்துவத்துக்கான முதல்படி” என்று சிரித்தபடி அடிக்கடி சொல்வார்

டாக்டர் திருவேங்கடம்
டாக்டர் திருவேங்கடம்
Vikatan

டாக்டர் திருவேங்கடத்தின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த உலகத்தைவிட்டு `5 ரூபாய் டாக்டர்’ திருவேங்கடம் மறைந்திருந்தாலும், அவரின் நினைவுகள் என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு