Published:Updated:

கனவைக் கலைத்த கல்வி வளாகம்!

Fathima Latheef
பிரீமியம் ஸ்டோரி
News
Fathima Latheef

ஃபாத்திமாவின் அப்பா லத்தீப், சவுதி அரேபியாவில் பிசினஸ்மேன். ஃபாத்திமாவும், ஆயிஷாவும் எட்டாம் வகுப்புவரை ரியாத்தில்தான் படித்திருக்கிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த கேரள மாணவி ஃபாத்திமாவின் மரணம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது. ‘முறையான விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையோடு மாணவர்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஒருகுடையின் கீழ் இணைந்திருக்கிறார்கள். இத்தனை பரபரப்புகளுக்கு இடையில், ஃபாத்திமா வளர்ந்த கொல்லம் பிரியதர்ஷினி நகர் தன் மகளை இழந்த சோகத்தில் வெறுமையாய் இருளில் அமர்ந்திருக்கிறது. “அப்துல் லத்தீப்பிற்கும் ஸஜிதாவிற்கும் கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷமா குழந்தை இல்லாம இருந்தது. ஒரு குழந்தைக்காக வேண்டியவர்களுக்குக் கடவுள் இரண்டு குழந்தைகளாகக் கொடுத்தார். இரட்டையர்களான ஃபாத்திமாவும் ஆயிஷாவும் ஒருத்தர்மேல ஒருத்தர் ரொம்பப் பாசமா இருந்தாங்க. ஃபாத்திமா ஐ.ஏ.எஸ் ஆகி மக்கள் சேவை செய்யணும்னு ஆசைப்பட்டாள், ஆயிஷா திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் படிக்கிறாள். ஃபாத்திமா இறந்ததில இருந்து மொத்தக் குடும்பமும் நொறுங்கிப்போய்டுச்சு” என்று கண்ணீர்வடிக்கிறார் ஃபாத்திமாவின் சித்தி பிஜிதா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஃபாத்திமாவின் அப்பா லத்தீப், சவுதி அரேபியாவில் பிசினஸ்மேன். ஃபாத்திமாவும், ஆயிஷாவும் எட்டாம் வகுப்புவரை ரியாத்தில்தான் படித்திருக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பில் ஊருக்கு வந்தவர்கள் கொல்லத்தில் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி-யில் படித்து ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வளர்த்திருக்கிறார் ஃபாத்திமா.

Fathima Latheef
Fathima Latheef

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபாத்திமாவுடன் பிறந்த ஆயிஷாதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமான மொபைல்போன் பதிவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறார், “நாங்க ட்வின்ஸ். எங்களுக்கு அடுத்ததாக மர்யம் என்ற தங்கை இருக்கிறாள். ஃபாத்திமாவும் நானும் பத்தாம் கிளாஸ் வரைக்கும் ஆக்ஸ்போர்டு பள்ளியில ஒரே கிளாஸ்ல படிச்சோம். 11-ம் வகுப்புல நான் சயின்ஸ் குரூப் எடுத்தேன். ஃபாத்திமா ஹியூமானிட்டி படித்தாள். ஐ.ஏ.எஸ் ஆகும் ஆசையில் ஐ.ஐ.டி-யில் படிக்க நுழைவுத்தேர்விற்குச் சொந்த முயற்சியில் தயாரானாள். நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்து ஜூலை மாதம் ஐ.ஐ.டி-யில் சேர்ந்தாள். அடிக்கடி அப்பா ஐ.ஐ.டி-க்குப் போய் ஃபாத்திமாவைப் பார்த்துவிட்டு வருவார். போன மாதம் (அக்டோபர்) ஒன்றாம் தேதியில இருந்து 8-ம் தேதி வரை ஃபாத்திமா விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது கொஞ்சம் சோகமாக இருந்தாள். எங்களை விட்டுப் பிரிந்து செல்வதால் அப்படி இருக்கிறாள் என நினைத்தோம். கடந்த நவம்பர் 7-ம் தேதி இரவு என்னிடம் வீடியோ காலில் பேசினாள். அப்போதும் சோகமாகவே இருந்தாள். நவம்பர் 9-ம் தேதி காலை 11.30 மணியளவில் ஹாஸ்டல் வார்டனான பேராசிரியை லலிதாதேவி எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார். நாங்கள் பதறியடித்துக் கொண்டு சென்னை சென்றோம். போய்ச் சேர இரவாகிவிட்டதால் உடலைக் காலையில்தான் பார்க்கமுடியும் என ஐ.ஐ.டி-யைச் சேர்ந்தவர்கள் சொன்னார்கள். அடுத்தநாள் நான் கோட்டூர் புரம் காவல்நிலையத்திற்குச் சென்றேன். அங்குதான் ஃபாத்திமாவின் மொபைல் போன் இருந்தது. அதை ஆன் செய்தபோது ஸ்கிரீன் சேவரில் தன் மரணத்திற்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் எனப் பதிந்து வைத்திருந்தாள். மேலும் மொபைலில் சுமார் 20 பக்கங்களில் சில விவரங்களை எழுதி வைத்திருந்தாள். எல்லா ஆவணங்களையும் நான் எனது மொபைலுக்கு மாற்றினேன். அவற்றை கோர்ட்டில் ஒப்படைப்போம். ஃபாத்திமாவை மென்டல் டார்ச்சர் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. யாரோ அவளை மிகவும் பயமுறுத்தி யிருக்கிறார்கள். வேறு என்ன தொந்தரவுகள் இருந்தது என்று முழுமையாகத் தெரியவில்லை.

சிறுவயதிலிருந்தே அவள் படிப்பில் நம்பர் ஒன்தான். 12-ம் வகுப்பில் 99.8 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருந்தாள். பாடங்களைத் தவிர்த்து புத்தக வாசிப்பிலும் அவளுக்கு அதீத ஆர்வம் இருந்தது. வீட்டில் மினி லைப்ரரியே வைத்திருக்கிறாள்.

பெற்றோர்
பெற்றோர்
Fathima Latheef relation
Fathima Latheef relation

ஆனால் சென்னை போலீஸ் எல்லாத் தற்கொலை வழக்கு களையும் அணுகுவதுபோலவே இதையும் அணுகுகிறது. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அவளை அந்த முடிவிற்கு யாரோ தள்ளியிருக்கிறார்கள் என்பது குறித்துப் பேச ஒருவரும் தயாராக இல்லை. அவரது ரூமில் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கியிருந்தார். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் ஊருக்குச் சென்று விடுவார். சனிக்கிழமை அந்த மாணவி ஊருக்குச் சென்றபிறகு ஃபாத்திமா இறந்ததால் அவருக்கும் எதுவும் தெரிய வில்லை என்கிறார். ஃபாத்திமா வோடு படிப்பவர்களும் என்ன காரணம் என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள். ‘பாத்திமா பாவம், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்’ என்பதுபோன்ற வாசகங்கள் மட்டுமே சக மாணவர்களிடம் இருந்து பதிலாக வருகின்றன.

ஃபாத்திமா ஐ.ஏ.எஸ் ஆன பிறகு மக்களுக்கு சேவை செய்வதற்காக அனைத்துத் துறைகளைக் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படித்துக்கொண்டே இருப்பாள். ஐ.ஐ.டி-யில் முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிபெற்றதற்காகக் கேரள மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பாராட்டி, கேடயம் வழங்கினார்கள். இப்படிக் கேடயங்கள் வாங்கிக் குவித்த, கனவுகளைச் சுமந்த ஃபாத்திமாவை இன்று இழந்துவிட்டு நிற்கிறோம். ஐ.ஐ.டி-யில் பிரஷரும், டார்ச்சரும் அதிக அளவில் இருந்திருக்கிறது. எத்தனையோ ஃபாத்திமாக்கள் இறந்திருக்கி றார்கள், முதன்முறையாக இந்த ஃபாத்திமாவின் மரணம் பெரிய அளவில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபாத்திமாவிற்கு தன்னை புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கிடையாது. ஆனால் இப்போது அவை மட்டுமே எங்களிடம் மிச்சமிருக்கின்றன” என இறுக்கமாய் முடிக்கிறார் ஃபாத்திமாவின் சகோதரி ஆயிஷா.

கனவைக் கலைத்த கல்வி வளாகம்!
கனவைக் கலைத்த கல்வி வளாகம்!

சென்னை சென்ற ஆயிஷாவிற்குத் துணையாக உடன்சென்ற கொல்லம் மாநகராட்சி மேயர் ராஜேந்திர பாபுவிடம் பேசினோம். “காவல் நிலையத்திற்குச் சென்றபோது ஃபாத்திமாவின் மொபைல் போனை நீங்கள் எடுத்திட்டுப் போங்க என்று முதலில் சொன்னார்கள். அதன்பிறகு விசாரணைக்கு வேண்டும் என்று மொபைலை வாங்கிவைத்துக் கொண்டார்கள். போலீஸ் விசாரணையின்போது எங்கள் முன்னிலையில்தான் அந்த மொபைலில் இருந்து ஆவணங்களை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போலீசுக்கு மெயில் அனுப்பி யிருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி அதிகமாகத் தற்கொலை நடக்கும் கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி ஐ.ஐ.டி-யில் மாணவி களின் தற்கொலைக்குக் காரணமானவர்களை வெளியேற்ற வேண்டும்” என்றார்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக டி.ஜி.பி-யையும் முதல்வரையும் சந்தித்து, மகள் மரணத்தின் மர்மங்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கிறார். அவர் வரிசையாக எடுத்துரைக்கும் சில சந்தேகங்கள் நியாயமானவை. “எல்லாத் தேர்வுகளையும் சாதாரணமாக எதிர்கொள்ளும் அவள் தேர்வுத்தாள்களை வாங்கச் செல்வதில் எந்தத் தயக்கமும் காட்டமாட்டாள். 8.11.2019 அன்று பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்குவதற்கு நேரில் செல்லாமல் தன் தோழியான ஒரு மாணவியை அனுப்பி விடைத் தாளை வாங்கியிருக்கிறாள். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கு பயந்து அவள் அப்படி நடந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். வீட்டில் என்ன நடந்தாலும் அதை எழுதிவைக்கும் பழக்கம் ஃபாத்திமாவிற்கு உண்டு. தற்கொலை செய்த சமயத்திலும் எழுதி வைத்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எப்.ஐ.ஆரில் கடிதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. என் மகளின் இறப்புக்குப் பிறகு விடுதி அறையில் சென்று பார்த்தோம். அவளின் பொருள்கள் தரைமுழுக்க சிதறி அறையே அலங்கோலமாக இருந்தது. அவள் இறந்தபின் அவளது அறைக்குள் யாரோ சென்று எதையோ தேடியிருப்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. அவள் மொபைலில் பதிந்து வைத்திருப்பதுபோல அவளின் மரணத்திற்கு சுதர்சன் பத்மநாபன்தான் முக்கிய காரணம். வேறு சில பேராசிரியர்களும் அதற்குத் துணைநின்றிருக்கிறார்கள்” எனக் கூறும் அப்துல் லத்தீப் “அனைத்து விதங்களிலும் என் மகளை பயமுறுத்தியிருக்கி றார்கள்” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

Fathima Latheef
Fathima Latheef

பெருங்கனவுகளோடு ஐ.ஐ.டி வளாகத்தில் அடியெடுத்து வைத்த அந்த இளம் மாணவியின் இறுதி அத்தியாயத்தை, அவள் மிகவும் நேசித்த கல்வி வளாகமே எழுதியிருக்குமாயின், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.