Published:Updated:

துடிப்பை நிறுத்திய மருத்துவக் கல்லூரி மாணவியின் இதயம்! - viscera ரிப்போர்ட்டால் விலகிய மர்மம்

மருத்துவக் கல்லூரி மாணவி பிரதீபா
மருத்துவக் கல்லூரி மாணவி பிரதீபா

சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவியும் பயிற்சி டாக்டருமான பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான விஸ்சேரா ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தகவல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரி, சிஎம்சி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன மேலாளர். இவரின் மகள் பிரதீபா. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். கடந்த 30.04.2020 - ம் தேதி காலை முதல் இரவு 08.00 மணி வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பிரதீபா பணியாற்றினார். ஊரடங்கு காரணமாக வீட்டுக்குச் செல்லாத பிரதீபா, விடுதியில் அறை எண் 8-ல் தங்கியிருந்தார்.

பயிற்சி டாக்டர் பிரதீபா
பயிற்சி டாக்டர் பிரதீபா
மாணவி பிரதீபாவின் விஸ்சேரா ரிப்போர்ட்டில் அவரின் மரணத்துக்கான காரணமாக இதய வால்வு பிரச்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூங்கிக் கொண்டிருந்த மாணவி பிரதீபாவின் இதயத் துடிப்பு திடீரென நின்றுள்ளது.
டாக்டர்

மே 1-ம் தேதி பிரதீபா கண்விழிக்கவில்லை. அவரின் சடலத்தை மீட்ட கீழ்ப்பாக்கம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிரதீபா சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூரில் அவரின் இறுதி அஞ்சலி நடந்தது. மருத்துவக்கல்லூரி மாணவி பிரதீபா எப்படி இறந்தார் என்பதற்கான விடை பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதீபா இறப்பதற்கு முன் அவரின் அம்மாவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது தனக்குக் கால் வலிப்பதாகவும், வேலைப்பளு குறித்தும் பேசியுள்ளார். அதைக்கேட்ட பிரதீபாவின் அம்மா, ஓய்வெடுக்கும்படியும் நேரம் தவறாமல் சாப்பிடும்படியும் கூறியுள்ளார். அதன்பிறகுதான் பிரதீபா மரணமடைந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் மரணம் தொடர்பாக எந்தவிதத் தடயங்களும் சிக்கவில்லை என்று போலீஸார் கூறினர். அதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸாரும் பிரதீபாவின் பெற்றோரும் காத்திருந்தனர்.

பிரதீபா தொடர்பான பதிவு
பிரதீபா தொடர்பான பதிவு

மாணவி பிரதீபா, கொரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா இல்லை என்பது உறுதியானது. அதனால் மாணவி பிரதீபா, பூட்டிய அறைக்குள் எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் போலீஸார் குழப்பமடைந்தனர். செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தபோது அதிலும் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.

இந்தச் சூழலில் பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில முக்கியத் தகவல்களை போலீஸாரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``மாணவி பிரதீபாவின் பிரேதப் பரிசோதனை (viscera) விஸ்சேரா ரிப்போர்ட்டில் இதய வால்வில் பிரச்னை ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால் மாணவியின் மரணம் இயற்கையானதுதான்" என்றார்.

இதுகுறித்து பிரேதப் பரிசோதனையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட மூத்த மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, பிரேதப் பரிசோதனையின்போது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடலில் உள்ள முக்கிய பாகங்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைப்போம். அந்த முடிவு அடிப்படையில்தான் இறுதி பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். அதற்கு முன்னதாக விஸ்சேரா என்ற ரிப்போர்ட்டில் மரணத்துக்கான காரணம் குறித்த முக்கியத் தகவல்களைக் குறிப்பிடுவோம்.

`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்

மாணவி பிரதீபாவின் விஸ்சேரா ரிப்போர்ட்டில் அவரின் மரணத்துக்கான காரணமாக இதய வால்வு பிரச்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூங்கிக் கொண்டிருந்த மாணவி பிரதீபாவின் இதயத் துடிப்பு திடீரென நின்றுள்ளது. அதற்கான காரணங்களும் அந்த ரிப்போர்ட்டில் நிச்சயம் குறிப்பிடப்பட்டிருக்கும். விஸ்சேரா ரிப்போர்ட்டை பார்த்தபிறகே முழுத் தகவல்களைச் சொல்ல முடியும். மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அவரின் ரத்த சொந்தமான ஒருவருக்கும் காவல்துறைக்கும் மட்டுமே கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்படாது" என்றார்.

19 நாள்களுக்குப் பிறகு மாணவி பிரதீபாவின் மரணத்தின் மர்மம் விலகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு