Published:Updated:

``என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்"- கண் தெரியாத சென்னை மூதாட்டியின் கண்ணீர்க் கதை

மூதாட்டி
மூதாட்டி

``என் கணவர் இறந்துவிட்டார், அவரை அடக்கம் செய்ய உதவி செய்யுங்கள்" என்று கண்தெரியாத மூதாட்டி கண்ணீர்மல்க உதவி கேட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில், வயதான தம்பதியினர் பிளாட்பாரத்தில் தங்கியிருந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு 3 வேளையும் சாப்பிட உணவு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. அவ்வழியாகச் செல்பவர்கள் கொடுக்கும் உணவுமூலமே அந்தத் தம்பதியினர் நாள்களைக் கடத்திவந்தனர்.

Vikatan

இந்த நிலையில், கணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த நல்உள்ளம் படைத்த சிலர், முதியவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், முதியவரை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் மீண்டும் பிளாட்பாரத்தில் தங்களின் வீடான தள்ளுவண்டியிலேயே தங்கப்பன் படுத்திருந்தார். அங்கேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அதைக்கூட அந்த மூதாட்டியால் (ஜெயா) உணர முடியவில்லை. எந்தவித அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் தங்கப்பன் படுத்திருந்ததால் ஜெயா, அவரை தட்டிப்பார்த்தார். அப்போதுகூட அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்தே, தங்கப்பன் இறந்ததை மூதாட்டி ஜெயா உணர்ந்தார். அதன்பிறகு, அவ்வழியாகச் செல்பவர்களிடம் ஜெயா, உதவி கோரியுள்ளார்.

அதில் இரக்கப்பட்ட சிலர், தங்கப்பன், பிளாட்பாரத்தில் இறந்து கிடப்பது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், 12 மணி நேரத்துக்குப் பிறகுதான் காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் முதியவரின் சடலம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, மயிலாப்பூர் போலீஸார் வழக்குபதிந்து விசாரித்துவருகின்றனர்.

``என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்"- கண் தெரியாத சென்னை மூதாட்டியின் கண்ணீர்க் கதை

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கேரளாவைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரின் மனைவி ஜெயா. தங்கப்பனுக்கும் ஜெயாவுக்கும் வயதாகிவிட்டதால் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் நீண்ட காலமாக தங்கியிருந்தனர். முதுமை காரணமாக தங்கப்பனுக்கு நடக்க முடியாது. மூதாட்டி ஜெயாவுக்கு கண் தெரியாது. அதனால் அவர்களால் பிளாட்பாரத்திலிருந்து நகர முடியாது.

இந்த வயதான தம்பதிமீது இரக்கம் கொண்ட தன்னார்வலர் ஒருவர், தள்ளுவண்டி ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அந்த வண்டியைக் கொண்டு பிழைப்பு நடத்திக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார். வயதான காலத்தில் இந்தத் தம்பதியினருக்கு தள்ளுவண்டியே வீடாக மாறியது. தள்ளுவண்டியிலேயே தங்களின் வாழ்நாள்களைக் கடத்திவந்தனர்.

`இருட்டில் ஒரு விளக்கு; திறந்தால் துர்நாற்றம்!' - சென்னை ஐஐடி பேராசிரியரின் 11 ஆண்டு  துயரக்கதை

இந்தச் சமயத்தில்தான் சில நாள்களுக்கு முன்பு தங்கப்பனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும் அவரின் மனைவி ஜெயா மனமுடைந்துவிட்டார். ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கப்பனை மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். அதனால் தள்ளுவண்டியிலேயே படுத்தபடுக்கையாகக் கிடந்துள்ளார். அவரின் உயிர் பிரிந்ததும் சடலத்தை அடக்கம் செய்யக்கூட முடியாமல் மூதாட்டி ஜெயா தவித்தார். தங்கப்பனுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் ஜெயாவுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தங்கப்பனின் சடலத்தை போலீஸார் ராயப்பேட்டைக்குக் கொண்டுசென்றனர். தங்கப்பனை இழந்த ஜெயா பாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

கண் தெரியாத சூழலிலும் தங்கப்பன் இறந்ததும் அவரின் அருகிலேயே மணிக்கணக்கில் காத்திருந்த ஜெயா பாட்டி, அவ்வழியாகச் செல்பவர்களிடம், 'என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்' என்று கண்ணீர்மல்க கூறியது கல்நெஞ்சையும் கலங்கவைத்தது.

அடுத்த கட்டுரைக்கு