Published:Updated:

எப்படி நிகழ்ந்தது மருத்துவர் கண்ணனின் மரணம்...

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

மர்ம முடிச்சுகள் அவிழுமா?

‘சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர் கண்ணன் எப்படி இறந்தார்?’ ஒட்டுமொத்த தமிழகமும் இந்தக் கேள்விக்கான விடையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு மர்மம் நிறைந்ததாக மாறியிருக்கிறது கண்ணனின் மரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மருத்துவர் கண்ணனின் அண்ணன் விஷ்ணுவரதனிடம் பேசினோம். ``திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைதான் எங்கள் சொந்த ஊர். அப்பா ஹோட்டல் வெச்சிருக்கார். என் தம்பிக்கு சிறுவயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. தீவிரமாகப் படித்து, தன் லட்சியத்தை எட்டிப் பிடித்தான். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் (2013-2019)

எம்.பி.பி.எஸ் படித்து முடித்தான். அடுத்ததாக பி.ஜி-யும் படிக்க வேண்டும் என்றான். குழந்தைகள் நலம் அல்லது மருந்தியல் படிக்கலாம் என நாங்கள் ஆலோசனை சொன்னபோது, ‘குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் நான் ஆர்த்தோ படிக்கிறேன்’ என்றான்.

‘ஆர்த்தோவுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிதான் சரியாக இருக்கும்’ என்று கூறி அதற்காகத் தன்னைத் தயார்படுத்தினான். நீட் தேர்வில் நல்ல மார்க் வாங்கி அவன் ஆசைப்பட்டபடியே கவுன்சலிங்கில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோவை தேர்வு செய்தான். கடந்த ஜூன் 1-ம் தேதிதான் கல்லூரியில் சேர்ந்தான். தினமும் அப்பாவிடமும் அம்மாவிடமும் போனில் பேசிவிடுவான். இதற்கிடையில், அவனுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டு, திருச்சியைச் சேர்ந்த டாக்டர் பெண்ணைப் பேசி முடித்தோம். அவன் சம்மதத்துடன்தான் அதைச் செய்தோம். சென்னைக்குச் சென்ற பிறகு, அந்தப் பெண்ணிடமும் எங்களிடமும் போனில் பேசிவந்தான்.

ஜூலை 19-ம் தேதி இரவுகூட அம்மாவுக்கு போன் செய்து, ‘சாப்பிட்டியாம்மா...’ என்று கேட்டிருக்கிறான். அதன் பிறகுதான் ஹாஸ்டலுக்குச் சென்றுள்ளான். அதிகாலை 4:30 மணிக்கு டியூட்டிக்குச் செல்ல வேண்டும் என்பதால் அலாரம் வைத்துவிட்டுப் படுத்திருக்கிறான். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போன் செய்துள்ளனர். ஆனால், ‘அவன் மாடியிலிருந்து விழுந்ததற்கான சி.சி.டி.வி பதிவுகள் கிடைக்கவில்லை. அதேசமயம் அதிகாலை 1:30 மணியளவில் ஹாஸ்டலுக்குள் நுழையும் காட்சி மட்டும் கிடைத்திருக்கிறது’ என்று போலீஸார் கூறுகின்றனர். முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘உடலில் காயங்கள் உள்ளன. ஆனால், தலையில் எந்தக் காயமும் இல்லை’ என்று கூறியுள்ளனர். இந்தத் தகவல்கள் எங்கள் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகின்றன.

எப்படி நிகழ்ந்தது மருத்துவர் கண்ணனின் மரணம்...

என் தம்பியின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை போலீஸார்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவன் பணிச்சுமை, காதல் தோல்வியால் இறந்துவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏனெனில், மருத்துவப் பணியை அவன் ரொம்பவே லவ் பண்ணினான். பணிச்சுமை இருப்பதாக அவன் சொல்லவும் இல்லை. அவன் பேச்சிலும் அப்படித் தெரியவில்லை. அதேபோல காதல் தோல்வி என்பதற்கும் முகாந்திரமே இல்லை. அவன் காதலித்திருந்தால் நாங்கள் பார்த்திருந்த பெண்ணுடன் ஏன் அவன் மணிக்கணக்கில் பேச வேண்டும்? கல்லூரி நிர்வாகமும், விடுதியில் உள்ளவர்களும் என் தம்பியின் மரணம் குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சமாஜ்வாடி கட்சியின் மாநில நிர்வாகி தாமோதரன் யாதவ், ``டாக்டர் கண்ணனின் மரணம் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. டீன் மற்றும் பேராசிரியர்கள் சிலர் கண்ணன் மரணத்தில் தெளிவான தகவல்களைச் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் கல்விக் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு மருத்துவ மேற்படிப்பு சீட்டுக்கும் 2 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். கண்ணனுக்கு அடுத்து காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பை உருவாக்க அவரின் மரணம் நிகழ்ந்ததா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இரவு 11:30 மணிக்குப் பணி முடிந்து கண்ணன் சென்றுள்ளார். அவரின் அறையில் பிராக்டிகலுக்காகச் செய்து வைத்திருந்த பொருள்கள் சேதமடைந்துள்ளன. அது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டதாக அந்த விடுதியிலிருந்த சில மாணவர்கள் கூறியுள்ளனர். இதைவைத்து நாங்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். கண்ணன் மரணத்துக்காக ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

எப்படி நிகழ்ந்தது மருத்துவர் கண்ணனின் மரணம்...

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``டாக்டர் கண்ணன் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை போலீஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கு பணிச்சுமையையும் குறைக்க வேண்டும்” என்றார்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் சிலர், ``கண்ணனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு படித்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கும் சீனியர்களுக்கும் பிடித்த மாணவனாகவே அவர் இருந்துள்ளார். இந்த ஆண்டுக்காக முதுகலை மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கவுன்சலிங் நடத்த டி.எம்.இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை முதல் கவுன்சலிங்கில் இடம் கிடைக்காதவர் களுக்கு இரண்டாம் கவுன்சலிங்கில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை இரண்டாம் கவுன்சலிங்கில் நேரடியாகவே கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டாக்டர் கண்ணன் உயிரிழந்துவிட்டதால் அதற்கும் கவுன்சலிங் நடத்தப்படும். அந்த சீட்டைக் குறிவைத்து ஏதேனும் நடந்துள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. முதுகலை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை ரேடியாலஜி உள்ளிட்ட சில குறிப்பிட்ட படிப்புகளுக்குத்தான் அதிக போட்டி நிலவும். ஆனால், ஆர்த்தோவுக்கு அந்த அளவுக்குப் போட்டி இருக்காது.

தாமோதரன் யாதவ்
தாமோதரன் யாதவ்

முன்பெல்லாம் வட மாநிலங்களில் முதுகலை மருத்துவப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள் மரணமடைந்தனர். ஆனால், இன்று தமிழகத்திலேயே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது வேதனையளிக்கிறது. முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பணிச்சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அரசு டாக்டர்களுக்கு முதுகலை படிப்புக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு அந்த இட ஒதுக்கீடு இல்லை. அதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதனால் வருங்காலங்களில் தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இவையெல்லாம்கூட மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன” என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் செலக்‌ஷன் கமிட்டியின் செயலாளர் டாக்டர் செல்வராஜிடம் பேசினோம். `` `கோவிட்-19 காரணமாக இந்த முறை முதுகலை மருத்துவப் படிப்புக்காக முதல் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை என்றாலும் இரண்டாவது கவுன்சலிங்கில் பங்கேற்கலாம்’ என அரசு உத்தரவின் படி விதியை மாற்றியுள்ளோம். சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மரணமடைந்த டாக்டர் கண்ணனின் சீட், ஆல் இந்திய மருத்துவ கவுன்சில் கோட்டா. அதனால், தற்போது நடக்கும் தமிழக மருத்துவ கவுன்சில் கவுன்சலிங்கில் அந்த இடத்தை நிரப்ப முடியாது. அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி பெற்றே அந்த இடத்தை நிரப்ப முடியும்” என்றார்.

ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜியிடம் பேசினோம். ``துறைத் தலைவர்கள் ஐந்து பேர் கொண்ட கமிட்டி டாக்டர் கண்ணன் மரணம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர் கோவிட்-19 வார்டில் பணியாற்றியுள்ளார். பணிக்குப் பிறகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந் திருக்கிறார். விசாரணை கமிட்டி அறிக்கை அளித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.

டாக்டர் கண்ணன் மரணத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா?