Published:Updated:

`முல்லைப் பூ பறிக்க முயற்சி செய்தார்.. ஆனால்?' - சென்னை விடுதி சமையலருக்கு நேர்ந்த சோகம்

முல்லைச் செடி
முல்லைச் செடி

சென்னை நொளம்பூரில் பூப்பறிக்கும்போது, 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் 19-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (52). இவர் கன்னியாஸ்திரிகள் தங்கும் இல்லத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி, சமையல் வேலை செய்துவந்தார். கடந்த 7-ம் தேதி வீட்டின் 2-வது மாடிக்குச் சென்றார். அங்குள்ள மொட்டை மாடியில் நின்றபடி முல்லைக் கொடியில் பூக்களைப் பறித்தார். அப்போது ஒரு பூவைப் பறிக்க அந்தோணியம்மாள் முயற்சி செய்தபோது கால் தவறியது. அதனால் மாடியிலிருந்து அவர் கீழே தவறி விழுந்தார்.

அந்தோணியம்மாள்
அந்தோணியம்மாள்
`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

அப்போது திடீர்ச் சத்தம் கேட்டு அங்குள்ளவர்கள் வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அந்தோணியம்மாள், மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அந்தோணியம்மாளின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் அந்தோணியம்மாளின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் எனத் தெரியவந்தது.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``அந்தோணியம்மாள், தினமும் முல்லைப் பூ பறிக்க 2-வது மாடிக்கு வருவார். சம்பவத்தன்று பூப்பறிக்க அந்தோணியம்மாள் மொட்டை மாடிக்கு வந்தார்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

பூக்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போது அவர் ரோட்டில் விழுந்தார். அப்போது வீட்டுக்கு வரும் மின் வயரில் விழுந்ததால் அது அறுந்தது. மின்சாரம் பாய்ந்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம். தவறி விழுந்ததில் அந்தோணியம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு மின்சாரத்தைத் துண்டித்த பிறகே அவரை மீட்டோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்" என்றனர்.

பூப்பறிக்கும்போது 2-வது மாடியிலிருந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு