Published:Updated:

சென்னை: கணவருக்கு 90-வது பிறந்தநாள்! - அதே நாளில் தவறிவிழுந்து இறந்த மனைவி

மரணம்
News
மரணம் ( Representational Image )

கணவரின் 90-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய மனைவி, சமையலறைக்குச் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கணவருக்கு 90-வது பிறந்தநாள்! - அதே நாளில் தவறிவிழுந்து இறந்த மனைவி

கணவரின் 90-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய மனைவி, சமையலறைக்குச் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மரணம்
News
மரணம் ( Representational Image )

சென்னை அண்ணாநகர், என். பிளாக்கைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (90), இவரின் மனைவி மணிமேகலை (80). இந்தத் தம்பதியினருக்கு அனந்தபத்மநாபன் என்ற மகனும் சித்ரா, புவனேஸ்வரி என 2 மகள்களும் உள்ளனர். பார்த்தசாரதி, தன்னுடைய மகன் வீட்டில் மனைவியோடு வசித்துவருகிறார். கடந்த 13-ம் தேதி பார்த்தசாரதிக்கு 90-வது பிறந்தநாள். அதைச் சிறப்பாகக் கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஊரடங்கு என்பதால் குடும்பத்தினருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் பார்த்தசாரதியின் மகள்கள் மற்றும் அவரின் குழந்தைகள் அண்ணாநகருக்கு வந்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழா முடிந்த பிறகு, மணிமேகலை சமையல் அறைக்குச் சென்றபோது திடீரென கால் வழுக்கி கீழே விழுந்து மயங்கினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணிமேகலையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிமேகலை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செவிலியர்

இதுகுறித்து பார்த்தசாரதியின் மகன் அனந்தபத்மநாபன் (49), கடந்த 13-ம் தேதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் என் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என்னுடன் என் தாய், தந்தையும் வசித்து வந்தனர். என் தந்தை பார்த்தசாரதி, ஐசிஎஃப்பில் கிளர்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 90. என் தாயார் மணிமேகலை, தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் செவிலியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 80. இன்று என் தந்தையின் 90-வது பிறந்தநாள். அதற்கு அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். மாலையில் நடந்த பிறந்தநாள் விழாவுக்குப் பிறகு சகோதரிகள் தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பின் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது சமையல் அறைக்கு சென்ற என் தாயார் திடீரென கீழே விழுந்துவிட்டார். என் தாயார் விழுந்த சத்தம் கேட்ட நாங்கள் சென்று பார்த்தோம். பிறகு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். உடனே நாங்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர். என் தாயாரின் சடலத்தை மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர். எனவே, என் தாயாரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கணவரின் 90-வது பிறந்தநாளில் மனைவி, உயிரிழந்த சம்பவம் ஓட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.