Published:Updated:

``மூடப்பட்ட கடை; வறுமையில் வாடிய குடும்பம்"- விபரீத முடிவை எடுத்த சென்னை சலூன் கடைக்காரர்

 சலூன் கடைக்காரர் பரணி
சலூன் கடைக்காரர் பரணி

`கடையை மட்டும் திறக்க அரசு அனுமதியளித்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார்' என்று தற்கொலை செய்துகொண்ட சலூன் கடைக்காரர் பரணியின் மனைவி விஜயலட்சுமி கண்ணீர்மல்க கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முதல் கொரோனா தொற்று அதிகம் இல்லாத மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிக்கடைகள், ஏசி வசதியில்லாத கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதியளிக்கவில்லை. அதனால் சலூன் கடைகளை நடத்திவருபவர்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர்.

வருமானமின்றி என் குடும்பம் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வந்தோம். அதனால்தான் என் கணவர் பரணி, கடைக்குச் சென்றார். மனவேதனையில் இருந்த அவர், கடைக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். கடையை மட்டும் திறக்க அரசு அனுமதியளித்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார்.
பரணியின் மனைவி விஜயலட்சுமி
தற்கொலை
தற்கொலை

சென்னை தரமணியில் சலூன் கடைக்காரர் பரணி, வருமானம் இல்லாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவரின் அம்மா லட்சுமி தரமணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் தரமணி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர் கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இவர் தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். நான் வீட்டு வேலை செய்துவருகிறேன். என் கணவர் சுப்பிரமணியன், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். என் 2-வது மகன் பரணி (35). அவருக்குத் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நான், என் மகன் பரணி வீட்டில் வசித்துவருகிறேன். என் மகன் பரணி தரமணி எம்.ஜி.ஆர் சாலையில் சலூன் கடை நடத்திவந்தார்.

பரணியின் மனைவி விஜயலட்சுமி
பரணியின் மனைவி விஜயலட்சுமி
`90 வீடியோக்கள்; கொரோனாவுக்கு மருந்து!' -சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சிக்கிய கதை

என் மகனுக்கு அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தோம். இந்த நிலையில், என் மகன் பரணி 5.5.2020-ம் தேதி காலை 9 மணிக்கு கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். கடைக்குச் சென்று வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அதனால் அவன் கடை வைத்திருக்கும் சலூன் கடைக்குச் சென்றேன்.

அங்கு ஷட்டர் பாதி மூடிய நிலையில் இருந்தது. நான் உடனே அருகில் கடை வைத்திருக்கும் ஒருவரின் உதவியோடு ஷட்டரை திறந்து பார்த்தேன். அப்போது என் மகன் பரணி, கடையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். பின்னர் என் மகனின் சடலத்தை கீழே இறக்கி பார்த்தபோது அவன் இறந்தது தெரியவந்தது. எனவே, என் மகனின் இறப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து சடலத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் தரமணி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

இதுகுறித்து பரணியின் மனைவி விஜயலட்சுமி கூறுகையில், ``எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் பரணி, சலூன் கடை நடத்திவந்தார். ஊரடங்கு காரணமாக சலூன் கடையைத் திறக்க முடியவில்லை. மே 3-ம் தேதிக்குப்பிறகு சலூன் கடையைத் திறக்க அனுமதியளிப்பார்கள் என என் கணவர் நம்பிக்கையில் இருந்தார். ஆனால் கடை திறக்க அனுமதியளிக்கவில்லை. அதனால் வருமானமின்றி என் குடும்பம் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வந்தோம். அதனால்தான் என் கணவர் பரணி, கடைக்குச் சென்றார். மனவேதனையில் இருந்த அவர், கடைக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். கடையை மட்டும் திறக்க அரசு அனுமதியளித்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார். என் 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை" என்றார் கண்ணீர்மல்க.

அடுத்த கட்டுரைக்கு