Published:Updated:

“சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னவன், சாப்பிடாமலே போயிட்டானே...”

காசிபிரசாத் உடல் அடக்கத்தின்போது
பிரீமியம் ஸ்டோரி
காசிபிரசாத் உடல் அடக்கத்தின்போது

பிஞ்சுகளின் உயிர் குடிக்கும் டிப்தீரியா

“சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னவன், சாப்பிடாமலே போயிட்டானே...”

பிஞ்சுகளின் உயிர் குடிக்கும் டிப்தீரியா

Published:Updated:
காசிபிரசாத் உடல் அடக்கத்தின்போது
பிரீமியம் ஸ்டோரி
காசிபிரசாத் உடல் அடக்கத்தின்போது

சம்பவம் ஒன்று...

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா உருளிக்குட்டை மலைக்கிராமத்தைச் சேர்ந்த பசுவண்ணா - வெள்ளையம்மா தம்பதியரின் 10 வயது மகன் மாதப்பனுக்கு, திடீரென்று தொண்டை வலி. பிறகு அது வீக்கமாக மாறி, சாப்பிடவிடாமல் அவஸ்தைப்படுத்த… ஜூன் 16-ம் தேதி, மாதப்பனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக் கிறார் தந்தை பசுவண்ணா. மருத்துவப் பரிசோதனையில் டிப்தீரியா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோகச் சொல்லியிருக்கின்றனர். கோவையில் இரண்டு நாள் அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலம் சற்று தேறிய மாதப்பன், ஜூன் 19-ம் தேதி காலை பரிதாபமாக இறந்துபோனான்.

சம்பவம் இரண்டு...

ஈரோடு, கடம்பூர் மலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்த அழகன் - செல்வி தம்பதியரின் 10 வயது மகன் காசிபிரசாத். லேசான தொண்டை வலியில் ஆரம்பித்து, மூச்சு விட முடியாத அளவுக்கு காசிபிரசாத்துக்குச் சிரமத்தைக் கொடுக்க, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஓடியிருக்கின்றனர். அங்கிருந்து கோவை ஜி.ஹெச்-க்கு அனுப்பப்பட, சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘சிறுவன் உயிர் பிழைப்பது சிரமம்தான்’ எனக் கைவிரித்திருக்கின்றனர். எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் அழகனும் செல்வியும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டுசென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல், டிப்தீரியாவுக்குப் பலியானான் காசிபிரசாத்.

காசிபிரசாத், மாதப்பன்
காசிபிரசாத், மாதப்பன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இந்த இரண்டு அதிர்ச்சிகளிலிருந்து மீள்வதற்குள், அதே பகுதிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டிப்தீரியா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் அந்தக் குழந்தைகள் உயிர் பிழைத்துவிட வேண்டும் என்கிற தீராத பதற்றம், ஒவ்வொரு நொடியும் அவர்களின் பெற்றோர்களை வதைக்கிறது. இது தொற்றக்கூடியது என்பதால், ‘அது தங்கள் குழந்தையையும் தாக்கிவிடுமோ!’ என்ற அச்சத்தில், இரண்டு மரணங்கள் நிகழ்ந்த பகுதியில் உள்ளவர்கள் அத்தனை பேரும் மிரண்டுபோயிருக்கின்றனர்.

`டிப்தீரியா... நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் கொடிய பாதிப்பு. `தொண்டை அடைப்பான்’ எனத் தமிழில் அழைக்கப்படும் இது, 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தைப் பெரிய அளவில் அச்சுறுத்தியது. இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும் உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என ஈரோடு கலெக்டருக்கு, பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.எல்.சுந்தரம் ‘உஷார்’ கடிதம் அனுப்பினார். ஆனால், அது ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்பட வில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மருத்துவ ஆவணங்களைக் காட்டும் அழகன் தம்பதி
மருத்துவ ஆவணங்களைக் காட்டும் அழகன் தம்பதி

டிப்தீரியா பாதிப்புக்குள்ளான மலைக் கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டோம். டிப்தீரியாவுக்குப் பலியான மாதப்பனின் தந்தை பசுவண்ணாவுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ‘‘ ‘சாப்பிடவே முடியல, தொண்டை வலிக்குது’ன்னு அழுதான். `கோயம்புத்தூருக்கு அழைச்சுட்டுப் போனாதான் பிள்ளைய காப்பாத்த முடியும்’னு சொல்லிட்டாங்க. கோயம்புத்தூர்ல கொடுத்த டிரீட்மென்ட்ல கொஞ்சம் கொஞ்சமா தேறி வந்தான். ‘எப்போப்பா வீட்டுக்குப் போவோம்? எனக்கு சாப்பாடு சாப்பிடணும்போல ஆசையா இருக்கு’னு சொன்னான். நல்லா பேசுறான், நம்ம புள்ள பொழைச்சுக்குவான்னு நினைச்சோம். ஆனா, ‘உங்க பையன் செத்துட்டான்’னு சொல்லி எங்க கையில சடலமா கொடுப்பாங்கன்னு கனவிலும் நினைக்கலைங்க’’ என்றபடி அழுதார்.

குடும்பத்தினருடன் பசுவண்ணா
குடும்பத்தினருடன் பசுவண்ணா

காசிபிரசாத்தின் தந்தை அழகனைச் சந்தித்தோம். ‘‘எங்க ஊருக்கு ரோடு வசதி இல்லை. மலையிலிருத்து கீழ வரை 12 கி.மீ காட்டுல எம்மகனை தோள்லயே தூக்கிட்டு வந்துதான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். சத்தியமங்கலத்திலும் கோயம்புத்தூர்லயும் `பையனைக் காப்பாத்துறது கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. மெட்ராஸ்லயாவது என் பையனைப் பொழைக்கவெச்சிட மாட்டாங் களான்னு எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமா கொண்டுபோனோம். அங்க போன கொஞ்ச நேரத்துலேயே எம்மகன் இறந்துட்டான். தோள்ல தூக்கிட்டுப் போனவனைப் பொணமாத்தான் ஊருக்குக் கொண்டுவந்தோம். ‘தடுப்பூசி போடாததாலத்தான் என் பையன் செத்துட்டான்’னு டாக்டர் சொல்றாரு. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் போட்டிருக்கோம். அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. என் பையன் ஏன் செத்தாங்கிற உண்மையை இந்த அரசு சொல்லியே ஆகணும்’’ என்று மன்றாடுகிறார்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க ஈரோடு மாவட்டப் பொறுப்பாளரான மோகன்குமார், ‘‘கேரளாவிலிருந்து சினிமா படப்பிடிப் புக்கு வந்தவர்களிடமிருந்து இந்தப் பாதிப்பு பரவியிருக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். மாதப்பன் பலியான போதே, அரசு தீவிரமாகக் களத்தில் இறங்கி குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகளைப் போட்டிருந்தால், காசிபிரசாத்தைக் காப்பாற்றியிருக்கலாம். மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதில் அரசு மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டு. இந்த நோயைக் கட்டுப் படுத்த அரசு தீவிரமாகச் செயல்படுவதோடு, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்குரிய நிவாரணத்தையும் வழங்க வேண்டும்’’ என்றார்.

டிப்தீரியா பாதிப்பால் கடந்த வருடமே இரண்டு குழந்தைகள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டன. ஏழு குழந்தைகளுக்கு நோயின் அறிகுறி இருந்தது தெரியவந்து சிகிச்சை அளித்து அனுப்பியிருக்கின்றனர். இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை யின் இயக்குநர் ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ‘‘கடந்த ஆண்டு இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது உண்மைதான். ஆனால், இந்த ஆண்டு அப்படியான இறப்புகள் எதுவும் இங்கு இல்லை’’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த காசிபிரசாத், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவச் சீட்டு ஆதாரங்கள் இருக்கும்போது, இந்த ஆண்டு டிப்தீரியாவால் மரணமே ஏற்படவில்லை என்று ஜெயச்சந்திரன் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? அதேபோல, தடுப்பூசி போடாததால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து சொல்கின்றனர். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளுக்கும் முறையாகத் தடுப்பூசிகள் போட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அப்படியென்றால், குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளின் தரத்தில் குறைபாடு இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

விஜயபாஸ்கர், மோகன்குமார்
விஜயபாஸ்கர், மோகன்குமார்

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். ‘‘அதுமாதிரி நமக்கு எந்தத் தகவலும் இல்லையே... நான் வேலூர் தேர்தல் பிரசாரத்தில் இருக்கேன். செக் பண்ணிட்டு லைன்ல வர்றேன்’’ என்றவர், சிறிது நேரத்தில் தொடர்புகொண்டு, ‘‘12 குழந்தைகளும், 11 பெரியவர்களும் டிப்தீரியா பாதிப்பு அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, நலமுடன் இருக்கிறார்கள். ஈரோடு பகுதியில் 1,30,000 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போட்டிருக்கிறோம். சென்னையில் ஒரு சிலருக்கு டிப்தீரியா பாதிப்பு இருக்கிறது. ஒரு குழுவை அமைத்து, இந்தப் பாதிப்பு எப்படிப் பரவியது என்பது குறித்து ஆராய இருக்கிறோம். டிப்தீரியாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விசாரித்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்றார்.

வரும்முன் காப்போம்!

டிப்தீரியா... அறிகுறிகள் என்னென்ன?

காய்ச்சல் வரும். தொண்டை வலிக்கும். இருமல், சளித்தொல்லை தரும். சளியில் ரத்தம் வெளியேறும். கழுத்தில் இரண்டு பக்கங்களிலும் நெறிகட்டும். அடுத்த சில நாள்களில் தொண்டையில் கறுவெள்ளை நிறத்தில் சவ்வு உருவாகும். இதைத் தொட்டாலே ரத்தம் கொப்புளிக்கும். இந்தச் சவ்வு வளர வளர, தொண்டையை அடைக்கும். நோயாளி, உணவை விழுங்கச் சிரமப்படுவார். மூச்சுவிட முடியாது. இதில் உள்ள கிருமிகள் ஒருவித நச்சுப்பொருளை உற்பத்திசெய்து ரத்தத்தில் கலக்கும். இந்த நஞ்சு, இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளைச் சிதைக்கும். உயிருக்கு ஆபத்து நேரும்.

- பொதுநல மருத்துவர் கு.கணேசன்

(ஜூ.வி - 31.7.2019 இதழிலிருந்து...)

அசோகன்
அசோகன்

‘‘தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை!’’

கோவை அரசு மருத்துவமனை முதல்வர், டாக்டர் அசோகனிடம் பேசினோம். ‘‘டிப்தீரியா பாதிப்புள்ள அனைவருக்கும் டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் குறைந்தாலும், 15 நாளில் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பாதிப்பாளர்களுக்குத் தனி வார்டு ஒதுக்கி சிகிச்சையளித்து வருகிறோம். பல்ஸ் குறைவதற்கு வாய்ப்புள்ளதால், தொடர்ந்து மருத்துவர் குழுக் கண்காணிப்பில் உள்ளனர். கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆண்டுக்கு 300 பேர் இதன் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அந்த அளவுக்குப் பாதிப்பில்லை’’ என்றார்.

- இரா.குருபிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism