Published:Updated:

`6 நாள் தனிமை; இரண்டு முறை மட்டுமே உணவு!'- கொரோனா வைரஸால் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

சிறுவன் யான் செங்
சிறுவன் யான் செங்

வீட்டில் யாரும் இல்லாததால் சிறுவன் செங்-கை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு சியாவோவனும் அவரது மூத்த மகனும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425-ஐ நெருங்கிவிட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,438 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் மற்றுமொரு சோகச் சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உள்ள ஹூபே மாகாணத்தை அடுத்த ஹுவாஜியாஹே நகரத்தைச் சேர்ந்தவர் யான் சியாவோவன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் யான் செங் (16) சிறுவயது முதலே பெருமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா
கொரோனா

அதனால், அவரால் எங்கும் எழுந்து நடக்கமுடியாது என்பதால் வீல்சேரிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த வாரம் சியாவோவன் மற்றும் அவரது மூத்த மகனுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் சிறுவன் செங்-கை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு சியாவோவனும் அவரது மூத்த மகனும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். வுஹானிலிருந்து ஹுவாஜியா நகரத்துக்குச் சென்று சிகிச்சை எடுத்துள்ளனர். இதற்கிடையே சிகிச்சை முடிந்து ஆறுநாள்கள் கழித்து சியாவோவன் வீடு திரும்பும்போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

`சீனாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறோம்!’ - கொரோனா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன?

பராமரிக்க வீட்டில் யாரும் இல்லாமல் தனிமைப்பட்டு இருந்த செங், சியாவோவன் வீடு திரும்பும்போது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் தவித்த சிறுவன் செங், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் இரண்டு முறை மட்டுமே சிறுவனுக்கு உணவு கொடுக்கப்பட்டதாக சீன உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே சியாவோவன் தனது மகன் தனித்து இருப்பதையும் அவனது உடல்நிலை குறித்து சீன சமூக ஊடகமான வெய்போவில் பதிவிட்டு, மகனைப் பராமரிக்க உதவுமாறு அரசுக்குக் கோரிக்கையும் விடுத்திருந்தார். இந்தப் பதிவு பல நபர்களால் ஷேர் செய்யப்பட்டு அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

கொரோனா
கொரோனா

இதுதவிர உள்ளூர் அதிகாரிகள், கிராம மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடமும் சியாவோவன் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுவனைக் கவனிப்பதற்கு யாரும் வரவில்லை. இதனால் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தபிறகு சீனக் கம்யூனிச அரசு, அக்கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹுவாஜியாஹே நகர மேயர் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உள்ளூர் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் வு செங்டாவோ . அதில், ``உள்ளூர் அதிகாரிகள் முறையற்றதாகவும் நம்பத்தகாதவிதத்திலும் செயல்பட்டு வருகின்றனர்.

சீனாவில் கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தை! - நெகிழ்ந்த மருத்துவக் குழு

தவறான வேலை, திருப்தியற்ற பணி மற்றும் கட்டுப்பாட்டுப் பொறுப்புகளைப் போதுமான அளவில் செயல்படுத்தாததால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்திய நாள்களில், எங்கள் கிராமக் குழு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குறைவாக இருந்தனர். ஆனால், பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பினும், யாரும் அவரைக் கவனித்துக்கொள்ளவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இது தொடக்கத்திலிருந்தே தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது ஒரு சோகமாக மாறியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட போது மனம் உடைந்தது" என்று கூறியுள்ளார்.

சிறுவன் யான் செங்
சிறுவன் யான் செங்

சிறுவனின் மரணம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடினமான நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவி தேவைப்படும் குடும்பங்களை கவனித்துக்கொள்வதற்கும் உதவுவதற்கும் உள்ளூர் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்றும் சீன அரசுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறை?

சீனாவில் நாளுக்குநாள் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே செல்வதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 64 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறையும் காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேநேரம் தங்கள் நாட்டுக்குத் தேவையான மருத்துவ முகமூடிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என மற்ற நாடுகளுக்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்
அடுத்த கட்டுரைக்கு